Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பரிதி கொலை : பாசிஸ்ட் தயான் ஜெயதிலக தலையீடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் பரிதி எனப்படும் நடராஜா மகேந்திரனின் படுகொலைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலையின் பின்னணியில் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் அரசாங்கத்தினால் விசாரணை நடத்தப்பட்டு வரும் ஓர் விடயம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலி ஆதரவு தரப்பினரின் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளமை வெளிப்படையான விடயமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
சில பிரிவினைவாத இணைய தளங்கள் அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் களங்கம் ஏற்படும் வகையில், இந்தக் கொலை தொடர்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை பிரான்ஸ் அரசாங்கம் விரைவில் கைது செய்து உரிய தண்டனை விதிக்கும் என்பதில் சந்தேகமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலம் பெயர் முன்னை நாள் புலிகள் இயக்க உறுபினர்கள் மத்தியில் ஏற்படும் பிளவும் மாபியாக் குழு மோதல்களும் ஒரு புறத்தில் மக்களை விரக்திக்கு உள்ளாக்குவதுடன் மறுபுறத்தில் டயான் ஜெயதிலக போன்ற பாசிஸ்டுக்களின் தலையீடுகளைச் சாத்தியமாக்கி வருகிறது. புலிகளின் அழிவின் பின்னர் ஏற்பட்டுள்ள இவ்வகையான மாபியக் குழு மோதல்கள் எஞ்சியுள்ள சிறிய ஜனநாயக இடைவெளியைக் கூட அழித்துச் சிதைக்கும் அபாயம் கொண்டது.
கொலை நிகழ்ந்த மறுகணமே உண்மையை மறைப்பதற்காக புலி சார் ஊடகங்கள் இது இலங்கை அரசின் செயல் என பரப்புரை செய்ய ஆரம்பித்தன. தமது மில்லியன்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அஞ்சிய பலர் இந்தப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டனர். இன்று டயான் ஜெயதிலக போன்ற இனப்படுகொலையை நியாயப்படுத்திய பாசிஸ்டுக்கள் தம்மை நியாயப்படுத்த இவர்கள் துணைபோகின்றனர்.

Exit mobile version