பல்கலைக்கழகங்கள் பலவற்றில் நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பாராளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட கோப் குழுவின் அறிக்கையின் மூலம் இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துளள்ளார்.
பல்கலைக்கழகங்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியை அதிகாரிகள் தத்தமது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளதாகவும், எனினும் நிதிமோசடியுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற இத்தகைய மோசடிகளை பொறுப்புக்கூற வேண்டிய உயர்மட்டத்தினர் பாராமுகமாக இருப்பதாக ஒன்றியம் குற்றஞ்சுமத்துகிறது.
இதன்மூலம் பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவதற்கு முடியாத நிலை தோன்றியுள்ளதாக குறிப்பிட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார, இதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்கவேண்டும் எனக் கூறினார்.
இது குறித்து உயர்கல்வி பிரதியமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்கவிடம் வினவியபோது, கோப் அறிக்கை குறித்த ஒன்றியத்தின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டார்.
அரசாங்கத்தால் நியமிக்கப்படுகின்ற உத்தியோகத்தர்களில் சிலர் அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரையில் ஊழல் புருவதாகவும் , இந்த ஊழல் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இத்தகைய உத்தியோகத்தர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தண்டனைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் பின்னிற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நடைமுறையிலுள்ள சட்டத்திடடடங்களுக்கு அமைவாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் எனவும் பிரதியமைச்சர் குறிப்பிடுகிறார்.
மாணவர் ஒன்றியம் தெரிவிப்பது போன்று அனைத்து விடயங்களுக்கும் அரசாங்கம் மீது குற்றச்சாட்டு முன்வைப்பதில் எவ்வித அடிப்படையும் இல்லையெனவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.