உலகம் முழுவதும் நிலப்பறிப்பிற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களுக்குக் கிடைக்கும் ஆதரவுகளைப் போன்று தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டங்களுக்குக் கிடைப்பதில்லை. உலகின் தொழில் முறைக் கொலைகாரர்களின் தயவில் போராட்டம் நடத்தப்போவதாக ஊழித் தாண்டவமாடும் புலம்பெயர் மற்றும் தமிழ் நாட்டு அமைப்புக்கள் ராஜபக்சவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்கிவருகின்றன.
இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தங்கவேல் ஜெகதீஸ்வரன் பரவிப்பாஞ்சான் கிராமத்தினை விடுவிக்க கோரி எதிர்வரும் 26ம் திகதி திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அவரை இன்று மாலை விட்டில்வைத்து இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இவ்வாறான போராட்டங்களுக்குப் பக்கபலமாகத் தென்னிலங்கையிலோ அன்றி முஸ்லீம் மலையக மக்கள் மத்தியிலோ, உலகளாவிய முற்போக்கு ஜனநாயக சக்திகள் மத்தியிலோ போராட்டங்கள் எழாதவாறு இலங்கை அரசின் புலம்பெயர் தொங்குதசைகள் கவனித்துக்கொள்கின்றன.
வெற்று உணர்ச்சிக் கோசங்களை முன்வைத்தும், புலிகள் வாழ்கிறார்கள் என்று போலி நாடகமாடியும், ஐ.நா போன்ற ஏகபோக அரசுகளின் நிறுவனங்கள் பார்த்துக்கொள்ளும் என்று கூறியும் ஏனைய ஆதரவுப் பிரிவுகளை அன்னியப்படுத்துகின்றனர். இதனூடாக ராஜபக்சவைப் பலப்படுத்துகின்றனர்.
இவை அனைத்தையும் மீறி, ராஜபக்ச அரசுடன் போராடி மட்டுமே உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலைக்கு தமிழ்ப் பேசும் மக்கள் வந்துள்ளனர். பிழைப்பு வாதிகளை நிராகரித்து மக்கள் போராட்டத்திற்கான தந்திரோபாயத்தை உருவாக்கிக் கொள்ளாவிட்டால் இன்னும் சில வருடங்களில் முழு நிலமும் அழிக்கப்பட்டுவிடும்.