Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பலவீனமான சமூகத்தைப் பாதுகாக்க முடியாத அரசாங்கம்

‘எந்த அரசாங்கம், எந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் பலவீனமானவர்களைப் பாதுகாப்பதே அவர்களின் கடமை ஆகும். பலசாலிகளை பாதுகாப்பது ஒரு ஆட்சியாளரின் கடமை அல்ல. பலவீனமானவர்களைப் பாதுகாக்க வேண்டும். அது தான் சிறந்த ஆட்சியின் அடையாளம் ஆகும். இதைச் செய்யத் தவறுகின்ற ஆட்சி நேர்மையான ஆட்சியாக இருக்க முடியாது. அசம்பாவிதங்கள் நடந்துவிடும் என்ற அச்சத்தில் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சொல்லுவது ஒரு பலமான அரசாங்கத்துக்கு எந்த விதத்திலும் பொருத்தமானது அல்ல.

மட்டக்களப்பு, காத்தான்குடியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கதீப் முஅத்தீன்கள் சேவை மூப்புள்ளவர்களை கௌரவிக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம்  இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பு குறித்து அடுத்து நடைபெறவுள்ள அமைச்சரவையிலும் அடித்துப் பேசுவதற்கு நான் தயாராக உள்ளேன் என்று திட்டவட்டமாக கூறுகின்றேன். அரசாங்கம் அனுமதி வழங்கிய வானொலியின் மூலமும் வெளியிலிருந்து குண்டர்களை கொண்டுவந்தும் தம்புள்ளைப் பள்ளிவாசல் உடைப்புக்கு செய்யும் அநியாயத்துக்கு அரசாங்கம் துணைபோக முடியாது. இல்லையென்றால் இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் சாத்தியமாகாது. நிரந்தர சமாதானம் வேண்டும் என்றால் அனைத்து இனங்களுக்கும் நீதி, நியாயம் கிடைக்க வேண்டும். நிர்வாக ரீதியாக எந்த பலவந்தத்துக்கும் அடியபணியக்கூடாது.

முஸ்லிம்கள் நிறையவே சகிப்புத்தன்மை கொண்டவர்கள். ஆன்மீகத்தின் ஒரு அங்கமாக சகிப்புத்தன்மையை உருவாக்கிக்கொண்ட சமூகம் முஸ்லிம் சமூகம் ஆகும். ஆனால் எடுத்ததற்கெல்லாம் வந்தான், வரத்தான்கள் என்றும் கள்ளத் தோணிகள் என்றும் முஸ்லிம்களை பற்றிக் கூறி எங்களின் அடிப்படை மத உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம்.

தம்புள்ளைப் பள்ளிவாசல் அசம்பாவிதத்தை பொலிஸார் உட்பட முப்படையினரும் தடுத்துள்ளனர். இதற்காக நான் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்துவிடாமல் தடுத்துள்ளதுடன், இன்னமும் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இப்பள்ளிவாசலுக்கான பாதுகாப்பு நீக்கப்படுமாகவிருந்தாலும் அப்பிரதேச மக்கள் அதை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அரசாங்கம் இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு இந்நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமையில் கை வைக்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதற்காக எவ்வளவு தூரம் போராட முடியுமோ அவ்வளவு தூரம் போராடுவோம். வன்முறையால் இன்றி அகிம்சை ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் போராடுவோம். எதிர்த்து போராடக்கூடிய ஒரு சமூகமாக நாங்கள் இருக்க வேண்டும்

இப்பள்ளிவாசலுடன் சேர்த்து தங்களது காளி கோவிலையும் அப்புறப்படுத்த அவர்கள் முனைவதாகவும் எமது கோவிலையும் பாதுகாத்துத் தருமாறும் நான் தம்புள்ளைக்கு போனபோது சில இந்துமத சகோதரர்கள் என்னிடம் வந்து அழுதுகொண்டு கூறினார்கள்.

குண்டருக்கு அடிபணிந்து வன்முறைக்கு அடிபணிந்து துவேசத்தை கக்கும் ஒரு வானொலிக்கு அடிபணிந்து எங்களை விட்டுக்கொடுக்குமாறு சொல்லுவதாக இருந்தால் அதிலும் பெரிய அநியாயம் இருக்க முடியாது. இதற்காக எங்களது முடிவை மாற்றமுடியாது. அவ்வாறு முடிவை மாற்றுவதாக இருந்தால் எங்களது உலமா சபை, அனைத்து அரசியல்வாதிகள், அப்பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசித்த பின்னரே நாங்கள் முடிவை மாற்ற முடியும்.

நிலைமையைக் கண்டறியும்வரை நான் வாய் திறக்கவில்லை. நான் கட்டார் நாட்டிலிருந்து அறிக்கை விட்டிருக்கலாம். அவசரப்படவில்லை. மிகப் பொறுமையாகத்தான் இருந்தேன். தம்புள்ளைக்கு சென்று நிலைமையை பார்வையிட்டு சம்பந்தப்பட்டவர்களுடன் பேசிய பின்னரே எங்களது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்றேன். அங்கு சென்று அங்குள்ள பெரும்பான்மையான சிங்கள மக்களின் நிலவரங்களை அவர்களின் கருத்துக்களை பெற்ற பின்பு தான் இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டி ஏற்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை தம்புள்ளை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடந்த சம்பவம் இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களுடைய உள்ளங்களையும் புன்படுத்தியதுடன் அவர்களை ஆழ்ந்த கவலையடையவும் செய்துள்ளது. இச்சம்பவம் ஆத்திரமடையவும் ஆவேசமடையவும் செய்துள்ளது.

இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் இந்த நாட்டின் அனைத்து அம்சத்திற்காகவும் முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பு என்பது யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம் சமூகம் சகிப்புத்தன்மையுடனும் வலிந்து வன்முறைக்கு செல்லமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.

ஆன்மீக ரீதியாக சமூகத்துக்கு இருக்கின்ற அடிப்படை உரிமையில் பாதிப்புகள் ஏற்படுகின்றபோது விபரீதங்கள் ஏற்பட்டுள்ளதை பார்த்திருக்கின்றோம். எங்களுடைய நாட்டுக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணையை ஆதரிக்கக்கூடாது என்ற நியாயத்தை அந்தந்த நாடுகளின் தூதுவர்களிடத்திலேயே கூறினோம்.

இஸ்லாமிய நாடுகளுக்கு போனோம். இந்த நாட்டிலே யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் இன நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டுமாக இருந்தால் இங்கு இருக்கின்ற மக்களுக்குள் உருவாகி வருகின்ற யுத்தத்தை இவ்வாறான பிரேரணையை கொண்டுவருவதன் மூலம் சில தீவிரவாத சக்தியை வலுப்படுத்தும் நிலைமை வந்துவிடலாம் என்ற அபாய அறிவிப்பை நாங்கள அங்கு செய்தோம்.

சனிக்கிழமை கட்டாரிலிருந்து நாட்டுக்கு வந்தபோது எமது கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் றம்ழான் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்ததை நான் பார்த்தேன். அவரது அந்த அறிக்கையிலேயே ஜெனீவாவிலே இலங்கைக்கு ஆதரவு வேண்டி நின்றதன் கைமாறாக தம்புள்ளை பள்ளிவாசல் உடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டுள்ளது சம்பவம் என தெரிவித்து ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார். இது தான் அனைவரினதும் உணர்வாக வெளிப்படுகின்றது.

நேற்று ஒரு தொலைக்காட்சியிலே ஒளிபரப்பட்ட தம்புள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சூத்திரதாரியின் நடத்தையையும் வார்த்தை பிரயோகத்தில் கூறப்பட்ட அசிங்கத்தையும் நாம் நேரடியாக பார்த்தோம்.

தம்புள்ளைக்கு அமைச்சர் பௌசி, ரிசாட் பதியுதீன் உட்பட அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா சென்றிருந்தார்கள். நானும் தம்புள்ளைக்கு சென்றேன். நான் தம்புள்ளைக்கு சென்றபோது முஸ்லிம்கள் மாத்திரமல்ல அங்கு அதிகமான சிங்கள நண்பர்கள் என்னோடு பேசினார்கள். தம்புள்ளை பிரதேசத்தின் மாநகர சபைத் தலைவர் எதிர்க்கட்சித்தலைவர் உறுப்பினர்கள் என்னிடம் கூறினார்கள் இப்பள்ளிவாசல் 60 வருடங்களுக்கும் மேலாக இங்குள்ளது என்பதை நாங்களும் எங்களது பெற்றோர்களும் மிகத் தெளிவாக அறிந்திருக்கின்றோம். இப்பள்ளிவாசலை அகற்றுவது என்பது நியாயமற்றது என்பதை அங்கிருக்கின்ற அதிக பெரும்பான்மையான சிங்கள மக்கள் கூறுகின்றார்கள்.

தம்புள்ளையில் உள்ள முன்னணி அரசியல்வாதிகளுடன் பேசினோம். அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோனை சந்தித்து பேசினோம். இது அப்பட்டமான அநியாயம் என எங்களிடம் அவர் கூறினார். தம்புள்ளையில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற உரிமைகள் மறுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. இது தொடர்பாக ஜனாதிபதியிடம் சொல்லியுள்ளேன் என அவர் தெரிவித்தார்.

இதன் பின்னணியில் பிரதம மந்திரியின் அலுவலகத்திலே நடைபெற்ற கூட்டத்தில் அந்தப்பள்ளிவாசலை அப்புறப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அது எனக்கு தெரியாது அப்படியான ஒரு முடிவெடுக்கும் கூட்டத்திற்கு அமைச்சர்கள் எவரும் போயிருக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன்.

ஒரு பிராந்திய வானொலி அலைவரிசையிலேயே இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வன்முறையில் ஈடுப்பட்டவர்களுக்கு அதை தூண்டிவிடும் பாங்கிலே முழுநாளும் விடிய விடிய செய்திகளை வெளியிட்டுள்ளது. ஒரு சமூகத்திற்கு எதிராக அப்பட்டமாக இந்த வானொலி இனவாதத்தை தூண்டிவிட்டுள்ளது. நான் கொழும்பிலிருந்து தம்புள்ளைக்கு வரும் வழியில் இந்த வானொலியை கேட்டேன். இதில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் திட்டமிட்டு இனவாதத்தை தூண்டும் வகையில் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. இந்த வானொலியில் பேசுபவர்கள் இது புனித பிரதேசம் இங்கிருந்து பள்ளிவாசலை அப்புறப்படுத்த வேண்டும் என்பன போன்றவற்றை பேசுகின்றனர். இதையெல்லாம் கேட்ட பின்பு என்னுடைய கருத்து இந்த வானொலியை அரசாங்கத்தினால் உடனடியாக தடை செய்ய வேண்டும். அப்படியான ஒரு அலைவரிசை எந்த சமூகமாக இருந்தாலும் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதை இலங்கை அரசியலமைப்பின் 14ஆவது சரத்து எடுத்துக் கூறுகின்றது.

கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக ஒரு இனத்திற்கு எதிராக இன ஒற்றுமையை குலைப்பது மதங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவது போன்றவைகள் இடம்பெறுமாக இருந்தால் அந்த பேச்சு சுதந்திரத்தை தடைசெய்வதற்கும் அரசியலமைப்பில் அனுமதியிருக்கின்றது. இவ்வாறான அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்த ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இந்த வானொலியை தடைசெய்ய முழு அனுமதியுமிருக்கின்றது.

இன்று முழு சர்வதேசத்தின் பார்வையும் கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லப்படும் நிலையிலேயே இந்த தம்புள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தம்புள்ளையைச் சேர்ந்த ஐந்து சதவீத மக்களும் கலந்து கொள்ளவில்லை என தம்புள்ளை மாநகர சபைத் தலைவர் அதன்; எதிர்க்கட்சி தலைவர் கூறுகின்றனர்.

அறுபது வருடங்களுக்கு மேல் உள்ள ஒரு பள்ளிவாசல் அதுவும் தகரக்கொட்டிலாக இருக்கும் ஒரு பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவதை ஏற்றக்கொள்ள முடியாது. எந்த உத்தரவாதங்களை யார் வழங்கினாலும் முஸ்லிம் சமூகம் இந்த சந்தர்ப்பத்திலே இதற்கு விட்டுக்கொடுப்பு செய்வதாக இருந்தால் அது விபரீதங்களை கொண்டுவந்து விடும் என்பதே எனது தாழ்மையான கருத்தாகும். இந்த சக்திகளுக்கு தலைசாய்த்து போவதென்பது வருங்கால சந்ததியினருக்கு நாங்கள் செய்கின்ற மிகப்பெரிய பாதகமாக இருக்கும் என்பதை திட்டவட்டமாக நான் சொல்கின்றேன்.

பள்ளிவாசல் நிர்வாகிகளை கொழும்புக்கு அழைத்து அவர்களின் விருப்பத்தை கேட்டறிவது என தீர்மானித்திருந்தோம். இன்று நான் தம்புள்ளைக்கு போன பிறகு எந்தக்காரணம் கொண்டும் நாங்கள் அந்தப்பள்ளிவாசலை அகற்றும் விடயத்தில் பின்வாங்க முடியாது. பின்வாங்கினால் வன்முறையினால் இவ்வாறு பல இடங்களிலே எங்கள் மத உரிமைகளில் கைவைப்பதாக மாறிவிடும் அபாயத்தை புரிந்து கொள்ளவேண்டும். அந்த அடிப்டையிலே இது சம்பந்தமாக நிர்வாக ரீதியாக எந்த பலவந்தம் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள வேண்டும்.
தம்புள்ளையில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால் கூட அங்குள்ள பெருமபாலான மக்கள் அந்த பள்ளிவாசலை அகற்றக்கூடாது என்ற முழுமையான ஆதரவு கிடைக்கும்.

தம்புள்ளை மாநகர சபையில் ஒரு பிரேரணையை கொண்டுவந்து இந்த பள்ளிவாசல் அகற்றும் நடவடிக்கையை எதிர்க்கவுள்ளோம் என்று மாநகர சபை உறுப்பினர்கள் என்னிடம் கூறினார்கள். நிர்வாக மட்டத்தில் எந்த அழுத்தம் எந்த நிர்ப்பந்தமும் செய்யக் கூடாது என்பது எனது பணிவான வேண்டுகோளாகும்.

நீதியமைச்சர் இருக்கின்றபோது முஸ்லிம்களுக்கு நீதி நியாயம் கிடைக்கவில்லையே என்று என்னிடம் ஆத்திரத்துடன் கேட்டார்கள். அந்த இடத்தில்தான பள்ளிவாசல் இருக்க வேண்டும் என்னும் எங்களது முடிவை மாற்றமுடியாது. அவ்வாறு மாற்றுவதாக இருந்தால் அவ்வாறு முடிவை மாற்றுவதாக இருந்தால் எங்களது உலமா சபை அனைத்து அரசியல்வாதிகள் அப்பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆலோசனை செய்த பின்னர்தான் நாங்கள் முடிவை மாற்ற முடியும்’ என்றார்.

முஸ்லீம்கள் அணிதிரண்டு இலங்கை அரசின் ஒடுக்கு முறைக்கு எதிராக ப் போராடுவதற்குப் பதிலாக இலங்கை இனப்படுகொலை அரசின் அமைச்சராக முஸ்லீம்களைப் பலவீனப்படுத்துவது ஹக்கீமும் கூடத்தான் என முஸ்லீம்கள் புரிந்து கொள்ள நாளாகாது.

Exit mobile version