இந்த அதிர்ச்சி தரும் வறுமை குறித்துப் பேசாத இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டேல், இடதுசாரி பயங்கரவாதம் குறித்துக் கவனம் செலுத்தியுள்ளார்.
“”உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது. இதைத் தோற்கடிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அத்துடன் ஊழல் விவகாரத்தில் சகிப்புத்தன்மைக்கே இடம் அளிக்காமல் அரசு நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும்,” என ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் 64வது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு நேற்று உரை நிகழ்த்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மேலும் கூறியதாவது: தீவிரவாதிகளுக்கு எந்த நாடும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது. அவர்கள் பயிற்சி பெற அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு நிதியுதவி செய்யக்கூடாது. அவர்களின் கொள்கைகளை ஆதரிக்கக் கூடாது. பயங்கரவாத கொள்கைகளை ஆதரிப்பவர்களும், இடதுசாரி பயங்கரவாதத்தை பின்பற்றுவோரும் தங்களின் வன்முறை பாதையை கைவிட்டு, தேசத்தின் வளர்ச்சிப் பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். நக்சலைட்களும் வன்முறையை கைவிட்டு, பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும்.
இதன் மூலம் நாடு பல விதத்திலும் வளர்ச்சி அடையும். விவசாயத் துறையை தனிமைப்படுத்தக் கூடாது. பொருளாதாரத்தின் இதர துறைகளுடன் அவற்றை இணைக்க வேண்டியது அவசியம். விவசாயத்துக்கும் தொழில் துறைக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தினால், கிராமப்புறங்களில் தொழில்கள் வளர்ச்சி அடைவதோடு, விவசாயம் தொடர்பான வர்த்தகமும் மேம்படும். பலமான குடும்ப முறை நலிவடைந்து கொண்டிருக்கிறது. சமூகப் பற்று தேய்ந்து கொண்டிருக்கிறது. சில சமூக அவலங்கள் தொடர்கின்றன. இவை எல்லாம் மாற வேண்டும்.
உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியா மட்டும் நிச்சயமாக பின்தங்கியிருக்க முடியாது. ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும். அதன் மூலம் அனைத்து மக்களும் வளர்ச்சி அடைவர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் நம்பகத்தன்மை, அனைத்து மட்டத்திலும் ஜனநாயகத்தை பலமாக வேரூன்றச் செய்திருப்பதன் மூலம் மேலும் வலுவடைந்துள்ளது. தேசிய அளவில் முதல், கீழ்மட்ட அளவில் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளை நாம் கொண்டுள்ளோம். நாட்டு விவகாரங்களில் தலையிட இந்த ஜனநாயகம் மக்களுக்கு உரிமை அளித்துள்ளது. ஜனநாயகம் நம் வாழ்வில் ஒன்றாகி விட்டது.
உலக அளவில் பொருளாதார ரீதியாக நான்காவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. அத்துடன் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நாடாகவும் உள்ளது. உலக அளவில் கடும் பொருளாதார மந்த நிலை நிலவிய போதும், நம் நாடு அதனால், பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. பசியோடு, பட்டினியோடு யாரும் தூங்கவில்லை என்ற நிலைமை நம் நாட்டில் உருவாகும் போது, நடைபாதையில் யாரும் தூங்கவில்லை என்ற நிலை ஏற்படும் போது, ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கு செல்வது உறுதி செய்யப்படும் போது, நமது லட்சியம் பூர்த்தியாகி விடும். எனவே, கல்வி, திறனை மேம்படுத்துதல், வீட்டு வசதி, சுகாதார வசதி மற்றும் சத்துணவு போன்றவை அரசின் முன்னுரிமை செயல்திட்டமாக இடம் பெற வேண்டும். இடைநிலைக் கல்வி பரவலாக்கப்பட வேண்டும். உயர் கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் நாட்டில் திறமையானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு பிரதிபா பாட்டீல் பேசினார்