வன்னிப்பகுதியில் இருக்கின்ற மக்கள் எறிகணை வீச்சுக்களில் இருந்து தம்மைத் காத்துக்கொள்வதற்காக பதுங்குகுழிகளை அமைத்து அவற்றில் தங்கியிருக்குமாறு விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவின் சார்பில் வெளியிடப்பட்டதாகக் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது..
அனைத்து இடங்களிலும் பதுங்குகுழிகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்ற அந்த அறிக்கையில், எறிகணைவீச்சுக்கள் மற்றும் வான் தாக்குதல் நிகழும் சந்தர்ப்பங்களில் உடனடியாகவே மக்கள் பதுங்குகுழிகளில் பாதுகாப்புத் தேட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கையின் வடக்குக் களமுனைகளில் நேற்று இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 42 விடுதலைப்புலிகளும், 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. இந்த மோதல்களில் 17 படையினர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.
எனினும் வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதியில் மும்முனைகளில் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் 12 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர். என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது..