Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பலாலி விமானத் தளம் இந்தியக் கட்டுப்பாட்டு வலயமாகும்?

இந்திய விமான சேவை அதிகார சபை இலங்கையில் சர்வதேச விமான நிலையமொன்றை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதுடன் இதற்காக விமனாப்படையின் பொறுப்பிலுள்ள பலாலி விமானத் தளத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் இணங்கியுள்ளது.

இந்திய விமனா சேவை அதிகார சபை பலாலி விமானத் தளத்தை விரிவு படுத்தவுள்ளது. இதற்கான அடிப்படை ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான சேவை அதிகார சபையின் தலைவர் பி.பி. அகர்வால் தெரிவித்திருந்தார்.

இந்தத் திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகளுக்காக 400 கோடி முதல் 500 கோடி ரூபா வரை செலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விமான சேவை அதிகார சபை பலாலி விமானம் நிலையம் தொடர்பாக அடிப்படை ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ள போதிலும் அவர்களுடன் அரசாங்கம் இதுவரை எவ்விதமான உடன்படிக்கைகளிலும் கையெழுத்திடவில்லையென பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலைய பிரதேசத்தில் சுற்றுலா வலயத்தை ஏற்படுத்துவது தொடர்பில் எவ்விதத் தீர்மானமும் எடுக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடபகுதியின் பிரதான பாதுகாப்புத் தலைமையகமான பலாலி பாதுகாப்புப் படைகளின் தலைமையக முகாமை அங்கிருந்து அகற்றுவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான ஓடுதளம் 1.7 கிலோமீற்றர் நீளமானது. அதிஉயர் பாதுகாப்பு வலயமான அந்தப் பிரதேசம் 25 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது.

இதற்கு முன்னர் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா, இலங்கைப் பிரதமர் ஆகியோருக்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது. வடபகுதியில் எதிர்காலத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள சுற்றுலா வலயத்திற்கு பலாலி பாதுகாப்புப் படைகளின் தலைமையகம் தடையாக இருக்கும் என இந்தியப் பிரதிநிதிகள் இராஜதந்திரப் பேச்சுவார்த்தையொன்றின் போது இலங்கைப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version