பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சக மாணவர்களை விடுதலை செய்யும் வரை கற்கைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்று தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர்களும் கடந்த நவம்பர் 29ம் திகதி முதல் வகுப்புக்களைப் பகிஷ்கரித்து வந்தனர்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தை மீள இயக்கும் முயற்சியில் படைத்தரப்பின் பின்னணியோடு பல்கலைக்கழக நிர்வாகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அனைத்துப் பீடாதிபதிகளை அழைத்த துணைவேந்தர் பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பதன் மூலமே அவர்களது விடுதலையை விரைவுபடுத்த முடியும் என்று துணைவேந்தர் பீடாதிபதிகளுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் இன்று காலையில் கலைப்பீட மாணவர்கள் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது தொடங்கப்படுவது குறித்து தர்க்கங்கள் பல இடம்பெற்றன.
இறுதியில் ஜனவரி 14ம் திகதி வரை நிலைமைகளை அவதானித்து அதன் பின் ஆரம்பிப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் மருத்துவ பீடாதிபதியின் முயற்சியினால் மருத்துவ பீட மாணவர்களுக்கான விரிவுரைகள் கடந்த வாரம் முதல் மீள ஆரம்பித்துள்ளன.
தற்போது கலைப்பீடம், விஞ்ஞான பீடங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்களும், மாணவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவித்த பின்னரே கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்ற போதிலும்,
வணிக முகாமைத்துவ பீடம் மற்றும் விவசாய பீடம் ஆகியன விரிவுரைகளைத் தொடங்க வேண்டும் என்பதில் முனைப்புக்காட்டி வருகின்றன