Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பன் கீ மூனின் இலங்கை சார்பு நிலை : தனிப்பட்ட உறவு?

ஐ.நா.: இலங்கையுடனான தனது தனிப்பட்ட மற்றும் நன்கறியப்பட்ட உறவுகளுட்பட பல சர்ச்சைகளில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் சிக்கியிருக்கும் நிலையில், பான் கீ மூனின் மருமகன் சித்தார்த் சட்டர்ஜி, இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையில் பணியாற்றியிருந்தார் என்ற விடயம் சம்பந்தமில்லாத ஒன்று என்று பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நீசேர்க்கி கடந்த புதன்கிழமை தெரிவித்திருக்கிறார்.

நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸ் செய்திச்சேவை இதனைத் தெரிவித்திருக்கிறது.இது தொடர்பாக இன்னர்சிற்றி பிரஸின் நிருபர் மத்தியூ ரஸல்லீ நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருப்பதாவது;

கடந்த மார்ச்சில் இது தொடர்பான கேள்வியை செயலாளர் நாயகத்தின் பேச்சாளரின் அலுவலகத்திடம் எழுத்து மூலம் இன்னர்சிற்றி பிரஸ் கேட்டிருந்தது. ஆனால், பதிலை பெற்றுக்கொள்ள முடியவில்லை. செப்டெம்பர் 13 இல் இந்தக்கேள்வியையும் அதேசமயம், மற்றொரு தொடர்புபட்ட கேள்வியையும் ஐ.நா. வின் மதியவேளை செய்தியாளர் மாநாட்டின்போது இன்னர்சிற்றி பிரஸ் கேட்டுக்கொண்டது.

இன்னர்சிற்றி பிரஸ்: செயலாளர் நாயகத்துக்கு ராஜபக்ஷவுடனான தனிப்பட்ட உறவு தொடர்பாக உங்களால் விபரிக்க முடியுமா? செயலாளர் நாயகமாக வருவதற்கு முன்னதாக உறவுகள் உட்பட அதனை தெரிவிக்க முடியுமா? அத்துடன், முன்னைய சமாதான பேச்சுவார்த்தைகளின்போது இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் நிலைகொண்டிருந்த இந்திய சமாதானப் படையில் பான் கீ மூனின் மருமகன் பணியாற்றியிருந்ததை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? இலங்கையுடனான செயலாளர் நாயகத்தின் தொடர்புகள் குறித்து விபரங்களை அறிந்துகொள்ள முடியுமா?

பேச்சாளர் நீசேர்க்கி: இந்த இரு கேள்விகள் தொடர்பாகவும் நான் பின்னர் உங்களுக்குக் கூறுகிறேன்.

இருவாரங்கள் கழிந்த பின்னர் பதில் வழங்கப்படவில்லை. அதேவேளை, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பான் கீ மூன் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக நீசேர்க்கியின் அலுவலகம் அறிக்கையை வெளியிட்டிருந்தது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் தொடர்பாக ஜனாதிபதி செயலாளர் நாயகத்திற்கு எடுத்துரைத்த விடயம் உட்பட சந்திப்புக் குறித்து அறிக்கைச் சுருக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பான் கீ மூனின் அறிக்கையில் இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. வின் நிபுணர்குழுத் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இலங்கையிலுள்ள ஜனாதிபதியின் அலுவலகம் விடுத்திருந்த அறிக்கையில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியூயோர்க்கில் நேற்று இலங்கை தொடர்பான தனது நிபுணர் குழு குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குக் கூறியிருந்தார். இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கான அதிகாரங்கள் தனது குழுவுக்கு இல்லையெனவும் அக்குழுவானது இலங்கை தொடர்பான விடயங்கள் குறித்து அவருக்கு (பான் கீ மூன்) ஆலோசனை வழங்குவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜனாதிபதியின் அலுவலகம் விடுத்திருந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கைகள் குறித்து இணக்கப்பாட்டுக்கு வருமாறு செப்டெம்பர் 27 இல் மார்ட்டின் நீ சேர்க்கியிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது. செயலாளர் நாயகத்துடனான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தைகள் தொடர்பான அறிக்கைகள் குறித்து ஐ.நா. கருத்துத் தெரிவிக்காமல் விடுவது சாதாரண விடயமென நீசேர்க்கி கூறியுள்ளார்.

செப்டெம்பர் 29 இல் ஐ.நா.வின் அறிக்கையானது அதாவது ஜனாதிபதி ராஜபக்ஷவின் கருத்துகளை உள்ளடக்கிய பந்தி உட்பட ஐ.நா. விடுத்த அறிக்கையானது வழமையானதல்ல என்று பான் கீ மூனின் ஆலோசகர் நிக்கலஸ் ஹேசம் இன்னர்சிற்றி பிரஸுக்குக் கூறியுள்ளார். பான் கீ மூனுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் தனிப்பட்ட சந்திப்பு இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை,ராஜபக்ஷவுடனான பான் கீ மூனின் தொடர்புகள் மற்றும் இலங்கையுடனான பான் கீ மூனின் மருமகன் தொடர்புகளைப் பற்றி இன்னர்சிற்றி பிரஸ் ஐ.நா. பேச்சாளர் மார்ட்டின் நீசேர்க்கியிடம் கேட்டிருந்த கேள்விகள் தொடர்பாக பதிலளிக்கையில் பொருத்தமில்லாதவை என்று நீசேர்க்கி பதிலளித்துள்ளார். பான் கீ மூனின் அலுவலகம் அவரின் மருமகன் தொடர்பான கேள்விகளை முன்னர் நீக்கியிருந்தது. ஐ.நா. முறைமையூடாக அவர் துரிதமாக மேலெழுந்து வருவது குறித்த கேள்விகளை ஐ.நா. நீக்கியிருந்தது. செயலாளர் நாயகத்தின் மருமகன் சித்தார்த் சட்டர்ஜி எங்கே தனது பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். திருமதி சிப்ரா சென் உடனான அவரின் வழக்கின் நிலைமை என்ன என்று தயவுசெய்து குறிப்பிடுமாறு இன்னர்சிற்றி பிரஸ் நீசேர்க்கியின் அலுவலகத்தை எழுத்து மூலம் கேட்டிருந்தது. திருமதி சிப்ரா சென்னுடன் இன்னர்சிற்றி பிரஸ் தொடர்பை மேற்கொண்டிருந்தது. இல்லாவிடில் அவர் நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாதென இன்னர்சிற்றி பிரஸ் கூறுகிறது. சித்தார்த் சட்டர்ஜி, பான் கீ மூனின் மகளான ஹையூஜியுடன் சம்பந்தப்படுவதற்கு முன்னராக சித்தார்த் சட்டர்ஜியை சிப்ரா சென்னை திருமணம் செய்திருந்தார். நீதிமன்றத்தில் தன்னை நிராகரிப்பதற்காக அவரின் தொடர்புகளை சட்டர்ஜி பயன்படுத்தியதாக சிப்ரா சென் கூறுகிறார்.இன்னர்சிற்றி பிரஸிடம் பேசியதற்கு எதிராக அவர் அச்சுறுத்தப்பட்டிருந்தார்.

இந்திய இராணுவத்துடன் சட்டர்ஜி இருந்த காலத்தில் அதாவது இலங்கையில் அவர் இருந்த காலத்தில் துஷ்பிரயோகம் மற்றும் போர்க் குற்றங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக இன்னர்சிற்றி பிரஸுக்கு சென் விபரித்திருக்கிறார். இந்த விடயமானது பான் கீ மூனோ அல்லது அவரின் அலுவலகமோ கருத்துத் தெரிவிப்பதற்கு முக்கியமானதாகத் தென்படுகிறது. ஆனால், நீசேர்க்கி இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். கேள்விகள் தொடர்ந்து இருக்கும் என்று இன்னர்சிற்றி பிரஸ் கூறுகிறது.

Exit mobile version