வங்காளத்திலுள்ள கிராமமொன்றில் வறுமையோடு போராடும் ஒரு சிறிய குடும்பத்தின் கதைதான் ‘சாலையின் பாடல்’ என்ற பதேர் பாஞ்சாலி. கவிஞனாகும் கனவு மனதிலிருக்க, இல்லாமை சிறு சிறு வேலைகளைச் செய்து பிழைக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளிவிடும் கணவனாக ஹரிஹர ராய். கணவனது சொற்ப வருமானத்தில் அதிருப்தியுற்றவளாக வறுமையின் குரூரத்தோடு தினமும் போராடும் மனைவியாக சர்வஜெயா எனும் பாத்திரம். இந்த இருவரின் பிள்ளைகளாக துர்க்கா எனும் பதின்ம வயதுப் பெண் மற்றும் அவளது தம்பி அபு. இவர்களைத் தவிர, இந்தக் குடும்பத்தோடு வந்து ஒண்டிக்கொண்டிருக்கும் உறவுக்கார மூதாட்டியொருத்தி. இந்த ஐவரையும் மையமாகக் கொண்டு கதையின் அச்சு சுழல்கிறது. குடும்பத்தின் வறுமையும் துர்க்கா-அபு இருவரின் பால்யமும் இணைந்தே இந்தக் கதையை எழுதிச்சென்றிருக்கின்றன. வறுமை விளைவித்த வலிந்த புறக்கணிப்பின் துக்கத்தோடும் அவமானத்தோடும் அந்த மூதாட்டி செத்துப்போவதும், தன்னுடலை வருத்தி உழைத்தபோதும் குடும்பத்தைப் பிடுங்கித் தின்னும் தரித்திரத்தை விரட்ட முடியாதிருப்பது கண்டு ஹரிஹர் உழைப்பைத் தேடி வேறிடம் செல்வதும், அவனுடைய இன்மையால் மனைவியும் குழந்தைகளும் அக்கக்காகக் கிழிபடுவதும், அவன் மீண்டும் திரும்பிவரும்போது மழையில் நனைந்து காய்ச்சல் வந்து துர்க்கா இறந்துபோயிருப்பதும் அதன்பின் எஞ்சிய மூவரும் அந்த இடத்தைவிட்டுப் பெயர்ந்து வாழ்வைத் தேடி வேறிடம் செல்வதும்தான் திரைப்படத்தின் கதை.
திரைப்படம் என்பதுவும் ஒரு கலை என்ற ஞாபகம் சமீபத்திய அளிக்கைகளால் காணாமற் போய்க்கொண்டிருக்கிறது. கேளிக்கை என்ற பொருளை விற்கும் மாபெரும் வணிக நிறுவனமாக அது மாறிவருவதைக் காண்கிறோம். கொடிய கோடையிலிருந்து சடுதியாக இதமானதொரு குளிருடன் கூடிய மழைநாளுக்குள் பிரவேசித்துவிட்ட உணர்வை பதேர் பாஞ்சாலி தந்தது என்று சொல்வதே பொருந்தும். விறுவிறுப்புக்கும் பேராரவாரங்களுக்கும் புனித பிம்பங்களுக்கும் பழக்கப்பட்டுவிட்டுப் போன கண்களை, கூசவைக்கும் பேரொளி அது. உள்ளதை உள்ளவாறு சொல்வதற்கும் உள்ளதை உள்ளவாறே காட்டுதற்கும் அசாத்தியத் துணிச்சல் வேண்டும். யதார்த்தத்தைக் காட்சிப்படுத்தும்போது சற்று சறுக்கினாலும் கலையின் நுட்பம் சிதைந்து சலிப்பூட்டுவதொன்றாக மாறிப் போய்விடக்கூடும். ஆனால், பதேர் பாஞ்சாலி யதார்த்தத்திற்கும் கலைக்கும் இடையில் நெருடாமல் நிரவல் செய்திருக்கிறது. நாமெல்லாம் பார்க்கப் பயந்து தப்பித்து ஓடிக்கொண்டிருக்கிற வாழ்வைப் பேசுகிறது அது. குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். வறுமை பூச்சுக்களற்ற வறுமையாகவே இருக்கிறது. நாயும் பூனையும் பாம்பும் பசுவும் இயற்கையும் அவையவையாகவே இருக்கின்றன.காணக்கிடைத்த அநேக படங்களில் குழந்தைகளின் உதடுகளால் பெரியவர்கள் பேசுவதையே நாம் கேட்டிருக்கிறோம். பதேர் பாஞ்சாலியின் துர்க்காவும் அபுவும் தங்கள் வார்த்தைகளால் பேசுகிறார்கள். தங்கள் கண்களால் உலகத்தைக் காண்கிறார்கள். அபுவுக்கு தமக்கைதான் ஆதர்சம். ஏறக்குறைய படம் முழுவதிலும் துர்க்காவை வியப்பின் விழிகளாலேயே பார்த்துக்கொண்டிருக்கிறான். இருவரும் சணல் பூத்த வெளியினூடாக ரயில் வருவதைப் பார்க்க ஓடும்போதும், கூட்டாஞ்சோறு காய்ச்சி விளையாடும்போதும், தங்களால் வாங்கமுடியாத மிட்டாய்களைச் சுமந்துசெல்பவனைத் தொடரும்போதும், துர்க்கா மழையே அவளாக மாறி நனைந்து குதூகலிக்கும்போதும் அவரவர் பால்யத்துள் நின்றுகொண்டிருப்பதைப் போன்றிருந்தது. மேலும், வறுமையின் கொடிய நிழல் குழந்தைகளின் ஆசைகளை ஒருகணம் இருள்வெளியில் அமிழ்த்தினாலும், அவர்களின் அடிநாதமான உற்சாகத்தை, துள்ளலை, அவர்களுக்கேயுரித்தான உலகத்தின் அதிசயங்களை சேதாரம் செய்வதற்கில்லை என்பதை ரே அழகாகக் காட்டியிருக்கிறார்.
பாட்டிக்கும் பேத்தியான துர்க்காவுக்கும் இடையிலான உறவு அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பாட்டிக்காக கொய்யாப்பழங்களைத் திருடிக்கொண்டு வந்து கொடுத்து விட்டு அதை அவள் சாப்பிடும் அழகை ஒரு தாய்மையின் கனிவோடு அமர்ந்து துர்க்கா பார்க்கும் காட்சியும், வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டும்-வெளியேறியும் செல்லும் பாட்டி மீண்டும் வரும்போதெல்லாம் ஓடிப்போய் அவளது உடமைகளை வாங்கிக்கொண்டு அழைத்துக்கொண்டு வரும் நேசத்திலும் இருவருக்குமிடையிலான நெருக்கம் உணர்த்தப்படுகிறது.
உண்மை என்பது பலசமயங்களில் கொடுமையானதே. மூதாட்டியின் தனிமை சூழ்ந்த நிராதரவான வாழ்வும் மரணமும் மனசை உலுக்கி எடுத்துவிடுகின்றன. யாரையாவது சார்ந்தே வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு முதுமை தள்ளிவிடுவதையும், வறுமையின் நிமித்தம் அவளை மேலதிகமான ஒரு வயிறாக மட்டுமே சுற்றியுள்ளவர்கள் பார்ப்பதையும், தன்னைப் புறக்கணிப்பதறிந்தும் வேறு வழியற்று அவள் தானே நம்பாத காரணங்களை முன்வைத்தபடி உறவுக்கார வீடுகளில் ஒண்டிக்கொள்ள நுழைவதும், அங்குமிங்குமாக ஒரு பந்தினைப்போல எறியப்பட்டு ஈற்றில் அவமானத்தோடு இறந்துபோவதையும் பார்க்கும்போது நாமே குற்றம் இழைத்துவிட்டதைப்போல ஒரு பதைப்பு! அந்தளவிற்கு, ‘ஒரு சினிமாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்’என்ற உணர்வே தோன்றாத அளவிற்கு நிதர்சனமான பாத்திரப்படைப்பு அந்த மூதாட்டி. அவள் தோன்றும் கடைசிக் காட்சியில் சாப்பாட்டைக் கண்டவுடன் முகத்தில் பரவும் சிரிப்பும் அது தனக்குக் கிடைக்காதென்றறியும் போது அந்த சிரிப்பு எண்ணெய் தீர்ந்த விளக்கினைப்போல மெல்ல மெல்ல மங்கி தளர்நடையுடன் வெளியேறுவதும் பார்த்துக்கொண்டிருக்கும் இதயங்களில் பசியின் கொடுவாளைப் பாய்ச்சுகிறது.
வறுமையின் தாக்குதலை நேரடியாக எதிர்கொள்ளும், அதற்கெதிராக முடிந்தவரை போராடும் பாத்திரமாக சர்வஜெயா என்ற பாத்திரம் வருகிறது. தன்னைச் சுற்றியுள்ள உறவுகளிடத்திலெல்லாம் ஒரு ‘பாராமுக அன்பை’ப் பொழிந்துகொண்டேயிருக்கிறாள். துர்க்கா திருடுகிறாள் என்பதனால் அவள் மீது கடுமையும் கண்காணிப்புமாக இருக்கும் அவளே ஒரு சந்தர்ப்பத்தில் கீழே விழுந்து கிடந்த தேங்காயை மற்றவர்கள் அறியாமல் மடியில் முடிந்துகொண்ட காட்சியில் பசி எல்லாவற்றையும் விழுங்கிவிடுகிறது என்பது வார்த்தைகளின் உதவியின்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.
துர்க்கா என்ற அந்தச் சிறுமியின் கண்களில் ததும்பிய உயிர் ஏறக்குறைய படம் முழுவதையும் நனைக்கிறது. தன் சக வயதொத்த தோழியின் திருமணத்தின்போது கண்களில் நிறையும் ஏக்கம் படிப்படியாக வளர்ந்து ஒரு கண்ணீர்த்துளியாகத் திரளும்போது காட்சி முடிந்துவிடுகிறது. மிகுதியைப் பார்வையாளருக்கு விட்டுவிடுகிறார் ரே. அவள் சிறுமியாக,பதின்ம வயதுக்குரிய ஏக்கங்களையுடைய பெண்ணாக,சில சமயங்களில் தாய்மையின் கருணையோடும் காட்டப்பட்டிருக்கிறாள்.
கலை என்பது ஒரு தீக்குச்சியை உரசும். அந்த ஒளியில் சுடரெடுத்துப் பற்றவைத்து பாதையைக் கண்டுபிடித்துத் தொடர்பவனே நல்ல கலாரசிகன். இத்திரைப்படம் கறுப்பு-வெளுப்புத்தானென்றாலும் பசிய வயல்களை,சணல்காடுகளை,மரங்களை,மழையை,ஏரியை இயற்கையின் எல்லா அழகையும் விழிகளுக்குள் எடுத்துவரத் தவறவில்லை. நீர்நிலையில் மழைத்துளி விழும்போது நீர்ப்பூச்சிகளும் இலைகளும் அசைவதும் அவைகளை முன்னிறுத்தி துர்க்கா மழையில் ஆனந்தமாக நனைந்தாடுவதும் அதை மரத்தினடியில் ஒண்டிக்கொண்டிருந்தபடி அபு வியப்போடு பார்த்துக்கொண்டிருப்பதும் கவிதை.
இசை இந்தப் படத்தின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் வசனங்களின் இடத்தை இசை நிறைவாக நிரவிவிடுகிறது. நாம் பெருவாரியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் சினிமாக்களில் யாராவது இறந்துபோக நேரும் இடங்கள் மிகுந்த துக்ககரமானவை. அதாவது, தனது மூச்சு நின்று போவதன் முன் இறந்துகொண்டிருப்பவர் பக்கம் பக்கமாக வசனம் பேசி விட்டே மூச்சை விடுவார். ஆனால், துர்க்கா இறந்துபோனதாகக் காட்டும் முதற்காட்சியில் ஒரு வார்த்தை இல்லை….! ஒரு கதறல் இல்லை! அயல் வீட்டுப் பெண்ணின் தோளில் சாய்ந்திருக்கும் முகம் துயரத்தின் திகைப்பில் இறுகிக்கிடக்கிறது அவ்வளவே. பொருள் தேடிக்கொண்டு திரும்பிவரும் தந்தை துர்க்காவைத் தேடுகிறார். அவளுக்காகத் தான் வாங்கிவந்திருக்கும் சேலையைக் கையில் எடுத்துக்கொண்டு அவளை அழைக்கும்போது தாய் அந்தச் சேலையை வாங்கி வாயில் புதைத்துக்கொண்டு வெடித்து அழுகிறாள். அந்தக் கதறலோடு ஓரிரு வார்த்தைகளோடு இசையும் சேர்ந்து அழுகிறது.
துர்க்கா மழையில் நனையும்போது இசையும் சேர்ந்து பொழிகிறது. இசையும் தண்ணீரில் விழும் மழைத்துளிகளும் இணைந்து வார்த்தைகளற்ற கவிதையொன்றைத் திரையில் எழுதியிருந்தன.அவள் தாயிடம் அடி வாங்கும்போது ட்ரம்மின் ஓசை அதனோடு இழைகிறது. முன்னொருபொழுதில் துர்க்கா களவெடுத்ததாக குற்றஞ் சாட்டப்பட்டு அவள் இல்லையென மறுத்த மணிமாலையை, அவள் ஒளித்துவைத்திருந்த இடத்திலிருந்து அவளது மரணத்தின் பின் அபு கண்டெடுத்தபோது, மீண்டும் அந்த ட்ரம்மின் ஓசை மெல்லெனக் கிளம்பி, அதை யாருடைய கண்ணிலும் படாமல் அவன் குளத்தில் எறியும்போது தேய்ந்து ஓய்கிறது.
இந்தச் சாலையின் பாடலை இசைத்துக்கொண்டிருந்த துர்க்கா இறந்ததும் உண்மையில் கதை முடிந்திருக்கவேண்டும். சாதாரணமாக நமது படங்களில் என்றால் உறைநிலைக்குப் போயிருக்கும். ஆனால், அதன்பிறகும் வாழ்க்கை எஞ்சி இருக்கிறது என்பதை தொடர்ந்து வந்த காட்சிகளின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் ரே. துர்க்காவின் மரணம் அபுவின் குழந்தைமையைப் பறித்துக்கொண்டுவிடுவதை, அவளது மரணத்தின் பின் அபு வெளியே போகும்போது மழைவருவதுணர்ந்து உள்ளே வந்து குடையை எடுத்துக்கொண்டு போவதன் மூலம் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
துர்க்கா இறந்துகொண்டிருந்த அந்த இரவில் அணையத் துடித்த விளக்கும் விழுந்துவிடுமாற்போலிருந்த பிள்ளையார் சிலையும் போன்ற சினிமாத்தனங்களை ரேயின் கலைக்கண்கள் எப்படி ஏற்றுக்கொண்டன என்பதுதான் வியப்பு. கடும் மழை இரவு அவற்றிற்கான அவசியத்தைக் கொடுத்ததா?
அந்தக் குடும்பம் ஊரைவிட்டுப் போய்க்கொண்டிருந்த அதேசமயம், சிதிலமடைந்து கைவிடப்பட்ட அவர்களின் வீட்டிற்குள் பாம்பொன்று ஊர்ந்து போகிறது. பயத்தில் கண்களைத் தாழ்த்திக்கொண்டபோது, மிகுபுனைவுகளற்ற யதார்த்தத்தினையும் எதிர்கொள்ள முடியாது நாம் இப்படித்தான் கண்களைத் தாழ்த்திக்கொள்கிறோம் என்று அப்போது நினைக்கவில்லை. இப்போது நினைக்கிறேன். துர்க்காவும் அபுவும் சர்வஜெயாவும் ஹரிஹர ராயும் இந்திராப் பாட்டியும் காலம் அழித்துவிடும் சித்திரங்களல்ல. அவர்கள், கண்களிலிருந்து எப்போதும் வழிய முடியாது உறுத்திக்கொண்டேயிருக்கும் கண்ணீர்த்துளிகள்.
நன்றி: http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_04.html#comment-5017210742268710969
படம் பார்க்க:
http://sinnakuddy1.blogspot.com/2007/03/video_05.html