பல்கலை மாணவர்கள் மீதான அரச வன்முறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு அழைக்கின்றோம்.
முள்ளிவாய்க்காலுடன் தமிழினத்தின் உரிமைப்போராட்டத்திற்கு முடிவுரை எழுதிவிட்டதாக நினைத்த சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் உணர்வெழுச்சி கண்டு அதனை இரும்புக் கரம் கொண்டு அடக்க முனைகின்றது. தமிழ்த்; தேசிய போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் வகிபாகம் முக்கியமானதும் பிரித்தறிய முடியாததுமாகும். யாழ் பல்கலைக்கழக சமூகத்தினை அடக்கி ஒடுக்க அரச இயந்திரம் முயற்சிப்பது தமிழ்த்; தேசிய அரசியலுக்கு அவர்கள் செய்துவரும் பங்களிப்பை இல்லாது ஒழிக்கும் நோக்கிலேயே. யாழ் பல்கலைக்கழக மாணவர்களை இலக்குவைத்து தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்குவதன் மூலம் அவர்களை மௌனிக்கச் செய்யலாம் என அரச இயந்திரம் கற்பனை காண்கின்றது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அணிதிரளுகின்றபோதுதான் பல்கலைக்கழக மாணவர்களது பாதுகாப்பை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் பாதுகாப்பையும் தமிழ்த்; தேசத்தின் இருப்பையும் உறுதிப்படுத்த முடியும் என்ற யதார்த்தப் புறநிலையுணர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் கண்டன ஆர்ப்பாட்டமொன்றினை ஏற்பாடு செய்துள்ளோம். எமது இத்தகைய போராட்டங்களுக்கு ஆதரவாகவும், இத்தகைய போராட்டங்களை சர்வதேச மயப்படுத்துமுகமாகவும் புலம்பெயர் தமிழ் உறவுகள் குறிப்பாக இளையோர்கள் தாம் வாழும் நாடுகளில் இத்தகைய போராட்டங்களை சமகாலத்தில் முன்னெடுக்க வேண்டுமென்றும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் தமிழ் இளையோர் அப்பல்கலைக்கழகங்களின் கவனயீர்ப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் அன்போடும் உரிமையோடும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
யாழ் நகரில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இடம்:- யாழ் பஸ் நிலையம் முன்பாக உள்ள சோமசுந்தரப்புலவர் சிலையருகில்
நேரம்:- செவ்வாயக்கிழமை (2012-12-04) காலை 11.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை