இந்து அடிப்படைவாதக் கட்சியும் இந்த நூற்றாண்டில் மத வெறியை வெளிப்படையாக உமிழும் கட்சியும்மான பாரதீய ஜனதாக் கட்சியின் பாரளுமன்றக் குழுத் தலைவரின் கொலை வெறி மனித குலத்திற்கு அவமானம்.
மனிதர்களிடையே பிளவுகளைத் தோற்றுவித்து பல்லாயிரக்கணக்கில் உயிர்களைப் பலியெடுக்கும் மத அடிப்படை வாதிகள் பல நூற்றாண்டுகளாகப் பார்ப்பன பாசிசத்தை இந்திய மக்கள் மத்தியில் விதைத்துள்ளார்கள்.
இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது.
ஹேம்ராஜின் உறவினர்களைச் சந்திக்க பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் சென்றனர்.
ஹேம்ராஜின் குடும்பத்தினரை சந்தித்த பிறகு சுஷ்மா சுவராஜ் அளித்த பேட்டியில், ” இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து, நமது வீரரை சுட்டுக் கொன்றுவிட்டு, அவரின் தலையையும் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இன்னும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு தேடத் தான் இந்திய அரசு முயற்சித்து வருகின்றது. பலவீனமான அரசு என்று மக்கள் கூறி வருவதை மாற்ற பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடியை இந்திய அரசு தர வேண்டும். ஹேம்ராஜின் தலையை கண்டுபிடித்து கொண்டுவர முடியவில்லை என்றால், எதிர்தரப்பில் இருந்து 10 தலைகளையாவது இந்தியா கொண்டு வர வேண்டும் ” என அவேசமாக கூறினார்.