Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பயங்கரவாதம், வறுமை ஒழிப்பு உட்பட 22 அம்சங்களை உள்ளடக்கி கொழும்பு பிரகடனம் வெளியீடு

04.08.2008.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜூலை 27 ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று மாலையுடன் நிறைவுபெற்ற 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டில் 22 அம்சங்கள் உள்ளடக்கிய கொழும்பு பிரகடனம் வெளியிடப்பட்டது.ஜனாதிபதியும் 15 ஆவது சார்க் மாநாட்டின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற உச்சி மாநாட்டின் இறுதி நாளான நேற்று இந்த பிரகடனம் வெளியிடப்பட்டது. பிராந்திய ஒத்துழைப்பு, தெற்காசிய மக்களுக்கிடையிலான வளர்ச்சி, இணைப்பு, எரிபொருள், சுற்றாடல், நீர்வளம், வறுமை ஒழிப்பு, சார்க் அபிவிருத்தி நிதியம், போக்குவரத்து, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப அபிவிருத்தி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை, கலாசாரம், சப்டா மற்றும் வர்த்தக அனுசரணையாளர், வர்த்தக சேவை, சார்க் சமூக வரைபு, பெண்கள் மற்றும் சிறுவர்கள், பயங்கரவாத ஒழிப்பு, இணைந்த நிலை, பார்வையாளர்கள், 16 ஆவது சார்க் மாநாடு ஆகிய அம்சங்களே கொழும்பு பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிராந்திய ஒத்துழைப்பு

கொழும்பு பிரகடனத்தின் பிரகாரம் பிராந்திய ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னெடுப்பு மற்றும் கலாசார அபிவிருத்தியை சார்க் வலயத்திற்குள் மேம்படுத்தி அதனுடைய திறனையும் வளர்ச்சியையும் உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல். தெற்காசிய மக்களுக்கிடையிலான வளர்ச்சி தெற்காசிய மக்களுக்கிடையிலான உண்மையான வளர்ச்சியை சார்க் முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நலன்புரி மற்றும் அமைச்சர்கள் மட்டத்திலான சார்க் இயந்திரத்தை கண்டுபிடித்து அதனை மக்களுக்கான வளர்ச்சியில் பங்கேற்க செய்தல்.இணைப்பு சார்க் இயந்திரத்தின் மூலமான அதனுடைய திட்டம் மற்றும் நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்தி வலய நாடுகளுக்கிடையில் அதனை மேம்படுத்துதல் உலக மற்றும் வலய நாடுகளுக்கிடையில் பொருளாதாரம் மற்றும் சமூக திட்டங்களை மக்களூடாக வளர்ச்சியடை செய்தல்.

எரிபொருள்

சார்க் வலய நாடுகளில் மட்டுமல்லாது எரிபொருள்களின் விலையேற்றம் அபிவிருத்தியில் சர்வதேச ரீதியில் பாரிய தடையாக இருக்கின்றது. அதனை நீக்குவதற்காக சூரிய ஒளி மற்றும் காற்று ஆகியவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற, புதிய எரிபொருள் பாவனை அறிமுகப்படுத்தல் இது தொடர்பில் எரிபொருள் துறை அமைச்சர்களுக்கு இடையில் அடுத்த வருடம் கொழும்பில் மூன்றாவது தடவையாக கூட்டமொன்றை நடத்தி ஆராய்தல்.

சுற்றாடல்

உலக மாற்றம், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றாடல் மாற்றத்தின் காரணமாக வலய நாடுகளுக்கிடையில் விவசாயம், மீன்பிடி ஆகிய விடயங்களில் கூடிய கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது என்பதனால் வலய சுற்றாடல் வரைபு ஒன்றை ஏற்படுத்தி காலநிலை மாற்றங்கள் தொடர்பில் கூடிய கவனத்தை செலுத்துவதன் மூலம் வலய நாடுகளுக்கிடையில் விவசாயத்தை மேம்படுத்தலாம்.

நீர்வளம்

காலநிலை மாற்றம் காரணமாக நீர்வளம் பெரும் பாதிப்புக்கு முகம் கொடுத்து வருகின்றது. இந்நிலையில் சார்க் வலய நாடுகளுக்குள் நீர்வளத்தை பாதுகாப்பதற்காக மழை நீர் சேமிப்பு திட்டம், ஆற்று முகாமைத்துவம் ஆகியன தொடர்பில் திட்டமொன்றை வரைதல்.

வறுமை ஒழிப்பு

சார்க் வலய நாடுகளுக்குள் அதிகரித்துச் செல்கின்ற வறுமையை ஒழிப்பதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல். இது தொடர்பில் அடுத்த வருடம் நேபாளத்தில் அமைச்சர்கள் மட்டத்தில் கூடி ஆராய்தல்.

சார்க் அபிவிருத்தி நிதியம்

சார்க் வலய நாடுகளிடமிருந்து கிடைத்துள்ள நிதியை பயன்படுத்தி சார்க் அபிவிருத்தி நிதியத்தை ஏற்படுத்துவதன் மூலம் வலய நாடுகளுக்குள் நிலவுகின்ற பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் சிறுவர் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, சமூக நோக்குடனான ஆசிரியர்களை உருவாக்கல்.

போக்குவரத்து

சார்க் வலய நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து வலய நாடுகளுக்கிடையில் அபிவிருத்தியை வளர்ச்சியடைய செய்யும் வகையில் சார்க் வலய போக்குவரத்து கல்வியை அறிமுகப்படுத்தல். அத்துடன், அரசாங்கத்துக்கிடையில் மோட்டார் போக்குவரத்து திட்டம் மற்றும் வலய நாடுகளுக்கிடையிலான மாற்று போக்குவரத்து திட்டம், ரயில்வே ஒப்பந்தம் ஆகியன தொடர்பில் கலந்துரையாடல்.

தகவல், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப அபிவிருத்தி

வலய நாடுகளுக்கிடையில் தகவல், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப அபிவிருத்தியை மேம்படுத்தல். தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பை ஏற்படுத்தல். அதனை மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுத்தல். இவைகளை கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளல். விஞ்ஞானத் தொழில்நுட்பம்

வலய நாடுகளுக்குள் அறிவுசார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்காக வலய நாடுகளுக்கிடையில் விஞ்ஞான தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல். இதுதொடர்பான திட்டங்களை வகுத்தல்.

சுற்றுலாத்துறை

வலய நாடுகளுக்கிடையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ஆகாயம், கடல் மற்றும் வான் வழியிலான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், மனித வளங்களை அபிவிருத்தி செய்தல், அரச மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் பொதுவான சார்க் இணக்கப்பாட்டை ஏற்படுத்துதல். கலாசாரம்

சார்க் வலய நாடுகளில் அடையாளம் காணப்பட்ட கலாசாரத்தை அவ்வாறே மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிகழ்ச்சி நிரல்களுடன் முன்னெடுத்தல்.

சப்டா வர்த்தக உடன்படிக்கை

வலய நாடுகளுக்கிடையில் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக கைச்சாத்திடப்பட்டுள்ள சப்டா உடன்படிக்கையை அவ்வாறே முன்னெடுத்து இனங்காணப்பட்ட வர்த்தகத்துறைகளை வலய நாடுகளுக்கிடையில் அறிமுகப்படுத்தி அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல். பெண்கள் மற்றும் சிறுவர்கள்

பொருளாதார ரீதியில் பெண்களின் திறன்களை அபிவிருத்தி செய்து சுகாதாரம் மற்றும் வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் அவர்களை ஆட்படுத்துதல் மற்றும் சமூக செயற்திட்டங்களில் உள்ளீர்த்துக்கொள்ளல். கல்வி

வலய நாடுகளுக்கிடையிலான இளைஞர் யுவதிகளிடம் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக புதுடில்லியை மையப்படுத்தி 2010ஆம் ஆண்டளவில் சார்க் பல்கலைக்கழகத்தை நிறுவுதல் அவர்களுக்கு சார்க் புலமைப் பரிசில் திட்டத்தின் மூலம் கல்வியை பெற்றுக்கொள்வதற்காக வழிவகைகளை ஏற்படுத்தி கொடுத்தல்.

பயங்கரவாத ஒழிப்பு

சமூக பொருளாதார அபிவிருத்திக்கு இடையூறு விளைவிக்கின்ற பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை சார்க் வலய நாடுகள் இணைந்து முன்னெடுத்தல் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான தகவல்களை வலய நாடுகளுக்கிடையில் பகிர்ந்து கொள்ளல். இது குறித்து பாகிஸ்தான் தலைநகரில் இவ்வருடம் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பார்வையாளர்கள்

சார்க் உச்சி மாநாட்டை பார்வையிடுவதற்காக வருகை தந்துள்ள நாடுகளை வரவேற்பதுடன் அவுஸ்திரேலியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகள் விண்ணப்பித்துள்ளன. அது குறித்து தீர்மானம் ஒன்றை எடுத்தல்.

அதுமட்டுமல்லாது 16 ஆவது சார்க் மாநாட்டை மாலைதீவில் நடத்துவது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பு பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version