Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திறந்த பல்கலைக்கழகத்தின் ஹட்டன் கற்கை நிலையம் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தில் இருந்து நீக்கப்படும் உயர் கல்வி அமைச்சு உறுதி

hattonதிறந்த பல்கலைக்கழகத்தின் ஹட்டன் நிலையமானது 2002ஆம் ஆண்டு முதல் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இயங்கி வந்தமை பல்கலைக்கழகத்தின் சுயாதீனதிற்கு ஏற்றதல்ல என்பதை ஏற்றுக் கொண்ட உயர் கல்வி அமைச்சு அதனை உடனடியாக சுயாதீனமாக இயங்கங்கூடிய வகையில் புதிய இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. மலையக மாணவர்கள் திறந்த பல்கலைக்கழக கல்வியை அணுகுவதில் உள்ள பிரச்சினைகளை மையப்படுத்தி பெருந்தோட்ட நடவடிக்கைக் குழு உயர் கல்வி அமைச்சுக்கு ஆவணம் ஒன்றை சமர்ப்பித்து கலந்துரையாடிய போதே குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டது. குறித்த ஆவணத்தை பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு சார்பாக அதன் இணை இணைப்பாளர் சட்டத்தரணி இ. தம்பையா 10.02.2015 அன்று ‘மலையக மாணவர்களின் உயர் கல்வியும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையங்கள் மற்றும் கற்கை நிலையங்களின் தேவையும்’ என்ற தலைப்பில் சமர்ப்பித்திருந்தார். அதனை கீழே காண்க.

மலையக மாணவர்களின் உயர் கல்வியும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையங்கள் மற்றும் கற்கை நிலையங்களின் தேவையும்
பின்னணி

மலையக மாணவர்கள் உயர் அல்லது பல்கலைக்கழக கல்வியை ‘தாமதித்து ஆரம்பித்தவர்கள்’ (‘டயவந ளவயசவநசள’) என்ற காரணத்தினாலும் பொதுவாக பாடசாலைக் கல்வியில் நிலவும் பின்னடைவு காரணமாகவும் (மனித வளத்தில் காணப்படும் எண்ணிக்கை மற்றும் பண்பு அடிப்படையிலான குறைபாடுகள் மற்றும் பௌதீக போதாமைகள்) பல தசாப்பதங்களாக பாடசாலை உயர் கல்வியை (யுஃடு) வழங்கும் ஏனைய பாடசாலைகளுடன் போட்டியிட்டு தற்போது நிலவும் தகுதி அடிப்படை (அநசவை டியளந), மாவட்ட அடிப்படையிலான நுழைவு முறையில் மலையக மக்கள் நியாயமான வீதத்தில் தேசிய பல்கலைக்கழத்துக் நுழைய முடியாதவர்களாக காணப்படுகின்றனர். தற்போது ஒரு வருடத்திற்கு பல்கலைக்கழகத்துக்கு சேர்த்துக் கொள்ளப்படும் 28900 பேரில் மலையக மாணவர்களில் வெறும் 120-150 பேர் வரையிலேயே நுழைவு பெறுகின்றனர். அதாவது 7 வீதம் என்று உரித்துடைய தமது இன வீதாசாரத்திற்கும் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற முடியாதுள்ளனர். பல்கலைக்கழக நுழைவில் முன்னேற்றம் காணப்படுகின்ற போதும் அது மந்த கதியிலேயே நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றது. அந்த முன்னேற்றம் விஞ்ஞான கற்கைகளிலும் மிகவும் மந்த கதியிலேயே நிகழ்கின்றது.

மேற்குறித்த காரணிகள் மற்றும் உயர் கல்வி பெறுபவர்களில் பெரும்பான்மையினர் மீண்டும் மலையக சமூகத்தின் கல்வி விருத்திக்கு நேரடியாக உள்வாங்கப்படுவதற்கான சூழ்நிலை இன்மை காரணமாக மலையக மக்களின் தேசிய பல்கலைக்கழக நுழைவு மற்றும் ஏனைய உயர் கல்வி வாய்ப்புகள் ஒரு நச்சு வட்டத்திலேயே இருக்கின்றது.

இந்த நச்சு வட்டத்தை உடைப்பதற்கான வழிகளில் மலையகத்தில் உள்ள பாடசாலைக் கல்வியை மனித மற்றும் பௌதீக வளங்களை அதிகரித்தல் அவசியமாகும். அத்தோடு மலையக மக்களில் பின்தங்கிய நிலைமையை கருத்திற் கொண்டு உயர் கல்வியை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்புடைய நடவடிக்கைகள் அல்லது நேர்கணிய பாகுபாட்டுக் கொள்கை கடைபிடிக்கப்பட வேண்டும்.

இதனை மேற்கொள்ளும் அதேவேளை பொதுவாக இலங்கையில் தேசிய பல்கலைக்கழக நுழைவுக்கு அப்பால் உயர் கல்வியை வழங்கும் திறந்த பல்கலைக்கழகத்தை மலையக மக்கள் முழுமையாக அணுகும் வகையில் தாபிக்கப்படுதல் அவசிமானதும் அவசரமானதுமாகும்.

மலையக மாணவர்கள் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படாத விடத்து தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் உயர் கல்வியை பெறுவதற்குரிய பொருளாதார வசதியின்மை மற்றும் இன்று வெளிவாரி பட்டப் படிப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்ற நிலைமை என்பன உயர்கல்வியைப் பெற விரும்பும் மலையக மாணவர்களின் தேவையை உறுதி செய்யக்கூடிய உயர்கல்வி நிறுவனமாக திறந்த பல்கலைக்கழகமே காணப்படுகிறது. குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்ட எவரும், அதாவது சாதாரண தரம் சித்தியடையாதவர்கள் கூட திறந்த பல்கலைக்கழகத்தின் அடிப்படை தகைமை பூர்த்தி செய்து சான்றிதழ், டிப்ளோமா, பட்டம், பட்டப் பின்படிப்பு என்று பல்வேறு துறைகளில் கற்கையை தொடர வாய்ப்புள்ளமையானது கல்வி வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மலையக மக்களின் கல்வி, சமூக வளர்ச்சிக்கு வாய்ப்பான அம்சமாக நோக்கத்தக்கதாகும்.

திறந்த பல்கலைக்கழகக் கல்வியை மலையக மக்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ள போதும் அவை பாரிய குறைபாடுகளையும் போதாமைகளையும் கொண்டிருக்கின்றமையினால் மலையக மக்களின் திறந்த பல்கலைக்கழகம் வழங்கக்கூடிய உயர்கல்வியை வினைத்திறனாக வழங்க முடியாதுள்ளது.

திறந்த பல்கலைக்கழகமும் மலையக மக்களும்

இலங்கை திறந்த பல்கலைக்கழகமானது 06 பிராந்திய நிலையங்களையும் 18 கற்கை நிலையங்களையும் (ளுவரனல ஊநவெநச) 06 கற்பித்தல் நிலையங்களையும் (வுநயஉhiபெ ஊநவெநச) கொண்டு இயங்கி வருகின்றது. சான்றிதழ் கற்கைகளுக்கு செல்லக்கூடிய அடிப்படைக் கற்கைகள், டிப்ளோமாக்கள், பட்டப் படிப்புகள் மற்றும் பட்ட பின்படிப்புகள் இதனூடாக வழங்கப்படுவதுடன் சமூக விஞ்ஞானம், மொழிகள், சட்டம், முகாமைத்துவம், இயற்கை விஞ்ஞானம், பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் கல்வியியல் ஆகிய துறைகளில் 65 கற்கைகள் காணப்படுகின்றன. மலையக மக்கள் மத்திய, ஊவா, சபரகமுவ ஆகிய மாகாணங்களில் செறிவாக வாழ்ந்து வருகின்ற நிலையில் 06 பிராந்திய நிலையங்களில் புவியியல் ரீதியாக கண்டி பிராந்திய நிலையமானது மத்திய மாகணத்தில் உள்ள மலையக மாணவர்களுக்கு அணுகக் கூடியதாக இருப்பதாக கொள்ளலாம். எனினும் நுவரெலியா மாவட்டத்திற்கும் கண்டி பிராந்திய நிலையத்திற்கும் இடையிலான தூரத்தைக் கருத்திற் கொண்டு ஹட்டன் நகரத்தில் கற்கை நிலையம் ஒன்றும் நுவரெலியா நரகத்தில் கற்பித்தல் நிலையம் ஒன்றும் தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஊவா மாகாண மலையக மக்களுக்கு அணுகக்கூடியதாக பண்டாரவளை கற்கை நிலையத்தையும் சபரகமுவ மாகாண மலையக மக்களுக்கு அணுகக்கூடியதாக இரத்தினபுரி கற்கை நிலையத்தையும் காணலாம்.

இவ்வாறு மலையக மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையம் ஒன்றும், கற்கை நிலையங்கள் மூன்றும், ஒரு கற்பித்தல் நிலையமும் காணப்படுகின்ற போதும் அவை மலையக மாணவர்களின் உயர் கல்வி அபிலாசைகளை பூர்த்தி செய்வதில் பல குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றன.

கண்டி பிராந்திய நிலையம் :- ஹட்டன் நிலையத்தில் வழங்கப்படும் கற்கைகளுக்கு மேலாக இங்கு சட்டமும் தமிழ் மொழியில் கற்பிக்கப்படுகிறது. இப் பிராந்திய நிலையத்தினூடாக கண்டி, மற்றும் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த மலையக மாணவர்கள் உயர் கல்வியை பெற வாய்ப்புகள் உள்ளன. எனினும் நுவரெலியா மாவட்ட மலையக மாணவர்கள் இதனை அணுகுவதில் அமைவிடம் காரணமாக அசௌகரியத்தை எதிர்கொள்கின்றனர். அத்தோடு சிங்கள மொழியில் வழங்கப்படும் பாடங்கள் சில இங்கு தமிழ் மொழியில் இன்மை கவனிக்கத்தக்கது.

ஹட்டன் நிலையம் :- இது 2002ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டதுடன் தற்போது மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞானம் பீடத்தினால் சமூக விஞ்ஞான பட்டப்படிப்பு (அடிப்படை, சான்றிதழ், பட்டம்), ஆரம்ப முகாமைத்து கற்கை, ஆங்கிலம் சான்றிதழ் கற்கை (அடிப்படை, ஆரம்ப, தொழிற்சார்) மற்றும் சிங்கள அடிப்படை, ஆரம்ப கற்கை ஆகிய கற்கைகளும் கல்வி பீடத்தினால் முன்பள்ளி சான்றிதழ் கற்கை, கல்வியிற் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா, கல்வியிற் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா (விசேட தேவை) ஆகிய கற்கைகளும் வழங்கப்படுகின்றன. இக்கற்கைகளில் ஏறத்தாள 400 மாணவர்கள் கற்று வருகின்றனர். எனினும் இன்று வரையில் இக் கற்கை நிலையமானது தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்திலேயே இயங்கி வருகிறது. இது திறந்த பல்கலைக்கழகத்தின் சுயாதீனத் தன்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதோடு கற்கை நிலையத்தின் நிர்வாக செயற்பாடுகளில் முறைகேடுகளுக்கும் அரசியல் தலையீடுகளுக்கும் வித்திட்டுள்ளது. சொந்தக் கட்டிடம் இன்மை காரணமாக இந்த கற்கை நிலையத்திற்கான முழுநேர பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை. தற்காலிக ஏற்பாடாக பண்டாரவளை கற்கை நிலைய பணிப்பாளர் பதிற்கடமையாற்றி வருகின்றார். குறித்த பணிப்பாளர் தற்போது கற்கை நிலையத்திற்கு வருகை தந்தாலும் அவர் பணியாற்ற அலுவலக வசதிகள் ஏதுவும் இல்லை.

கற்கை நிலையத்திற்கான இணைப்பாளர் மற்றும் லிகிதர் ஆகிய பதவிகள் முறையே தொண்டமான் தொழில் பயிற்சி நிலைய முகாமையாளர் மற்றும் லிகிதர் வகிப்பதுடன் திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவையும் பெறுகின்றனர். கற்கை நிலையமானது நடைமுறையில் சமூக விஞ்ஞான பாடத்திற்கான இணைப்பாளரினால் நடாத்திச் செல்லப்படுகின்ற போதும் அவருக்கான அலுவலக வசதியோ அவருக்கான தொழில் கௌரவமோ கிடைக்கப்பெறாத நிலையே காணப்படுகிறது.

தற்போது இந்த கற்கை நிலையத்தில் மேலே குறிப்பிட்ட கற்கைகள் இடம் பெறுகின்ற போதும் சமூக விஞ்ஞான பாட இணைப்பாளரை தவிர வேறு எந்தவொரு பாடத்திற்கான இணைப்பாளர்களும் கற்கை நிலையத்தில் இல்லை. அத்தோடு வெறும் வருகை விரிவுரையாளர்களை மட்டும் கொண்டே இந்த கற்கை நிலையம் இன்று வரை நடாத்திச் செல்லப்படுகிறது.

தற்போதை தற்காலிக கட்டிட வசதியின் கீழ் கற்கைகளை அதிகரிக்கவோ வகுப்புகளை அதிகரிக்கவோ முடியாத நிலையிலேயே கற்கை நிலையம் இயங்கி வருகின்றது. தற்போது ஆசிரியர்களுக்கான கல்வியில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா வகுப்புகள் ஹட்டன் கல்லூரியிலேயே இடம்பெற்று வருகின்றது. இந்த கற்கையில் ஏறத்தாள 150 ஆசிரியர்கள் பங்கு கொள்கின்றனர்.

ஹட்டன் கற்கை நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் ஒன்றை அமைக்க நகரத்தில் 2003 ஆம் ஆண்டு ¾ ஏக்கர் காணி பெறப்பட்டிருக்கின்ற போதும் கட்டிட நிர்மாணப் பணிகள் இது வரையில் ஆரம்பிக்கப்படாதிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

பண்டாரவளை கற்கை நிலையம் :- இங்கு எந்தவொரு தமிழ் மொழி மூல கற்கையும் இல்லை. முதல் முறையாக 2014ஃ2015 கல்வி ஆண்டுக்கான சட்ட கலைமாணி பட்டத்திற்கு இந்த நிலையத்திற்கு 50 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ள நிலையில், தமிழ் மொழி மூல கற்றலுக்கு வசதி இன்மை காரணமாக இப்பிரதேச மலையக மாணவர்களுக்கான அக்கற்கைக்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டள்ளது.

இரத்தினபுரி கற்கை நிலையம்:- இங்கு எந்தவொரு தமிழ் மொழி மூல கற்கையும் இல்லை.
நுவரெலியா கற்பித்தல் நிலையம் :- இங்கு எந்தவொரு தமிழ் மொழி மூல கற்கையும் இல்லை.

மேற்குறித்த விடயங்களை நோக்கும் போது மலையக மாணவர்கள் தேசிய பல்கலைக்கழகத்துக்கு அப்பால் உயர் கல்வி பெறக்கூடிய கல்வி நிலையமாக இருக்கின்ற திறந்த பல்கலைக்கழகத்தை அணுகியவர்கள் பௌதீக, மனித வள பற்றாக்குறை காரணமாக தரமான கல்வியை பெறுவதில் தடைகள் இருக்கின்றமையைக் காணலாம். அத்தோடு மலையக மாணவர்கள் வாழும் பிரதேசங்களில் கற்கை நிலையங்கள் மலையக மாணவர்களை உள்வாங்கும் நோக்குடனும் அதற்கேற்ற மனித பௌதீக வசதிகளுடன் இன்மையினால் திறந்த பல்கலைக்கழகத்தின் மூலம் உயர் கல்வியை அணுகுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதையும் காணலாம்.

மலையக மாணவர்கள் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் திறந்த பல்கலைக்கழகத்தின் மூலம் உயர்கல்வி பெறுவதற்கான தேவை இன்று பல முனைகளில் வளர்ந்து வந்துள்ளது. குறிப்பாக மலையக ஆசிரியர்களுக்கிடையே உயர் கல்வியை (பட்டம் மற்றும் பட்டப் பின் படிப்பு) பெறும் போக்கு இன்று அதிகரித்துள்ளது. ஆசிரிய உதவியாளர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளவர்கள் ஆசிரியர் சேவையில் இணைவதற்கு தாம் உப ஆசிரியராக தெரிவு செய்யப்பட்ட பாடத்தில் பட்டத்தை அல்லது பயிற்சியைப் பெற வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ் உப ஆசிரியர்களில் பலர் திறந்த பல்கலைக்கழகத்தினை அணுகுவதற்கு வழி இருப்பின் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பை ஏற்படுத்த வேண்டிய தேவையும் உயர் கல்வி அமைச்சுக்கும் கல்வி அமைச்சுக்கும் உண்டு. தேசிய பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மலையக இளைஞர் யுவதிகளுக்கிடையே அண்மை காலங்களில் உயர் கல்வியைப் பெறுவதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. உரிய உயர்கல்வி வாய்ப்பு இன்மையினால் இந்த ஆர்வம் அவர்களிடத்தில் விரக்தியை ஏற்படுத்தக்கூடியது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இந் நிலை அவதானிக்கப்பட்டு மலையக மாணவர்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திறந்த பல்கலைக்கழகம் செயற்பட வேண்டியுள்ளது.

மலையக இளைஞர்கள் உயர் கல்வியைப் பெறுவதில் ஆர்வம் இன்றி இருப்பதாக கூறி திறந்த பல்கலைக்கழக கல்வி வாய்ப்பை அவர்களுக்கு முழுமையாக வழங்க ஏற்புடைய நடவடிக்கைகளை எடுக்காமையானது அவர்களை இன்றைய அறிவுமைய பொருளாதாரத்திற்கு வழங்கக்கூடிய பங்களிப்பை இல்லாமல் செய்யும் நடவடிக்கையாகும். அத்தோடு அது ஓரு ஓரங்கட்டல் நடவடிக்கையுமாகும். இந்த ஓரங்கட்டலானது முன்னர் ‘கூலி’களாக அடையாளப்படுத்தப்பட்ட மலையக மக்கள் எதிர்காலத்தில் ‘திறனற்ற தொழிலாளர்’ கூட்டமாக மாறும் நிலையை ஏற்படுத்தும்.

இந்த பின்னணியில் மலையக மக்கள் திறந்த பல்கலைக்கழகத்தை முழுமையாக அணுகக்கூடிய விதத்திலான நடவடிக்கைகள் அத்தியாவசியமானதும் தவிர்க்கமுடியாததுமாகும்.

முன்மொழிவுகள்

1. ஹட்டனில் உள்ள கற்கை நிலையம் குறித்த இடத்திலோ அல்லது நுவரெலியா மாவட்டத்தில் உசிதமான ஒரு இடத்தில் அனைத்து கற்கைகளையும் கொண்டு தேவையான மனித பௌதீக வளங்களுடன் திறந்த பல்கலைக்கழக பிராந்திய நிலையம் ஒன்று தாபிக்கப்படல் வேண்டும்.
2. பண்டாரவளை மற்றும் இரத்தினபுரி கற்கை நிலையங்களில் அனைத்து தமிழ் மொழிமூல கற்கைகளும் ஆரம்பிப்பதற்கும் அதற்கான மனித மற்றும் பௌதீக வளங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
3. மேற்குறித்த இரு செயற்பாடுகளும் இடம்பெறும் அதேவேளை மலையக பாடசாலைகளில் உயர் தர மாணவர்களுக்கிடையேயும் இளைஞர் யுவதிகளுக்கிடையேயும் கல்வி அமைச்சு மற்றும் ஏனைய உரிய அரச நிறுவனங்கள் ஊடாக திறந்த பல்கலைக்கழக கற்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
4. பிராந்திய நிலையத்திலும் கற்கை நிலையங்களிலும் திறந்த பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழியில் உள்ள சகல கற்கைகளும் தமிழ் மொழியிலும் இருப்பதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
5. மலையக பிரதேச கலாசாரம், சமூக, பொருளாதார, புவியியல் காரணிகளை கருத்திற் கொண்டு மலையகத்திற்கு முழு நாட்டிற்கும் மலையக மக்கள் பங்களிப்பு வழங்கக்கூடிய துறைகளை அடையாளம் கண்டு அவைகளில் டிப்ளோமா, பட்டம், பட்டப் பின்படிப்பு கற்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இக்கற்கைகளை விஞ்ஞானபூர்வமாக அடையாளம் காண்பதற்கு மலையக தமிழ் சமூகத்தைச் சார்ந்த புத்திஜீவிகளினதும் நிபுணத்துவ உள்ளீடுகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

குறிப்பு:- இந்த முன்மொழிவுகள் திறந்த பல்கலைக்கழகமானது தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய அரச உயர் கல்வி நிறுவனங்களில் நுழைவு பெறாத மலையக மாணவர்களுக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் உயர் கல்வியை அணுகுவதற்கான வழிவகை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நோக்கப்பட வேண்டும். எனவே தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச உயர் கல்வி நிறுவனங்களில் மலையக மக்களின் இன வீதசாரத்திற்கு ஏற்ற நுழைவுக்கான தேவை மற்றும் மலையக மக்களுக்கான தனியான பல்கலைக்கழகத்திற்கான கோரிக்கை ஆகியன மலையக மக்களின் திறந்த பல்கலைக்கழகத்தை அணுகுவதற்கான கோரிக்கையையும் தனித்தனியாக நோக்கி தீர்வுகள் கண்டடையப்பட வேண்டியது என்பது வலியுறுத்தப்பட வேண்டியதாகும்.

இ.தம்பையா
இணை இணைப்பாள

Exit mobile version