Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பரமக்குடி துப்பாகிச் சூடு :  பொலீஸ் மீது நடவடிக்கை இல்லை

பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக்கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

செப்.11-பரமக்குடி இம்மானுவேல் சேகரனின் 54வது நினைவு நாள். 1924 அக்டோபர் 9 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், செல்லூர் கிராமத்தில் வேதநாயகம், ஞானசுந்தரி தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்த இம்மானுவேல் சேகரன் 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில், வழக்கறிஞரான தன் தந்தையோடு பங்கேற்று, 3 மாதம் சிறைத்தண்டனை பெற்றார். ஒரு இராணுவ வீரனாக பணியாற்றச் சென்றவர், 1950ல் சாதியக்கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவதே முதல் கடமை எனத்திரும்பிவிட்டார். ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை துவங்கி,1953ல் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு நடத்தியவர். முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் இரட்டைடம்ளர் முறைக்கு எதிராக நேரடிப்போராட்டம் நடத்தியது தமிழகத்தில் புதிய எழுச்சியின் துவக்கமாகும்.

ஆதிக்க சக்திகளின் மண்ணில் ஒடுக்கப்பட்டோர் உரிமை என குரல் எழுகையில் தாங்கிக்கொள்வார்களா? கொலை முயற்சிகள் நடந்தன. தலித் மக்களுக்கு எதிரான ஆதிக்க சக்திகளின் கலவரத்தையொட்டி அமைதிக்காக பணிக்கர் என்ற ஆட்சித்தலைவரின் தலைமையில் பேச்சுவார்த்தை 10.-09.-1957 அன்று நடக்கிறது. சுமூகமாக நிறைவு பெறாததால் புதிய பிரச்னைகள் துவங்குகின்றன. மறுநாளே ஒரு கொலைகார கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படுகிறார் இம்மானுவேல்.

33 வயதே நிரம்பிய ஒரு போராளியின் படுகொலை மரணம் தாழ்த்தப்பட்ட மக்களை கொந்தளிக்க வைக்கிறது. நியாயம் கேட்டு அன்று போராடியபோது அம்மக்கள் மீது ஆதிக்கசக்திகள் நடத்திய தாக்குதலையும் சேர்த்து அது சாதிக்கலவரம் என்றே அன்று கூறப்பட்டது. போராளியின் நினைவுகளை ஏந்தி கடந்த 54 ஆண்டுகளாக அவரின் நினைவு தினத்தை அனுஷ்டித்துவருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய இம்மானுவேல் சேகரனை சமூக நீதிக்கான போராட்ட வரலாற்றின் கள நாயகர்களில் ஒருவராக அங்கீகரிக்க வேண்டிய அரசு இன்றுவரை புறக்கணித்தே வருகிறது. இம்மானுவேல் பணியாற்றிய காங்கிரஸ் கட்சியும், பெரியாரின் வழி வந்ததாக தன்னை கூறிக்கொள்வோர்களின் கட்சியும் தான் தமிழகத்தை இன்றுவரை ஆண்டுவந்துள்ளனர். ஆனால், ஒரு அரசு விழா கூட இன்றுவரை எடுக்கப்படவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளாகத் தான் இம்மக்கள் குருபூஜை நடத்திவருகின்றனர். ஆனால் குருபூஜையில் மட்டுமல்ல நினைவஞ்சலி செலுத்தக்கூட எந்தவொரு அமைச்சரும் செல்வதில்லை. அனைத்து சாதிகளுக்கும் செல்லும் அமைச்சர்கள் தலித் போராளிகளின் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் செல்லாததை சாதி ஒடுக்குமுறை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல? 2010ல் இவருக்கு நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது. நினைவு தபால்தலை வெளியீடு என்றால் அரசு விழாவாக நடத்தப்பட்டு, முதல் தபால் உறையும் வெளியிடப்படும் என்று நாமறிவோம். ஆனால். இம்மானுவேலுக்கு..? விழா ஏதும் நடத்தப்படவில்லை.

மறைந்த முரசொலி மாறன் தபால் தலை 2004ல் வெளியிடுகையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி. ஆனால், அண்ணா அறிவாலயத்தில் மக்களைவைத் தலைவர், மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்ள சோனியாவை சிறப்பு விருந்தினராக அழைத்து விழா நடத்தி தபால் தலை வெளியிட்ட கலைஞர் தான் 2010ல் இம்மானுவேல் தபால் தலை வெளியிடுகையில் தமிழகத்தில் முதல் அமைச்சர். ஏன் விழா நடத்தவில்லை? சாதிய அரசியல் திராவிடக் கட்சிகளின் மையக்கொள்கையாக இருப்பதால்தான் இன்றும் தொடர்கின்றன தீண்டாமைக்கொடுமைகள். அரசின் நவீன தீண்டாமை அனைத்து துறைகள் மூலம் மட்டுமல்ல, காவல்துறை மூலமும் கோலோச்சுகிறது என்பதன் அடையாளமே தற்போது நடந்துள்ள துப்பாக்கிச்சூடு. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடிய போராளியை சாதிய அடையாளத்துடன் இணைத்து ஒதுக்கிய அரசின் ஒடுக்குமுறையே 2011 செப்டம்பர்,11 துப்பாக்கிச்சூடு.

அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என காவல்துறைக்கு தெரியும். ஆனாலும், பதற்றமில்லாத பாதுகாப்பு தரவோ, ஆதிக்க சக்திகளின் கலவர முயற்சியை தடுக்கவோ மனமில்லாத காவல்துறை தலித் மக்களைத்தான் மீண்டும் கலவரக்காரர்கள் என்று, அரசுமுத்திரை குத்துகிறது. 11 வது வகுப்பில் பயிலும் தலித் பள்ளிச் சிறுவன் படுகொலை செய்யப்படுகிறான். மறுநாள் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள். என்ன செய்திருக்க வேண்டும் அரசும், காவல் துறையும்? குற்றவாளிகளை கைது செய்வது மட்டுமல்ல, பரமக்குடிக்கு வரும் தலித் மக்களுக்கும், தலித் தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என அச்சம் நீங்க அறிவித்திருக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்ட தலித் மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லக்கூட யாரும் வரக்கூடாது என தடை விதிக்கிறது.

6 பேர் உயிரிழப்பும், 20-க்கு மேற்பட்டோர் படுகாயமும் அடைந்துள்ளனர். விதிகளை மீறி நடவடிக்கை எடுத்த போலீஸôர் மீது நடவடிக்கை, பணிநீக்கம், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு, காயமுற்றவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும், சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் முருகன், திருமாவளவன், குருவிஜயன், புகழேந்தி, செல்வகுமார், சாமுவேல் உள்ளிóடட 10 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா, எம்.வேணுகோபால் ஆகியோரடங்கிய டிவிஷன் பெஞ்ச், இந்த மனுக்களில் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரும் மனுவைத் தள்ளுபடி செய்து, பிறமனுக்களை ஏற்று, சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ. வசம் 10 நாள்களுக்குள் தமிழக காவல்துறை ஒப்படைக்கல வேண்டும் என்றும், சி.பி.ஐ. உயர் அதிகாரியை நியமித்து நேர்மையாக விசாரணையை நடத்துமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

Exit mobile version