‘உணர்சிக் கவிஞர் காசியானந்தனோடு சைக்கிளில் சென்று பாலு மகேந்திரா குண்டெறிந்தார்.’
காசி 22.5 கரட்டில் கை, கழுத்து, கைவிரல், கால்விரல் போன்ற இன்னோரன்ன பகுதிகளில் மாட்டி வைத்து பாரம் தாங்காமல் நடந்து போகும் காட்சியை கடாசிவிட்டு கலர் கனவே வியர்த்தது. ‘பொன்னென்ன பூவென்ன கண்ணே’ அந்தக் காலத்துப் பாட்டில் காசி கடிக்காமல் கனவில் வந்துபோனார்.
இதையெல்லாம் பார்க்கும் போது நமது தே.த. பிரபாகரன் இப்போதும் இருக்கிறார் என்ற எண்ணம் சோளனுக்குள் வந்து சுருக்கெனத் தைத்தது.
சோளனுக்கு வந்த கனவில் புதுப்புது ஐடியாக்கள் குறுக்கால குறுக்கால வந்து வடிவமைத்தது. தேசிய உணர்வு கூரையைப் பொத்துக்கொண்டு வந்தது. கட்டேல போற காலத்தில் சீமானின் வீட்டு வளவில தான் சாகவேண்டும் எண்டு சோளன் கனவில் முடிவெடுத்தான். அப்படி வீரச்சாவை சோளன் தழுவினால், சீமான் வெளியே வந்து தேசியத் தலைவருக்கு தூசி தட்டியவன் சோளன் என்று புகழ் பாட காசியானந்து விசிலடிக்க புலிகள் புடைசூழ சவக்காட்டிற்கு சோளன் அனுப்பிவைக்கபடுவான்.
சோளன் இப்படி செ.தமிழன் சீமான் வீட்டு வளவில் செத்துப் போனபின்னும் கனவு கண்டவன் என்ற பெருமையை புலம் பெயர் நாடுகளில் இருந்து வேறு புகழ் பாடுவார்கள்.
பாலு மகேந்திரா நான் இலங்கையன் என்பதை ‘நாம் தமிழர்’ ஊடாக ஆத்மா சாந்தி அடைந்த பின்பு அறிவித்து டைரக்சன் உத்தியைக் கையாண்டிருக்கிறார் என்பது வேறு விசயம். தான் வாழ்வதற்காக தான் யார் என்பதைக் கூட சொல்லாமல் சோளன் போல வாழன் என்பதை தனது வாழ்வின் மூலமாக பாலு சொல்ல அந்தப் பலவீனத்தை அடுத்த கட்டத்திற்கு காசியும் செந்தமிழும் நடத்திச் சென்று பாலுவின் புதைகுழியில் புறங்காலால் மண்ணை தள்ளிவிட்டிருக்கிறார்கள் என பக்கத்தில் கனவுகண்ட நண்பனை சோளன் தட்டி எழுப்பினன். அவனை நிஜக் கனவுலகிற்கு அழைத்து வந்தான்.
அவனுக்கு, பாலுவின் கையில் பெற்றோல் குண்டைவைத்து அழகு பார் என்றான். உ.கவிஞன் காசியின் தங்கச் சைக்கிளில் ஏற்றி கைக்குண்டோடு பாலுவை உலாவ விடு என்றான். பாலுவிற்கு கலை உனர்வை வளர்த்தவர் பிரபாகரன் என்று சொல் எனப் போதித்தான். பாலு கமராவைப் பார்ப்பதும் பிரபாகரன் குறிபார்ப்பதும் ஆறு வித்தியாசங்கள் கூடக் கண்டுபிடிக்க முடியாத அம்சங்கள் என்று உரை என்றான்.
நாசமாப் போன கனவு முடிந்து விழித்தெழுந்த போது, பச்சைமுத்துவின் புதிய தலமுறை தொலைக்காட்சியில் நண்பன் நேர்காணல் வழங்கிக்கொண்டிருந்தான். ‘மேதகு பாலு மகேந்திரா கமராவால் குறிபார்க்கும் போது…’ என்ற வரிகள் ஆரம்பித்த போது தொலைக்காட்சி அறிவிப்பாளர் கண்கள் கலங்கியிருந்தன.
சகிக்க முடியாமல் சனலை மாற்றிய போது இலங்கை அரச தொலைக்காட்சி ரூபவாகினி சொல்லியது ’40 வருடங்களின் முன்னர் மாண்புமிகு ஜனாதிபதிக்குக் குண்டுவைக்க முனைந்த பயங்கரவாதி பாலு மகேந்திரா சென்னையில் பதுங்கியிருந்து காலமானார்.’
-யாவும் கனவு-