Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாகிஸ்தான் உலக அமைதிக்கு ஆபத்தான நாடு : ஒபாமா

பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் உலக அமைதிக்கு ஆபத்தான நாடுகள் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

பாகிஸ்தான் தூதர் நியமனம்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான அமெரிக்க தூதராக ரிச்சர்டு ஹோல்புரூக் நியமிக்கப்பட்டார். அவர் வெளிநாட்டு இலாகா துணை மந்திரியாக இருந்தவர் ஆவார். அவர் பெயரை தூதராக ஒபாமா அறிவித்தார். அப்போது வெளிநாட்டு இலாகா மந்திரி ஹிலாரி கிளிண்டன் அங்கு இருந்தார். அப்போது தான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பற்றிய எச்சரிக்கையை ஒபாமா விடுத்தார். வெளிநாட்டு இலாகா அதிகாரிகள் மத்தியில் ஒபாமா கூறியதாவது:-

தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் முக்கியமான களங்களாக இருக்கின்றன. அந்த நாடுகளில் நிலைமை மோசமாகி வருகிறது. இது உலக அமைதிக்கு மிகப்பெரிய ஆபத்தாகவும், அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. அந்த நாடுகள் உலகத்துக்கு பேராபத்தாக விளங்கி வருகின்றன. இந்த இருநாடுகளின் பிரச்சினைக்கு தனியாக தீர்வுகாண முடியாது. இதற்கு பிராந்திய அளவில் தான் தீர்வு காணவேண்டும்.

தீவிர கவனம்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலவி வரும் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தும். அந்த பகுதிகளில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை புத்திசாலித்தனமாக செலவிடுவோம். இதற்காகத்தான் அந்த பிராந்தியம் தொடர்பான நம் கொள்கையை மிகக்கவனமாக மறுபரிசீலனை செய்து வருகிறோம்.

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்களை வைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா, தலீபான் ஆகியோருடன் எதிர்த்து போரிடவேண்டும் என்பது புத்திசாலித்தனமானது அல்ல. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்களுக்காக நம் செயல்பாட்டு எல்லையை விரிவுபடுத்தாதவரை அமைதி காணமுடியாது. இந்த பிரதேசத்தில் தீவிரவாத பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணமுடியாது.

நீண்டகாலம் பிடிக்கும்

அந்த பிரதேசத்தில் உள்ள நாடுகளுடன் இணைந்து போராடித்தான் தீவிரவாத பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நிலைமை மோசமாக இருக்கிறது என்பதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட கால அவகாசம் அதிகம் ஆகும். ஆப்கானிஸ்தானில் வன்முறைகள் அதிகரித்து உள்ளது. கஞ்சா வியாபாரம் ஆப்கானிஸ்தானில் தான் உலகிலேயே பெரிய அளவில் நடக்கிறது.

இவ்வாறு ஒபாமா கூறினார்.

Exit mobile version