தமிழ் மக்கள் இன்று பேரவலம் ஒன்றின் நடுவே சிக்குண்டு கிடக்கின்றனர். இந்த அவலம் எவ்வாறு நேர்ந்தது என்பதற்கான தெளிவான, நம்பகமான விடைகள் தேவைப்படுகின்றன. தமிழ் மக்கள் தமது உரிமைகட்கான போராட்டத்தைத் தொடர்வதானால் அதன் இலக்கும் அதற்கான பாதையும் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். இதுவரை நடந்தவை பற்றிய நேர்மையான ஒரு மதிப்பீட்டின் துணையின்றி எதிர்காலத்தைப் பற்றிய பயனுள்ள எந்த முடிவுக்கும் வர இயலாது. நம்பகமான எந்த மதிப்பீடும் அவசர அவசரமாகச் செயக்கூடியதல்ல. எனவே, நமக்கு முன்னே வைக்கப்படுகின்ற அவசரத் தீர்வுகள் எந்தக் கேள்விகட்கும் விடை தேடாமல் முன்வைக்கப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. அதற்கும் மேலாக, அவை எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் கவலைப்பட வேண்டியுமுள்ளது. தவிர்க்க இயலாமலே முன்வைக்கப்படுகின்ற தீர்வுகளின் பின்னாலுள்ள நோக்கங்கள் பற்றிய ஐயங்கள், தீர்வுகள் முன்வைக்கப்படுகிற வேகத்துடனேயே சேர்ந்து எழுகின்றன.
விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டால் மட்டுமே தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீரும் என்று தலையில் அடித்துச் சத்தியஞ் செயாத குறையாக நமக்குச் சொன்னவர்கள் இருக்கிறார்கள். அவர்களிற் சிலர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அழிக்கப்பட்டால் மட்டுமே தீர்வு ஒன்று ஏற்படும் என்று சொன்னார்கள். சொன்ன எவராலுமே தீர்வுக்கான ஒரு சிறிய சாடை கூடத் தெரிகிறதாகக் கூற இயலவில்லை. அதைவிட, அவர்கள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த தீர்வு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று அறிந்து அவ்வாறு உறுதி கூறினார்கள் என்று நாம் நம்புவதற்கான ஒரு நியாயமும் இல்லை. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை அடுத்து அவர்கள் ஆரவாரஞ் செதார்கள். அதற்கு மேல் அவர்களாற் புதிதாக எதையும் சொல்ல இயலவில்லை. தமிழ் மக்களின் உரிமைகட்கான போராட்டம் இன ஒடுக்கலுக்கெதிரான போராட்டமாக வளர்ச்சி பெற்றது. அது பிரிவினைக்கான போராட்டமாகவும் வடிவு பெற்றது. சட்ட ரீதியானதும் அமைதி வழியிலானதுமான போராட்டம் சட்ட விரோதமானதும் ஆயுதமேந்தியதுமாக மாற்றமடைந்தது. எனினும், அது எந்த நிலையிலும் ஒரு மக்கள் போராட்டமாக விருத்தி பெறவில்லை. எனவேதான் தங்கள் மீது பழி விழாத விதமாகச் சிலரால் நமக்கு முன்னால் வைக்கப்படுகிற எந்த விளக்கமும் செல்லாததாகிவிடுகிறது. விடுதலைப் புலிகளின் பங்கிற் பெருந்தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன என்பதை விடுதலைப் புலிகளின் புலம்பெயர்ந்த முகவர்கள் எனப்படுவோர் ஏற்கின்றனர். அவர்களுடைய ஆதரவாளர்கள் எனப்படுவோர் ஏற்கின்றனர். என்றாலும் அவை என்னென்ன தவறுகள் என்று அவர்களில் எவ ருமே தெளிவாக எடுத்துரைத்துள் ளதாக எனக்குத் தெரியாது. அதைவிட, அவற்றைப் பற்றி அவர்களிடையே மதிப்பீடுகள் இருந்தாலும் அம் மதிப்பீடுகள் பற்றிய உடன்பாடு இல்லை.
தமிழீழத்துக்காகப் போராடுவதாக வாக்குறுதியளித்து மக்களின் வாக்குகளைப் பெற்ற ஒரு தலைமையின் பெரும் பகுதி நம்முடன் இல்லை. அவர்களில் இயற்கையான சாவையும் செயற்கையான சாவையும் பெற்றவர்கள் போக, எஞ்சிய சிலர் இருக்கிறார்கள். அவர்கள் 1976ஆம் ஆண்டு எடுத்த ஒரு தீர்மானத்தைப் பயன்படுத்தி தமது அரசியலை முப்பது ஆண்டுகளாக நடத்தினார்கள். தாங்கள் என்றுமே அந்தத் தீர்மானத்தை எடுக்கவில்லை என்று இப்போது சொல்கிறார்கள். அவர்கள் அந்தத் தீர்மானத்தை அந்தரங்க சுத்தியுடன் நிறைவேற்ற முயலவில்லை என்று பலர் அவர்களை நிராகரித்தார்கள். தாம் அதை வெல்வோமென்று கூறி ஆயுதமேந்தினார்கள். தமது கடந்தகாலம் பற்றிப் பேச அவர்களிற் பலர் ஆயத்தமாக இல்லை. இன்றைய அவலத்துக்கு அவர்கட்கும் பலவழிகளில் ஒரு பெரும் பங்குண்டு. ஆனால், அதைப் பற்றிப் பேசுவதற்கு அவர்களில் யாருமே தயாராக இல்லை. விடுதலைப் புலிகள் மீது குற்றங்கள் அனைத்தையும் சுமத்துவது பலருக்கு வசதியாக இருக்கிறது.
விடுதலைப் புலிகள் அடுக்கடுக்காகத் தோல்விகளைச் சந்தித்து வந்த சில மாதங்களில் அவர்கள் ஏன் தங்களது போர் முறையை மாற்றவில்லை என்ற கேள்வி எழுகிறது. இத்தகைய தோல்விகள் தம்மை எங்கே கொண்டுபோ விடும் என்று அவர்களால் உணர முடியவில்லையா? அவர்களில் ஒரு பகுதியினரின் அழிவைத் தவிர்த்திருக்க இயலாதா? அனைத்திலும் முக்கியமாக இருபதாயிரம் அளவிலானோர் எனப்படும் பொதுமக்களின் சாவைத் தவிர்த்திருக்க இயலாதா? அதைவிட அதிகமானோர் அங்கவீனர்களாவதைத் தவிர்த்திருக்க முடியாதா? இரண்டரை லட்சம் பேரின் இடப்பெயர்வைத் தவிர்த்திருக்க முடியாதா? முற்றாக அனைத்தையும் தவிர்ப்பது இயலாமலிருந்திருக்கலாம். ஏனெனில்,எல்லாமே முன்பு சிலர் நம்பவிரும்பியது போல, அவர்களுடைய கையில் இருக்கவில்லை. ஆனாலும் எளிதிற் தட்டிக்கழிக்க இயலாத கேள்விகள் உள்ளன. அத் தவறுகள் நேர்வதற்குத் தவறான தகவல்களும் தவறான திசை காட்டல்களுங் காரணமாயிருந்தனவா என்ற கேள்வி எழுகிறது. அதில் நியாயமும் உள்ளது.
அவ்வாறான தவறான தகவல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தால், அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் யார்? அவர்கள் ஏன் அவ்வாறு நடந்து கொண்டனர்? அவர்களை அவ்வாறு நடக்கத் தூண்டிய சூழல் எது? அந்தச் சூழல் எப்படி உருவானது? அது திட்டமிட்டே உருவாக்கப்பட்டதா? திட்டமிட்டே உருவாக்கப்பட்டது என்றால் அத் திட்டத்தின் பின்னால் இருந்த சக்திகள் எவை? இப்படியாக அடுக்கடுக்காகப் பல கேள்விகள் உருவாக இடமுண்டு. அவ்வாறான கேள்விகட்கு வாக்கு வந்தபடி மறுமொழிகளை வழங்க இயலும். அவற்றைத் திசை திருப்பிவிட இயலும். அனைத்தும் நடந்து முடிந்த காரியங்கள் என்பதால், அவைபற்றி மேற்கொண்டு பேச வேண்டியதில்லை என்று தட்டிக்கழிக்கவும் இயலும்.
அவற்றையெல்லாம் மறந்துவிட்டுப் புதிதாகத் தொடங்குவோம் என்று சொல்லுவது, அவற்றைப்போன்ற தவறுகள் மீண்டும் நிகழ வாப்பளிக்கும். அவற்றைவிட மோசமான தவறுகள் நிகழவும் வாப்பளிக்கும். எனவேதான், மறக்கவும் பேசாதிருக்கவும் ஏற்றவை என்று எவையும் விலக்கப்படக்கூடாது. ஆனால் கேள்விகளின் நோக்கங்கள் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். கேள்விகள் எவ்வாறு எழுப்பப்படுகின்றன என்பது பற்றிய கவனம் இருக்க வேண்டும். தவறுகள் எவை என்று தெரிய வேண்டும். அவை ஏன், எவ்வாறு நடந்தன என்று தெரிய வேண்டும். தவறுகட்கு பொறுப்பானவர்கள் என்று சிலரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது எளிது. ஆனால், அது நாம் அறிய வேண்டிய அடிப்படையான உண்மைகளை நமக்குச் சொல்லாது. எனவேதான், தவறுகளையும் அவற்றுக்குரிய காரணங்களையும் வழிநடத்திய தவறான சிந்தனைகளையும் அறிவது கடந்தகாலத் தவறுகளை விளங்கவும் விளக்கவும் இயலாமல் அவற்றை மறந்து போக வேண்டும் என்று சொல்லுபவர்களிடம் நாம் மிக எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அவர்களிடம் தமிழ் மக்களின் விடுதலைக்கான பொறுப்பை முற்றாக ஒப்படைக்க முடியுமா? அதிற் பகுதியையேனும் ஒப்படைக்க முடியுமா? எந்தெந்தத் தவறுகளை விசாரிப்பதைத் தவிர்க்க அவர்கள் முயலுகிறார்களோ அவை அனைத்தும் மீளவும் நடந்தேறலாம். மேலும் புதிய தவறுகளுங்கூட நடந்தேறலாம்.
கடந்தகாலத்தை விளக்கமுடியாமல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற தனி மனிதர்களை நான் இலக்கு வைத்துப் பேசவில்லை. கடந்த காலத்தை மறக்கச் சொல்லி, மீண்டும் தொடங்குகிற பேரில் பழைய தவறுகளின் அடிச்சுவட்டிற் தொடருகிற அபாயகரமான ஒரு போக்கைப் பற்றியே பேசுகிறேன். இவ்விதமான போக்கு, விடுதலைப் புலிகள் விட்ட இடத்திலிருந்து தொடருகிற பேரிலும் முன்னெடுக்கப்படலாம். அவர்களை முற்றாகவே நிராகரிக்கிற பேரிலும் நடைபெறலாம். எனவேதான் இது எல்லாவற்றைப் பற்றியும் பேசவேண்டிய வேளையாகிறது.
எதிர்காலத்தைப் பற்றிப் பேசுகிற ஆர்வத்தில் நிகழ்காலம் பற்றி முற்றாக மறந்துவிடுகிறோமே. அது மிகவும் ஆபத்தானதுமட்டுமல்ல. ஈவிரக்கமற்றதும் கொடுமையானதுமாகும். சில ஆயிரம் பேர்கள் மட்டுமே விடுதலைப் புலிகளின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அவர்களிற் பெரும் பகுதியினர் கொல்லப்பட்டுள்ளனர். மற்றோர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். ஏகப் பெரும்பாலானோர் கட்டாயத்தின் பேரிலேயே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வந்தனர் என்று சொல்லப்பட்டது. விடுதலைப் புலிகள் இந்த நாட்டில் ஒரு அமைப்பாகச் செயற்பட இயலாத ஒரு நிலை வந்துள்ளது. உண்மையென அதை ஏற்கிறவர்கள் பலர் அரசாங்கத்தின் தரப்பில் உள்ளனர். அவர்களுக்கு முன்னால் ஒரு கடமை உண்டு. அப்பாவிகளான மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக அவர்கள் தம்மாலானதைச் செய வேண்டும். அது மட்டுமன்றி அரசாங்கக் கட்சியில் உள்ள தங்களது நண்பர்களிடம் அதை எடுத்துரைத்து விளக்கமளிக்க வேண்டும். அப்படிச் செவார்களானால் அது அவர்களைப் பற்றிய நல்லெண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும்.
விருந்தினருக்கு உணவைப் பரிமாறுவதற்காகக் கையை நீட்டிப் பழக்கப்பட்டவர்கள் உணவைப் பெறுவதற்காகக் கைநீட்டி மணிக் கணக்காக நாளாந்தம் வரிசையில் நிற்கிற அவலம் தொடரக்கூடாது. குற்றமெதுவுமே செயாமற் படுகாயமுற்றும் அங்கவீனமுற்றும் இருக்கிற பல்லாயிரக்கணக்கானோரின் இயல்பு வாழ்வை முற்றாக மீட்டெடுக்க இயலாமலிருக்கலாம். ஆனால், இரந்துங் கெஞ்சியும் அயலார் தயவில் வாழுகிற அவலத்தினின்று அவர்களை மீட்டுத் தன்மானமுள்ள சுய உழைப்பில் தங்கியுள்ள மனிதர்களாக மீட்டெடுக்க இயலும். அது அரசாங்கத்தினதும் முழுச் சமூகத்தினதுங் கடமை. எனவே நாளை வரப்போகிற ஒரு தீர்வைப் பற்றிய புனைவுகளைச் சற்று ஒதுக்கிவைத்து இன்று கண்முன்னுள்ள பாரியதொரு பிரச்சினையைப் பற்றி எல்லாருங் கொஞ்சங் கவனிப்போமா?
மூலம்:Thinakkural.