தமிழருக்கு எவ்விதத்திலும் பிரயோசனம் அற்ற 13 வது திருத்தத்தினையா முழுமையாக அமுல்ப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்கின்றோம்?
கடந்த 19 ம் திகதி கரைச்சி (கிளிநொச்சி) பிரதேச சபை மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களது ஏற்பாட்டில் “ஐனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு” நடைபெற்றது.
அதில் “அதிகாரப் பகிர்வூடாக இனப்பிரச்சினைக்கான தீர்வு?” என்னும் தலைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களும், “தேசியப் பிரச்சினையும் 13வது அரசியலமைப்புத் திருத்தமும்” தொடர்பில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் அவர்களும், இனப்பிரச்சினையும் மனித உரிமைகளும்” தொடர்பில் கே.தயாபரன் அவர்களும் உரையாற்றியிருந்தனர்.
அத்துடன் இந்த விடயங்கள் தொடர்பாக அங்கு சமூகமளித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களும் உரையாற்றியிருந்தார். இந்த நிகழ்வில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகவும் விசேடமாக “அதிகாரப்பகிர்வு” ஊடாக “சுயநிர்ணய உரிமையை” அடைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பாகவும் பேச்சாளர்களால் முன்வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் பற்றி எமது கவனத்தைச் செலுத்தவதே இப்பத்தியின் நோக்கமாகும்.
கடந்த பத்திகளில் தத்துவ ரீதியாகவும், சட்டரீதியான கோணத்திலும் இவ்விடயங்களை ஆராய்ந்திருந்தேன். எனினும் கிளிநொச்சி மாநாட்டில் இந்த விடயங்கள் மையப்பொருளாக வாதாடப்பட்டமையால் நாம் மீண்டும் இவ்விடயங்களை நோக்கி எமது கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக முதலில் உரையாற்றிய சுமந்திரன் அவர்கள் அவரது உரையில் தமிழ் இனம் இலங்கைத் தீவில் ஓர் தேசமாக தமக்கென ஒரு நிலப்பரப்பில் காலம் காலமாக வாழ்ந்து வந்தவர்கள் என்ற விடயம் பற்றியும், அவ்வகையானதொரு தமிழ் பாரம்பரியத்திற்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கின்ற அங்கீகாரம் குறிப்பாக இலங்கைத் தீவில் வாழும் தமிழர் சர்வதேச சட்டத்தின்படி சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்றதொரு தெளிவான விளக்கத்தையும் கூறியிருந்தார்.
சுயநிர்ணய உரிமையை இன்றைக்கு எப்படி தமிழ் இனம் பிரயோகிக்கலாம் என்பதனைப் பற்றியும் விளக்கினார். குறிப்பாக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஓர் தனிநாடாகவும் இருக்கலாம் அதேபோன்று தமிழர் சிங்களவர்களுடன் சுயநிர்ணய உரிமையை பிரயோகிக்கும் வகையில் ஒரு பொது நாட்டுக்குள் வாழலாம் என்றும் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு கருத்துக்களை முன்வைத்து இறுதியில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
சுயநிர்ணய உரிமையை எப்படி அனுபவிப்பது என்று அவர் கேள்வியெழுப்புகின்றார். தனியாகப் பிரிந்து ஒருநாடாக உபயோகிப்பதா? அல்லது இருக்கின்ற ஒரு நாட்டுக்குள்ளேயே ஆட்சி அதிகாரங்களை உபயோகிப்பதா? தனியாகப் பிரிந்து ஒருநாட்டை உருவாக்குதன் மூலம் மட்டுமேதான் சுயநிர்ணயத்தை அடையலாம் என்று சர்வதேச சட்டம் கூறவில்லை.
ஒருநாட்டுக்குள் இருக்கும் ஆட்சியதிகாரங்களை உபயோகிப்பதன் மூலமும், அதற்கான ஓர் முறையை உருவாக்குதன் மூலமும் சுயநிர்ணய உரிமையை அனுபவிக்க முடியும் என்று சர்வதேச சட்டம் கூறுகின்றது. அப்படியாக செய்கின்றபோது அதனை அதிகாரப்பகிர்வு என்று வர்ணிக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றார். ஒரு நாடாக இருக்கின்ற காரணத்தினால் சில அதிகாரங்கள் மத்திக்கு மட்டும் உரியதாக இருக்கும்.
அதாவது ஏற்கனவே இருக்கின்ற அதிகாரங்களை மத்திக்கும் பிரதேசங்களுக்கும் இடையில் பகிர்ந்துகொள்வது என்ற அடிப்படையிலான கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஆகையினாலே, அதிகாரப்பகிர்வு மூலம் சுயநிர்ணய உரிமையை உள்ளகமாக (ஒருநாட்டுக்குள்) பிரயோகிக்கலாம் என்பது சர்வதேச சட்டத்தின் ஓர் நியதியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடத்தில்த்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை தவறாக வழிநடத்துகின்றது.
சுயநிர்ணய உரிமையை நடைமுறையில் தனிநாடு ஒன்றை உருவாக்குவதன் மூலம் மட்டும்தான் அனுபவிக்கலாம் என்று சர்வதேச சட்டங்கள் எதிலும் கூறப்படவில்லை. அதேவேளை, ஏற்கனவே நடைமுறையில் உள்ள நாடொன்றினுள் மட்டுமேதான் சுயநிர்ணய உரிமை பிரயோகிக்கப்படல் வேண்டுமென்றும் எந்தவொரு சர்வதேச சட்டத்திலும் கூறப்படவில்லை.
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தேசங்கள் இணைந்து அதேவேளை தத்தமது தனித்துவமான சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய வகையில் ஒருநாட்டை அமைப்பதன் மூலமும் சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதற்கும் சர்வதேச சட்டம் இடமளிக்கின்றது.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினரோ ஒரு நாட்டுக்குள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தேசங்கள் தங்களது தனித்தனி சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பது என்பது “அதிகாரப்பகிர்வு” என்ற செயன்முறையூடாகவே நடைபெறுகின்றது என கூற முற்படுகின்றனர்.
ஒரு நாட்டுக்குள் சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதனை அதிகாரப்பகிர்வு என்று வரையறுப்பது முற்றிலும் தவறான கருத்தாகும். அதிகாரப்பகிர்வு என்பது வேறு சுயநிர்ணய உரிமை என்பது வேறு. சுயநிர்ணய உரிமை என்பது ஒருதேசத்து மக்களின் பிறப்புரிமை. அந்த மக்கள் தமது தலைவிதியை தீர்மானிப்பதற்கு உரித்துடையவர்கள்.
சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு கோருவது ஒரு தேசத்தின் ஆட்சி அதிகாரத்தினை முற்றுமுழுதாக கோருவதாக அமையும். ஆனால், அது தனிநாடு என்பது அர்த்தமல்ல. அவ்வாறு அங்கீகாரம் கிடைக்கும்போது, அந்தத் தேசம் தமக்குள்ள அதிகாரத்தின்(இறைமை) சில பகுதிகளை விட்டுக்கொடுக்க, ஒருநாட்டுக்குள் வாழவேண்டிய மற்றைய தேசமும் தமது அதிகாரத்தின்(இறைமை) பகுதிகளை விட்டுக்கொடுத்து பொது “மத்திய” அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதன் மூலம், ஒவ்வொரு தேசங்களும் தமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கும் வகையில் ஒருநாட்டுக்குள் வாழ முடிகின்றது. இந்த செயன்முறை அதிகாரப்பகிர்வு அல்ல.
தமிழ்த் தேசத்தினையும் சிங்கள தேசத்தினையும் எடுத்துக் கொண்டால் தமிழ்த் தேசத்திற்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இருக்கக் கூடிய அதிகாரங்களில் சிங்கள தேசத்துடன் பேசி என்ன என்ன அதிகாரங்களை நாம் ஒவ்வொருவரும் விட்டுக்கொடுத்து, அதனூடாக ஓர் “மத்திய” அரசாங்கத்தை உருவாக்கப்போக்கின்றோம் என்பதே எமக்குரிய ஒரே தெரிவாகும்.
அதிகாரப்பகிர்வு என்ற அடிப்படையில் தமிழர்களாகிய நாம் தீர்வை காணப்போகின்றோம் என்றால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சிறீலங்கா அரசுடைய அதிகாரத்தில் ஒரு பங்கை நாம் கேட்டு பெறுவதாக அமையும். அதாவது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் ஏற்கனவே இருகக் கூடிய சிறீலங்கா அரசு முழுமையாக சிங்கள தேசத்தின் ஆதிக்கத்தின் கீழேயே உள்ளது.
அந்த வகையில் அவ்வகையானதொரு அரசினுடைய அதிகாரத்தில் ஒருபங்கைக் கேட்டுப் பகிர்ந்து கொள்வதே அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் தீர்வை காணுதலாகும். அதிகாரப்பகிர்வு என்ற அடிப்படையில் தீர்வு காண முயல்வது, ஏற்கனவே சிங்கள தேசத்திடமுள்ள அதிகாரத்தை கேட்டுப்பெறுவதன் மூலம் அரசை உருவாக்குவதாக அமையும்.
ஆனால், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வுகாண்பதாக இருந்தால், சுயமாக அதிகாரத்தை கொண்டிருப்பவர்கள் அதிகாரத்தின் சில பகுதிகளை சிங்கள தேசத்துடன் கூட்டுவதன் மூலம் அரசை உருவாக்குவதாக அமையும்;. இந்த இரண்டு செயன்முறையும் ஒன்றுக்கொன்று நேரெதிரானது.
ஆகவே, அதிகாரப்பகிர்வு எனக் கூறிக்கொண்டு சுயநிர்ணய உரிமையை அடையமுடியாதென்பது மட்டுமல்ல, சுயநிர்ணய உரிமையை நாமாகவே விரும்பி கைவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம்.
சிலரைப் பொறுத்தவரையில் ஒரு நாட்டுக்குள் எமது பிரதேசத்தில் எம்மை நாமே நிர்வகிப்பதற்கான அதிகாரம்; கிடைத்தால் போதுமென கருதுகின்றனர். ஆனால், அந்த அதிகாரம் கேட்டுப்பெறுகின்ற வழிமுறையூடாக கிடைக்குமாகவிருந்தால், அந்த அதிகாரத்தை வழங்குபவர்கள் தாம் விரும்பும் எந்தவொரு சந்தர்பத்திலும், எமது சம்மதமின்றியே திரும்ப பறித்துக்கொள்ள முடியும்.
கேட்டுப்பெறும்(அதிகாரப்பகிர்வு) பொறிமுறைக்கு நாம் சம்மதித்தால், அதிகாரத்தை பகிர்ந்து தருபவர்கள்(சிங்கள அரசு) அதனை எந்தநேரத்திலும் மீளப் பறித்துக் கொள்வதற்கான அதிகாத்தையும் உரிமையையும் நாமாகவே அங்கீகரிப்பதாக அமையும். இதனால்தான், நாமே எமது சுயநிர்ணய உரிமையை தாரைவார்த்து கொடுப்பதாக அமையும் எனக் கூறுகின்றோம்.
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எட்டப்படும் தீர்வானது சிங்கள தேசத்திற்கும் தமிழர் தேசத்திற்கும் இடையில் எட்டப்படும் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே அமையும். அவ்வாறு எட்டப்படும் இணக்கப்பாடானது சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்துடன் எட்டப்படல் வேண்டும்.
இவ்விணக்கப்பாட்டினை சிங்கள தேசம் ஒருதலைப்பட்சமாகவும் தமிழ் மக்களின் நலன்களை நசுக்கும் விதமாகவும் மீறினால் தமிழ் மக்கள் தமது பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தனியாக பிரிந்து செல்ல முடியும் என்பதை சர்வதேச ஒழுங்குகள் அங்கீகரிக்கின்றன.
இந்த அங்கீகாரமானது சுயநிர்ணய உரிமை அடிப்படையில் எட்டப்படும் அத்தகைய இணக்கப்பாட்டை பேணிப்பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தினை சிங்கள தேசத்திற்கு உணர்த்தும். எனவே தமிழர் தேசம் தனியாகப் பிரிந்து செல்வதனை தவிர்ப்பதற்காகவேனும் இவ்விணக்கப்பாட்டை பேணிப் பாதுகாக்க வேண்டிய நிற்பந்தம் சிங்கள தேசத்திற்கு உருவாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிளநொச்சியில் தாம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் தமது கருத்துக்களுடாக தமிழ் மக்களை தவறாக வழிநடத்த முற்பட்டனர். எனினும் அந்த கருத்தரங்கில் கருத்துரை வழங்கிய யாழ்பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் அவர்கள் மேற்படி கூட்டமைப்பினரது உரையில் காணப்பட்ட தவறான கருத்துக்களையும் கொள்கைவிளக்கங்களையும் சுட்டிக்காட்டி சரியான கருத்துக்களை மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் ஆணித்தரமாகவும் விளக்கியிருந்தமை வரவேற்கத்தக்கது.
அதற்கும் மேலதிகமாக குருபரன் அவர்களுக்கு கருத்துரை வழங்குவதற்காக வழங்கப்பட்டிருந்த தலைப்பின் கீழ் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தினடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் தொடர்பாக அவருடைய கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
சுருக்கமாகக் கூறுவதாயின் அந்தக் கருத்துக்கள் 13வது திருத்தத்தினையும் மாகாண சபைகளையும் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தியிருந்தது. இறுதியில் தனது உரையை நிறைவு செய்யும்போது தமிழருக்கு எவ்வித பிரயோசனமும் இல்லாத இந்த 13 வது திருத்தத்தினையா முழுமையாக அமுல்ப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்கின்றோம் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அது மட்டுமன்றி ஏற்கனவேயுள்ள இந்த 13 திருத்தம் மற்றும் மாகாண சபைகளை “பிரயோசனம்” கொடுக்கக் கூடிய வகையில் மாற்றியமைக்க முடியாது என்பதனையும் ஆணித்தரமாகக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அவரது கருத்துக்களை செவிமடுத்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆத்திரமடைந்து அந்தப் 13வது திருத்தச் சட்டத்தினை நியாயப்படுத்த முற்பட்டனர். அதிகாரப் பகிர்வைவிடவும் மிகவும் குறைந்ததான அதிகாரப் பரவலாக்கல் அடிப்படையில் உருவான 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை குருபரன் அவர்கள் முற்றாக நிராகரித்து கருத்துரையாற்றியபோது கூட்டமைப்பினர் ஆத்திரமடைந்தமைக்கு காரணம் என்ன? அந்தக் கேள்விக்கான பதிலை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் ஆத்திரத்தில் எழுந்து தெரிவித்த கருத்தொன்றிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
அதாவது நாங்கள் 13 வது திருத்தச் சட்டத்தினை 1987 ஆம் ஆண்டிலிருந்தே நிராகரித்து வருகின்றோம். இது சம்பந்தமாக ராஜீவ்காந்திக்கு அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் ஆகியோருடன் நானும் கையொப்பமிட்டு எழுதிய கடிதத்தில் 13வது திருத்தச் சட்டத்தினை நாம் ஏன் நிராகரிக்கின்றோம் என்பதனை தெளிவாக விளக்கியிருந்தோம் என்று திரு. சம்பந்தன் கூறினார்.
மறுபுறத்தில் அவர் கூறுகின்றார் நாம் ஒருவிடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் அதாவது குழந்தையை குளிப்பாட்டிய தண்ணீரை வீசும்போது தண்ணீருடன் குழந்தையையும் சேர்த்து வீசக்கூடாது என்றும் கூறியுள்ளார். அதாவது 13 வது திருத்தத்தில் குறைபாடுகள் இருக்கலாம், அதில் எமது அபிலாசைகள் அங்கீகரிக்கப்படாமல் இருக்கலாம் ஆனால் அதற்காக அதை நாம் முற்றுமுழுதாக நிராகரிக்கக் கூடாதென்றும் நியாயப்படுத்த முற்பட்டார்.
13ஆவது திருத்தத்தை நிராகரிக்கின்றோம், ஆனால் தந்திரோபாயக் காரணங்களுக்காக அதனை நிறைவேற்றக் கோருகின்றோம் எனக் கூறும் கூட்டமைப்பினர் 13ஆவது திருத்த்தின் நன்மைகளை மெச்சிப் பேச வேண்டிய அவசியம் என்ன? அது வீசி எறியப்படாதக் கூடாத குழந்தை என வர்ணிப்பதேன்? 13ஆவது திருத்தம் தொடர்பாக கூட்டமைப்பினர் கொண்டுள்ள நிலைப்பாட்டின் இரட்டைத்தன்மையையே இது காட்டுகின்றது.
மகிந்த ராஜபக்க்ஷவால் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை உலகிற்கு காட்டவே தாம் அதனைத் தந்திரோபாயக் காரணங்களுக்காக நடைமுறைப்படுத்துமாறு கோருகின்றோம் என்று சொல்லிக் கொண்டு 13ஆவது திருத்ததிற்குள் எமது அரசியல் பயணத்தை முடக்கி விடக் கூட்டமைப்பினர் முயற்சிக்கின்றனர் என்பது இவர்களது இந்த இரட்டை நிலைப்பாட்டில் இருந்து தெளிவாகின்றது.
கூட்டமைப்பினர் தமது உரை முழுவதிலும் 13ஆம் திருத்தச் சட்டம் பற்றி எதுவும் குறிப்பிடாமல் அதிகாரப்பகிர்வு, சுயநிர்ணய உரிமை, இறைமை என்ற விடயங்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் தாம் 13ம் திருத்தச் சட்டத்தினடிப்படையில் தீர்வைப் பெறமுயலவில்லை என மக்களை நம்பவைக்க முயன்றனர்.
அவ்வாறு மக்களை ஏமாற்ற அவர்கள் முயன்று கொண்டிருந்த நிலையில் குருபரன் அவர்கள் 13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றாக நிராகரித்து கருத்துரையாற்றியபோது கூட்டமைப்பினர் தம்மை அறியாமலேயே ஆத்திரமடைந்து கொதித்தெழுந்து 13ஆம் திருத்தச் சட்டத்தினை நியாயப்படுத்த வேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஆயினும் கூட்டமைப்பினர் ஆத்திரத்தில் வெளியிட்ட கருத்துக்கள் அவர்கள் அரசியலமைப்பின் 13ம் திருத்தச் சட்டத்தினடிப்படையிலேயே அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர் என்ற உண்மையான நிகழ்ச்சிநிரலை அம்பலமாக்கியுள்ளது. இந்தச் செய்தியை வெளிக் கொண்டு வந்தமைக்காகக் கிளிநொச்சி மகாநாட்டிற்குத் தமிழினம் நன்றிக்கடன் பட்டுள்ளது.
– யாருடைய அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது?– கேட்டுப் பெற்றால் , அதை மீண்டும் பறித்துக் கொள்வார்கள்.முதலில் நாம் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.சிங்களம் சொல்வது, அதிகாரப் பரவலாக்கமே தவிர அதிகாரப் பகிர்வல்ல.13 வது திருத்தச் சட்டமும், அதன் குழந்தையான [சம்பந்தரின் மொழியில்] மாகாண சபையும், சிங்கள இறைமையின் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவில்லை.காணி மற்றும் காவல்துறை உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோமென சிங்களம் விடாப்பிடியாக இருப்பதிலிருந்து இந்த வேறுபாட்டினை தெரிந்து கொள்ளலாம்.
அத்தோடு , மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் அதிகார பலமும் மாகாணசபையில் முதன்மை பெறுகிறது.இந்நிலையில் 13 திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோமென பல தடவைகள் கூறிய சம்பந்தர் அவர்கள், இப்போது ஏன் தடுமாறுகின்றார்?நாம், ‘ஒரு இறைமையுள்ள தேசம்’ [ Sovereign Nation ] என்கிற, அடிப்படை நிலைப்பாட்டில் இருந்தால் மட்டுமே, எமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என வாதிடலாம்.எமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு எனக் கூறிக் கொண்டு, சிங்களம் தரும் அதிகாரங்களை நாம் பெற்றுக் கொள்வோமெனக் கூறினால், எமது பிறப்புரிமையான இறைமையை நாமே மறுப்பது போலாகிவிடும்.தாயகத் தமிழ் மக்களுக்கும் , சிங்களத்திற்கும் இடையே உள்ள பிரதான முரண்பாடு இதுதான்.
அதாவது முழு இலங்கைக்குமான இறைமை சிங்கள தேசத்திற்கு உரியது என்கிறது சிங்களம்.
அவர்கள் எமது தாயகக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்றுக்கொண்டால், தனித்துவமான தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையை ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். ஆகவே இதில் எந்த விட்டுக் கொடுப்புக்களையும் சிங்களம் அனுமதிக்கப்போவதில்லை.திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், மற்றும் நிலப்பறிப்பின் ஊடாக தாயக்கோட்பாட்டை சிதைப்பதுதான் சிங்களத்தின் முதன்மையான நிகழ்ச்சி நிரல்.ஆகவே நிரந்தரமான தீர்வு என்பது, இறைமையுள்ள இரு தேசங்கள் என்பதன் அடிப்படையிலிருந்து உருவாக்கப்படவேண்டும்.அவர்கள் தருவதையே நாம் பெற வேண்டுமென முடிவெடுத்தால், தாயகம், சுயநிர்ணய உரிமை, என்கிற கோஷங்கள் தேவையில்லை.அதற்கு சர்வ தேசச் சட்டங்களை துணைக்கு அழைக்க வேண்டிய அவசியமுமில்லை.சிங்களம் எதையும் தர உடன்படாது என்பதை சர்வ தேசத்திற்கு நிரூபிப்பதற்கு, புதிய தந்திரோபாயங்களும் தேவையில்லை.பண்ட-செல்வா, டட்லி- செல்வா உடன்படிக்கைகள் ஊடாக பல தந்திரோபாயங்களை நாம் பரீட்சித்துப் பார்த்து விட்டோம்.எத்தனை காலத்திற்குத்தான் இவர்கள் ஒன்றையும் தரமாட்டார்கள் என்று சர்வதேசத்திற்கு நிரூபிப்பது?-இதயச்சந்திரன்