எந்தக் கூச்ச உணர்வுமின்றி இந்தியாவை கை பிடித்து அழைத்துவர வேண்டும் என்று கூறுகின்ற இந்த அமைப்பு தனது பிரச்சார வேலைகளை புலம்பெயர் நாடுகளில் முடுக்கிவிட்டுள்ளது. புலியெதிர்ப்பு என்ற தலையங்கத்தில் இவர்களோடு கைகோர்த்துக்கொள்ளும் அமைப்புக்கள் அண்மையில் கனடாவிலும் பிரான்சிலும் நடத்திய பத்மநாபா நினைவுதினக் கூட்டங்களில் இனியொரு.. இணையம் தம்மீது அவதூறு செய்வதாக போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள்.
கடந்தகால அரசியல் குறித்த விமர்சனக்கள் வெளிவரும் முன்வைக்கப்படும் போதெல்லாம் அவதூறுகளும் மிரட்டல்களும் வழமையானவை. இனியொருவிற்கு கடந்த சில நாட்களாக வெளிவரும் மிரட்டல்கள் எமது கருத்துக்களின் வெற்றியையே வெளிப்படுத்துகிறது.
கனடாவில் நடைபெற்ற பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் நினைவு தினக் கூட்டத்தில் ஈபிடிபி, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், சுரேஸ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈரோஸ். சம உரிமை இயக்கம் ஆகிய அமைப்புக்கள் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஈபிஆர்எல்எவ் இன் மீது சுதந்திரமான தமது கருத்துப் பதிவுகளை விமர்சனங்களாக முன்வைத்த பலரும் இந்திய இராணுவத்தின் பிரசன்ன காலத்தில் ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் சிலர் இயக்க கட்டுப்பாட்டையும் மீறி மக்களுக்கு எதிராக செயற்பட்டனர் என்ற விடயங்கள் சம்பவ ரீதியாக எடுத்துரைத்தனர். இது தோழர் பத்மநாபாவின் ஏற்புடன் நடைபெற்றிருக்க வாய்ப்புக்கள் இல்லை என்று தாம் நம்புவதாகவும் கருத்துக்கள் தெரிவித்தனர்.
இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் இலங்கையில் வந்திறங்கி போர்க்குற்றங்களில் இந்தக் கும்பல் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது ரூபவாகினி தொலைக்காட்சியில் தோன்றிய வரதராஜப் பெருமாள் நாங்கள் இது பழை ஈ.பி.ஆர்.எல்.எப் அல்ல புதியது என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறோம் என்றார். ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர்கள் தங்கியிருந்த அசோக் கோட்டேல் அப்போது மனித கசாப்புக் கடையாக மாறியிருந்தது என்பதை யாரும் மறந்துவிடவில்லை.
நமது கடந்தகால அரசியல் நவடிகைகளைச் சுயவிமர்சனம் செய்துகொண்டு தவறுகளைத் தவறுகளாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் இலங்கையில் இன்னும் அழிவுகள் தவிர்க்க முடியாதவை.