இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல்க் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி. கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில், இன்றைய சூழலில் ஆட்சி அதிகாரத்தில் இருப்போரும் அந்நிய சக்திகளும் இனங்கள், மதங்களிடையே பகைமையை வளர்த்து மோதல்களாக்கிக் கொள்வதன் ஊடாகத் தமது ஆட்சி அதிகார இருப்பையும் தத்தமது நலன்களையும் பாதுகாத்து வருகின்றனர். அதற்குரிய இனவாத மதவாத அமைப்புக்களை உருவாக்கி உணவூட்டி வருவதுடன் அவற்றின் ஆதரவுப் பின்தளமாகவும் இருந்து வருகின்றனர். இதனை அண்மைக் காலமாக நடாத்தப்பட்டு வந்த இருபத்தைந்துக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் மீதான பௌத்த அடிப்படைவாதிகளினதும் அவர்களினது அமைப்புக்களினதும் கேடுகெட்ட செயல்கள் நிரூபித்துள்ளன. மேலும் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட வன்முறைக் கும்பலின் செயற்பாடு தகுந்ததோர் உதாரணமாகும். அரசாங்கம் இத்தாக்குதலுக்கும் முன்னைய தாக்குதல்களுக்கும் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என நம்ப இடமில்லை. அதே போன்று முஸ்லீம் கட்சிகளின் தலைமைகளும் உறுதியான செயற்பாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனவே முஸ்லீம் மக்கள் ஏனைய சிங்கள தமிழ் மக்களோடு இணைந்து தமக்கான நீதியும் நியாயமும் வேண்டி ஐக்கியப்பட்ட மக்கள் நடவடிக்கைகளுக்கு முன்வரல் வேண்டும் என்பதையே எமது கட்சி வலியுறுத்துகிறது.
சி. கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்.