பலாலியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் சுமார் 30 வருடங்களாக நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இடம்பெயர்ந்து நீண்ட காலம் கடந்துள்ளபோதும் இவர்களை மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
வலி.வடக்கில் தற்போது பல பகுதிகளிலும் மக்கள் மீளக் குடியமர்வதற்கு இராணுவம் அனுமதித்துள்ளது. எனினும் பலாலிப் பகுதி மக்களின் மீளக் குடியமர்வு தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
இடம்பெயர்ந்து நீண்ட காலமாகத் தாம் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதாக அந்த மக்கள் கூறுகின்றனர். எனினும் எமது விடயத்தில் அரசு சற்றேனும் அக்கறை கொள்ளவில்லை என அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இது விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்தப்படாது விட்டால் தாம் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை இவ்விடத்தில் மக்களைக் குடியமர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.