Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பயங்கரவாதத்துக்கு ஆதரவான சில குழுக்கள் ஈழப் போராட்டத்துக்கு வழி அமைக்க எத்தனம்!:மஹிந்த ராஜபக்ஷ

 பயங்கரவாதத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்துவரும் சில குழுக்கள், மீண்டுமொரு ஈழப் போராட்டத்திற்கு வழி அமைத்துக் கொடுக்க முயற்சி செய்கின்றன என்று எச்சரித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த எத்தனத்தைத் தடுக்க இந்நாட்டு மக்கள் அனைவரும் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்தார். கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்ட பத்தில் நேற்று அவர் தமது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றியபோதே இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

அந்த நிகழ்வில் உரை நிகழ்த்துகையில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
2005 இல் நான் நாட்டைப் பாரமெடுக்கும்போது இந்நாடு பாரிய பயங்கரவாதப் பிரச்சினையை எதிர்கொண்டிருந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்று இங்கிருந்து நாட்டை அழித்துக்கொண்டிருந்தது. பயங்கரவாதம் ஒருபுறமிருக்க பொருளாதாரப் பிரச்சினையாலும் நாடு சீரழிந்துகொண்டிருந்தது. விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்க முடியாது நஞ்சு அருந்தி உயிரை விட்டனர். நான் பதவியேற்றதும் இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் இல்லாதொழித்தேன். சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு அடிபணியாது பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டினேன். இது தொடர்பில் பல நாடுகள் எனக்குக்கடுமையான நிபந்தனைகளை விதித்தன. அவை அனைத்தையும் நான் தூக்கி வீசிவிட்டேன்.

புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்த முயற்சி செய்து தோற்றுப் போனவர்கள் இப்போது ஒன்றிணைந்து எனக்கு எதிராக செயற்படுகின்றனர். இன்று நாம் முற்றாக சுதந்திரமடைந்த நாட்டில் வாழுகின்றோம். முழுமையான சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றோம். மாற்றமுடியாத ஒன்றிணைந்த ஒரு சமூகமாக எம்நாட்டு மக்கள் இப்போது இருக்கின்றனர். புலிகளை முற்றாக ஒழித்து நாட்டுக்கு முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க எமது இளைஞர்கள் கடும் தியாகத்தைச் செய்தனர் என்பதை எம்மால் மறுக்க முடியாது.  எம்முள் உள்ள இப்போதைய பிரச்சினை அபிவிருத்தியே பயங்கரவாதத்தை ஒழித்ததன் பிறகு இப்போது எம்முன்பாக உள்ள பிரச்சினை அபிவிருத்திதான். நாம் இப்போது பல அபிவிருத்திட்டங்களை நிறைவு செய்துள்ளோம். சில திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றோம். இந்நாட்டு மக்கள் அனைவரும் இந்நாட்டில்தான் வாழவேண்டும். அவர்களுக்கு இங்கு வாழ இடமில்லை என்று எவராலும் கூறமுடியாது.

எமது நாட்டு இளைஞர்கள் வெளிநாடுகளுக்குத் தொழில்வாய்ப்புத் தேடிச் செல்லும் நிலை மாறி வெளிநாட்டு இளைஞர்கள் எமது நாட்டுக்குத் தொழில் தேடிவரும் நிலை வரும். இந்த நாட்டில் ஊழல், மோசடிகளை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும். ஜனவரி 27 ஆம் திகதிக்குப் பின் நான் ஊழல், மோசடிகளை முற்றாக ஒழித்துக்கட்ட என்னை அர்ப்பணிப்பேன். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கும் வாக்குகள் இந்நாட்டின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வாக்குகளாகும்.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்ற சக்திகள் இன்னும் உள்ளன. இன்னொரு ஈழப் போராட்டத்திற்கு வழி அமைக்க அந்த சக்திகள் முயற்சி செய்துகொண்டிருக்கின்றன.

அவ்வாறான தேச விரோத சக்திகளைத் தோற்கடிப்பதற்கு இந்நாட்டு மக்கள் தயாராக வேண்டும். வடக்கு மக்கள் அவர்களது தேவைகளைத் தாங்களே நிறைவேற்றிக் கொள்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் விதத்தில் அங்கு விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்  என்றார்.

Exit mobile version