Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களுக்குப் பின்னால் உயர்மட்ட ஆதரவுக் கரங்கள் : சி. கா. செந்திவேல்

senthilvelமுஸ்லீம் மக்களின் பள்ளிவாசல்கள் மீது பௌத்த அடிப்படைவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நீண்ட நிகழ்ச்சி நிரலின் ஒருபகுதியாகவே கடந்த பத்தாம் திகதி கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதி மக்களின் வீடுகள் கடைகள் உடைக்கப்பட்டும் உள்ளதுடன் முஸ்லீம் மக்களில் சிலர் படுகாயங்களும் அடைந்துள்ளனர். இவ்வாறான பள்ளிவாசல்கள் மீது தொடரும் தாக்குதல்களுக்குப் பின்னால் இன்றைய ஆட்சியினரின் உயர்மட்ட ஆதரவுக் கரங்கள் இருந்து வருவதாகவே நம்பப்படுகிறது. எனவே மேற்படி தாக்குதல் சம்பவத்தையும் அதன் மூலம் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டுள்ள பதற்ற நிலையையும் எமது புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அதே வேளை கடந்த முதலாம் திகதி வெலிவேரியாவில் சிங்கள மக்கள் மீது நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலின் எதிர்ப்பு அலையை திசை திருப்புவதற்கு கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் நடைபெற்றுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல்க் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி. கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில், இன்றைய சூழலில் ஆட்சி அதிகாரத்தில் இருப்போரும் அந்நிய சக்திகளும் இனங்கள், மதங்களிடையே பகைமையை வளர்த்து மோதல்களாக்கிக் கொள்வதன் ஊடாகத் தமது ஆட்சி அதிகார இருப்பையும் தத்தமது நலன்களையும் பாதுகாத்து வருகின்றனர். அதற்குரிய இனவாத மதவாத அமைப்புக்களை உருவாக்கி உணவூட்டி வருவதுடன் அவற்றின் ஆதரவுப் பின்தளமாகவும் இருந்து வருகின்றனர். இதனை அண்மைக் காலமாக நடாத்தப்பட்டு வந்த இருபத்தைந்துக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் மீதான பௌத்த அடிப்படைவாதிகளினதும் அவர்களினது அமைப்புக்களினதும் கேடுகெட்ட செயல்கள் நிரூபித்துள்ளன. மேலும் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட வன்முறைக் கும்பலின் செயற்பாடு தகுந்ததோர் உதாரணமாகும். அரசாங்கம் இத்தாக்குதலுக்கும் முன்னைய தாக்குதல்களுக்கும் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என நம்ப இடமில்லை. அதே போன்று முஸ்லீம் கட்சிகளின் தலைமைகளும் உறுதியான செயற்பாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனவே முஸ்லீம் மக்கள் ஏனைய சிங்கள தமிழ் மக்களோடு இணைந்து தமக்கான நீதியும் நியாயமும் வேண்டி ஐக்கியப்பட்ட மக்கள் நடவடிக்கைகளுக்கு முன்வரல் வேண்டும் என்பதையே எமது கட்சி வலியுறுத்துகிறது.

சி. கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்.

Exit mobile version