Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பண்பாட்டு அடையாளங்கள் சிதைதலும் ஓர் ஆப்பிரிக்க இலக்கியப் பதிவும்:ஹரிஹரன்

வாழ்வோரின் நிறத்தால் மட்டுமல்ல, அங்கு நிறைந்திருக்கும் இனக்குழுக்களின் வாழ்முறைமைகள், மரபுகள் மற்றும் தரைத்தோற்றங்கள், அடர்வனங்களாலும் கூட ஆப்பிரிக்கா ஒர் இருண்ட கண்டம் தான்ளூ அப்பிரிக்காவைக் கதைக்களனாகக் கொண்டமைந்த ஆங்கில இலக்கியப் பிரதிகளும், ஆய்வுகளும் மேற்கூறியதையே இதுவரை காலமும் நமக்குச் சொல்லி வந்திருக்கின்றன. வெள்ளைமையவாதம், கொண்ட ஆங்கில இலக்கியப் புனைவு வெளி நெடுகிலும் ஆப்பிரிக்கவைச் சாத்தனின் தேசமாகவும், காட்டுமிராண்டிகளின் வாழ்விடமாகவும் காட்ட முயற்சிக்கும் சித்தரிப்புகள் இறைந்து கிடக்கின்றன. கொண்டாடப்படும் புனைவுகளான Heart of Darkness (Joseph Conrad), Moby Dick (Herman Mellville) ஆகியவற்றில் காணப்படும் இனத்துவே?ப் போக்குகளை டிக் கிரகொரி போன்ற விமர்சகர்கள் விமர்சித்த போதும் அவ்விமர்சனங்கள் கவனத்தில் கொள்ளப் படவில்லை.

உன்னதமானவை என முத்திரை குத்தப்பட்டு வாசகர் முன்னிறுத்தப்படும் வெள்ளை இனமையவாதமுடைய ஆங்கில இலக்கியப் பிரதிகள் மறைமுகமாக வாசக மனதில் ஆப்பிரிக்காவைப் பற்றிய எதிர்மறையான மனப்பதிவையும், வெள்ளைமையச் சார்பு கொண்ட கருத்து நிலையையும் தூண்டும் வல்லமை கொண்டவை. ஒருவித கருத்தியல் ஆதிக்கத்தை இதன் மூலம் நிறுவி ஸ்திரப்படுத்த முயற்சி செய்யும் ஆங்கிலப் பிரதிகளின் நுண் அரசிய லை கேள்விக்குள்ளாக்கும் விதத்திலும், ஆபிரிக்காவை காலனித்துவ அடிமை மனோபாவத்திலிருந்து விடுவிக்கும் நோக்கிலும் ஆப்பிரிக்காவில் எதிர்ப்பிலக்கிய அலையொன்று தோன்றிற்று.

வோல் சொயின்கா, சின்னுவ அச்செபே, ங்குகி போன்றோர் அவ்வலையின் முக்கியமான ஆரம்ப காலப் படைப்பாளிகள். காடுமிராண்டிகள் என வர்ணிக்கப்பட்ட நீக்ரோ மக்களது வாழ்வையும் மரபுகளையும் இலக்கிய விபரிப்புக்கு உட்படுத்திய போது இவர்களுடைய படைப்புகள் பரவலான கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன. பொதுவாகவே ஆங்கிலேயரால் சிதைக்கப் பட்ட கலாச்சார, இன மத அடையாளங்களையும் அவற்றின் தனித்துவங்களையும் மீள் நிர்மாணம் செய்வதையே இப்பிரதிகள் தமக்குள்ளும், வெளியிலும் நிகழ்த்தின. அப்படைப்புகளுக்குள் குறிப்பிடத்தக்க நாவல் சினுவா அச்செபேயின் Things Fall Apart. 1930இல் பிறந்த சினுவா அச்செபே இந்நாவலை தனது 28வது வயதில் எழுதினார். 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட பிரதிகள் விற்றுத் கீர்ந்ததும், 40 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருப்பதும் இந் நாவலின் சாதனைகள்.

நைஜீரியாவின் உமுஓஃபியா கிராமத்தைக் களமாகவும், இபோ இனத்தின் முக்கியஸ்தர்களைக் கதை மாந்தர்களாகவும், கொண்டிருக்கிறது நாவல். கதையின் நாயகனான ஒக்கொன் க்வோ உமுஓஃபியாவில் ஆண்மையினதும் வீரத்தினதும் சின்னமாகக் கருதப் படுபவன். மிகவும் குறைந்த வயதிலேயே மாபெரும் மல்யுத்த வீரன் ஒருவனை அவன் தோற்கடித்திருக்கிறான். ஆதிக்க சுபாவம் உள்ளவனாகவும் கடின உழைப்பாளியாகவும் விளங்கும் ஒக்கொன் க்வோவின் பிள்ளைப்பராயம் மிகவும் கசப்பானது. அவனது தந்தை உனோக்கா கடனிலேயே செத்துப் போனான். உனோக்காவின் பொழுது இசைக்கருவிகளை இசைத்து லயிப்பதிலும் ஒக்கொன் க்வோவின் பொழுது இசையை வெறுப்பதிலும் கழிந்தது. உனோக்கா நிலபுலன் களுக்கோ பதவிகளுக்கோ சொந்தக்காரன் அல்ல. உமுஓஃபியாவில் நிலபுலன் களோ பதவிகளோ இல்லாத ஒருத்தனை, சாகச மனோபாவமற்று இசையை ரசிக்கும் ஒருவனை பெண்ணாகவே கருதுவர். ஒக்கொன் கோவின் சமவயதுக் காரச் சிறுவர்கள் உள்ளிட அனைவரும் உனோக்காவை ஒக்கொன் க்வோவின் முன்னிலையிலேயே கேலி செய்வது வழக்கம். அந்த சமயங்களில் எல்லாம் ஒக்கொன் க்வோ அவமானத்தையும் வலியையும் உணர நேரிட்டது. ஒக்கொன் க்வோ, தனது தந்தையின் ஊர் பழிக்கும் பெண்மைத் தனங்களை மிகவும் வெறுத்தான். அன்பு பாசம் கருணை இரக்கம், இரசனை போன்ற ‘பெண்மைத் தனங்கள்’ மீதான ஒர் இரகசிய வெறுப்பு அவன் மனதில் வளர்ந்து கொண்டே வந்தது. வீரனாக மட்டுமே தான் வளர வேண்டுமெனக் கங்கணம் கட்டிக் கொண்டு, ஒரு வித வீறாப்புடன் வளர்ந்தான். மேற்குறித்த பெணமித் தனங்கள் தனக்குரிய வை அல்ல என்றும் அவை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லக் கூடிய் அவை என்றும் அவன் தீவிரமாக நம்பினான்.

தகப்பனால் பெறமுடியாது போன அனைத்தையும் ஒக்கொன் க்வோ ஒரு வித மூர்க்கத்துடன் பெற முயல்கிறான். குறுகிய காலப்பகுதியிலேயே தன் இலக்கில் பாதியை அவனால் அடைய முடியுமாயிருக்கிறது. சமூகத்தில் தனது மதிப்பையும் அந்தஸ்தையும் குலையாது பேணுவதற்காக எந்த விலையையும் தர அவனது மனம் தயாராக இருக்கிறது. மூன்று மனைவிகளுக்குச் சொந்தக்காரனான அவனுக்கு இருக்கும் மனத்தடைகள் எண்ணற்றவை. இதோடு கூடவே அவனது மூத்த மகன் என்வோயி பெண்மைத்தனமான உந்துதல்கள் உடையவனாக இருப்பது அவனுக்கு எரிச்சலூட்டுகிறது.

அயல் கிராமம் ஒன்றில் நடந்த கொலைக்கு அபராதமாக உமுஓஃபியாவுக்கு அபராதமாகச் செலுத்தப் பட்ட இக்மேஃபியுhனா எனும் பை ய ன்னைப் பராமரிக்கும் பொறுப்பு ஒக்கொன் க்வோவிற்கு வருகிறது. இக்மேஃபியுhனா என்வோயியைப் போலன்றி அசல் ஆண்மகனாக – ஒக்கொன் க்வோவின் எதிர்பார்ப்புகளிற்கு ஏற்றவனாக – இருக்கிறான். ஒக்கொன் க்வோவிற்கு இக்மேஃபியுhனா மீது ஒருவித புத்திர வாஞ்சை ஏற்படுகிறது. என்வோயி கூட அவனைத் தனது சகோதரனாகவே நினைக்கும் அளவிற்கு இக்மேபியுhனா அவர்களுடன் ஒன்றி விடுகிறான்.

ஒரு கட்டத்தில் உமு ஓபியாவின் உயர்மட்ட முதியோர்கள் ஒன்று கூடி இக்மேபியுhனாவைப் பலியிடுவதற்குத் தீர்மானிக்கிறார்கள். ஒக்கொன் க்வோ, என்வோயி, இக்மேபியுhனா மூவரும் சேர்ந்து வெட்டுக்கிளி வறுவலைக் கொறித்துக் கொண்டிருந்த ஒரு மாலையில் கிராமத்தின் மரியாதைக்குரியவனான எசியுடு கிழவன் ஒக்கொன் க்வோவிடம் இத்தீர்மானத்தை கூறுகிறான். ஒக்கொன் க்வோவிற்கு இத்தீர்மானம் ஆழமான வலியை உண்டுபண்ணுகிறது. ஆனால், அவ்வலியை வெளிக்காட்டுவதோ, அத்தீர்மானத்தை மறுப்பதோ பெண் தனமானதாகக் கருதப் படும் என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிகிறது. தனது ‘அஞ்சா நெஞ்சுடைய ஆண்மையை’ நிருhபிப்பதற்காகப் பலியிடுதலுக்குச் சம்மதம் தெரிவிக்கிறான். இக்மேபியுhனா ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு நடுக்கானகத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப் படுகிறான். இக்மேபியுhனாவின் சாவு ஒக்கொன் க்வோவைக் குருhரமாக அறைகிறது. ஆனால், இக்மேபியுhனாவின் மரணம் தன்னில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதாகப் பாசாங்கு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு இருக்கிறது. அடக்கப் பட்ட உணர்வெழுச்சி மூர்க்கத்தைக் கிளறவும், கொலை காரனாகிறான் ஒக்கொன் க்வோ.

கொலையின் மூலம் ஒக்கொன் க்வோ தெய்வங்களின் கோபத்தைக் கிளறி விட்டான் என்று குற்றஞ் சாட்டப் படுகிறது. பிராயச்சித்தமாக உமுஓஃபியாவில் இருந்து வெளியேறுகிறான். அயல் கிராமமான ம்பான்ராவில் ஏழு வருடங்களைக் கழிக்கும் அவன் ஊர் திரும்புகையில் அனைத்துமே தலைகீழாக மாறியிருப்பதைக் காண நேர்கிறது.

ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் நிலப்பகுதியில் வெறுங்கால்களுடன் நிற்பது போலிருக்கிறது அவன் நிலமை. தான் முக்கியமற்றுப் போய்விட்டதை நினைக்கையில் அவனுக்குப் பதற்றம் வருகிறது. கிறிஸ்தவ மி்ஷனரி புதிய ஆதிக்க சக்தியாக இருப்பதையும் இபோக்களில் பலர் அதனுடனிருப்பதையும் அவனால் சகிக்க முடியவில்லை. காலங் காலமாக நிலவி வந்த பயங்களும் நம்பிக்கைகளும் வழக்காறுகளும் தகர்கின்றன. மி்ஷனரி, வர்க்கப் பிளவுகள் பலியிடுதல் ஆணாதிக்கம் போன்ற அனைத்திற்கும் எதிராக இருக்கிறது. ஒக்கொன் க்வோ தனது வெற்றி இலட்சியம் இபோ சமூகத்தின் வரம்புகளுக்குள் மட்டுமே சாத்தியம் என்பதை நன் கறிந்தவன். அவனது கனவுகளுக்கு மி்ஷனரி முட்டுக்கட்டையாக இருப்பதையுணர்ந்து அதை அழிக்க முயன்று தோற்று கொலைகாரனாகி பின் தானும் தற்கொலை செய்து கொள்கிறான் என்பதாக முடிகிறது நாவல்.

நடுங்கிக் கொண்டிருக்கிற, ஆட்டங்கண்டுகொண்டிருக்கிற நிலப்பகுதியில் வெறுங்கால்களுடன் நிற்பது எப்படியோ அப்படியானதுதான் தகர்ந்து கொண்டிருக்கும் விழிமியங்களுக்குள் சமூக இருப்பு என்பதுவும். அவ்வாறான அவல இருப்பை மேற்கொள்ளும் இனமொன்றின் பாடுகளை, அவர்களின் அன்றாட வாழ்க்கையை மிக இயல்பாக சினுவா அச்செபேயால் சொல்ல முடிகிறது. அச்செபே ஓர் தேர்ந்த கதை சொல்லி. இபோ மக்களுடைய நடத்தைகள், மரபுகள், உணவுப் பழக்க வழக்கங்கள்,? போன்றவற்றின் சுவையான விபரிப்புகள் மூலம் அசலான ஆப்பிரிக்க வாழ்வனுபவம் வாசிப்புச் செயற்பாட்டின் போது சாத்தியமாகிறது. உமுஓஃபிஆவின் இரவுகளைச் சித்தரிக்கும் பத்திகளை வாசிக்கையில், அந்த ஆப்பிரிக்க இரவின் இருளும் பயமும் அறையெங்கும் படிவதை என்னால் உணர முடிந்தது. உயிரோட்டமுள்ள சித்தரிப்புகள் நாவல் நெடுகிலும் நிறைந்திருக்கின்றன.

சிறந்த கதைக்கட்டுமானத்தைக் கொண்டிருக்கும் நாவலில் தனியே இபோ மக்களது வாழ்வும் அழிவும் மட்டும் பதிவாகவில்லை. மாறாக, அப்பதிவோடு கூடவே கதாபாத்திரங்களின் உளவியல் ரீதியான ஆளுமைக்கட்டமைவும் அலசப்படுகிறது. ஒக்கொன் க்வோவின் ஆதிக்க மனோபாவத்தை, அவனது குடும்ப சூழ்னிலைககள், சிறுவயதுச் சம்பவங்களின் பின்னணியில் தோற்றமுற்றதாகக் காட்டும் அச்செபே இத்னூடாக ஆதிக்க நடிப்பின் உளவியல் ரீதியான கட்டமைவை ஆராய்கிறார் எனலாம். ஆனால் இந்த உளவியல் அலசல் கதைப்போக்கில் இருந்து துருத்திக்கொண்டோ தனித்தோ தெரியவில்லை என்பது இதன் சிறப்பம்சம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாவலின் ஒரு பக்கத்தில் கூட வகுப்பறைகளில் இருப்பதைப் போன்ற உணர்வு எனக்கு ஏற்படவில்லை.

சிதைந்து கொண்டிருக்கும் இனக்குழு ஒன்றின் பார்வையாளனாக வாசிப்பாளரை நிறுத்தி நகர்த்தப்படும் நாவலில் யாரும் குற்றஞ்சாட்டப்படவோ போற்றப்படவோ இல்லை என்பது ஆறுதலளிக்கிறது. அசலான ஆப்பிரிக்க வாசிப்பனுபவத்தையும், ஆங்கிலேயப் புனைவுகள் மீதான மீள்பார்வையையும் சாத்தியமாக்குகும் சினுவ அச்செபே மீது எறியப்படும் குற்றச்சாட்டுகள் கவனிப்புக்குரிய வை.

சினுவா அச்செபே அளவிற்கு, தனது டெவில் ஒன் த க்ரொஸ் நாவல் மூலம் கவனம் பெற்றவரான எங்கூகி வா தியாங்கோ, சொயின் கா, அச்செபே போன்றோரின் பிரதிகளைக் கட்டுடைப்புச் செய்து அவை காலனித்துவ சிந்தனைப் போக்கின் நீட்சிகளே எனத் தெரியப்படுத்தினார். கிக்கியுh மொழியில் எழுதுவதில் அதீத நாட்டத்துடனிருப்பவரான எங்கூகிஆங்கிலத்தில் எழுதுகிற அச்செபேயின் நியாயங்களை ஏற்றுக் கொள்வதில்லை. ஆப்பிரிக்க மையவாதமுடைய எழுத்தாளர்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்கிறது. தியாங்கோவின் மதிப்பீடுகளின் படி சொயின் கா, அச்செபே ஆகியோர் ஆப்பிரிக்காவை காலனித்துவ நீக்கம் செய்யவேண்டும் என் கிற இலக்கிலிருந்து விலகிவிடுகிறார்கள். இதனால், நிலவியே ஆகவேண்டிய கறுப்பு இலக்கியச் சகோதரத்துவம் குலைந்து போகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் உண்டு. நாவலில் இபோக்களைக் குறைகூறி மிசனரியை நியாயப் படுத்துவதாக இருக்கும் கதைய மைப்பைக் குறைகூறி எழுந்த விமர்சனங்கள் போதாதென்று நைஜீரியப் பெண்கள் அமைப்புகள் அச்செபேயின் நாவல்களில் பெண்களின் வகிபாகம் பற்றிக் குறைகூறத் தொடங்கின. இன்றும் கூட இணையத்தில் ‘சினுவ அச்செபேவைப் பெண்ணிய வாசிப்புக்குட்படுத்தல்’ ‘பெண்ணிய நிலை நோக்கில் சினுவ அச்செபே’ என்ற தலைப்புகளில் கட்டுரைகள் கிடைக்கின்றன.

நாவலைக் கவனமாக வாசிப்பதன் மூலமும், சினுவ அச்செபேயின் கருத்து நிலைப்பாடுகளைத் தெரிந்துகொண்டு நாவலை மீள்வாசிப்புச் செய்தல் மூலமும் இவ்விமர்சனங்களின் பலவீனங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

வெறுமனே வெள்ளை மேலாதிக்கத்தைத் திட்டிக்கொண்டிருக்காமல், இபோ இனத்தவரின் தவறுகளையும், பலவீனங்களையும், நாவலில் அச்செபே அலசுவதைக் காண முடிகிறது. நாவல், இபோ அழிக்கப்பட்ட மரபு அல்லவென்றும் அது தானாகவே அழிவுக்குட்பட்டதென்றும் கூறுகிறது. நாவலின் பல சம்பவங்களின் வழியாக இக்கருத்து நமக்கு நிருhபிக்கப்பட்டுக் காட்டப்படுகிறது. வெள்ளையின ஆதிக்கத்துக்கும் மி?னரியின் பரவுதலுக்கும் காரணமாயிருந்த இபோ மக்களின் அபத்தமான சமூகக் கட்டமைப்பை, அதன் பலவீனமான அமிசக் கூறுகளை விமர்சிக்கும் அச்செபே எந்த ஒரு இடத்திலும் மி?னரியை நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை. இபோ சமூக அமைப்பின் பலவீனங்கள் எல்லாம் வெள்ளையரின் ஊடுருவலுக்குச் சாதகமாய் அமைந்து போனதை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறார் அச்செபே. இதற்கான பல சான்றுகள் நாவலில் தரப்பட்டிருக்கின்றன. சிறந்த் உதாரணமாக என்வோயி ‘ஐசாக்’ என்று பெயர்மாற்றம் செய்துகொண்டு கிறிஸ்தவனாய் மாறிப்போனதன் பின்னிருக்கும் உளவியல் பின்னணியைக் கூறலாம். (இக்மேஃபியுhனாவின் இழப்பாலும், ஒக்கொன் க்வோவின் தொடர்ச்சியான புறக்கணிப்பாலும் ஆழமாகக் காயம்பட்டுப் போயிருக்கும் என்வோயினது மனதை கிறிஸ்தவப் பிரச்சாரக் கதையான ‘இரு சகோதரர்களின் கதை’ ஆற்றுப் படுத்துவதையும், அதைத் தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தின் பால் அவன் படிப்படியாக ஈர்க்கப்படுவதையுமே உளவியல் காரணி என் கிறேன்.)

இவ்வாறு இன அடையாளம் தகர்ந்து போவதற்கான அடிப்படைகள் வெள்ளையர் வருகைக்கு முன்பே தாபிக்கப் பட்டிருந்ததை நாவல் உணர்த்துகிறது. மூச்சுத்திணறல் கொண்டிருந்த இபோக்கள் சுவாசிக்கும் வெளியாக மி?னரி இருந்ததையும், எண்ணற்ற கட்டுக்களால் கட்டமைந்த இபோ மரபுகளில் இருந்து விடுபட விரும்புவோர் அடைக்கலம் புகுவதற்கான ஒரே ஒரு இடமாக அது மட்டுமே இருந்ததையும் எழுதுவது மி?னரியை நியாயப் படுத்துகிற ஒன்றல்ல.

நாவலைப் புரிந்து கொள்ள அச்செபேயின் கருத்து நிலைப்பாடு பற்றிய சிறிய அறிவாவது அவசியம். அச்செபே ஜனநாயகம், கருத்துச்சுதந்திரம் என்பவற்றுக்காகப் பாடுபடுபவர். சமூகத்தின் ஒவ்வொரு பிரஜையும் தன் கருத்தை சமூகத்தில் பரப்ப உரித்துடையவன் என்பது அவரது வாதம். அவனது உரிமையைக் காப்பாற்றுவதற்காக எந்தப் போராட்டத்திலும் ஈடுபடத் தயாராக இருப்பதாய்க் கூறுகிறார் அவர். ‘எழுத்தாளன் படைப்பில் தீர்வு கூறுவதும் கூறாததும் அவனது சுதந்திரம் சார்ந்த வி்ஷயம். என்னளவில், என் படைப்பில் தீர்வுகளை முன்வைப்பதை நான் வெறுக்கிறேன். அது மக்கள் விவாதித்து தேர்ந்தெடுக்க வேண்டிய ஒன்று – வாழ்வின் பாடுகளைச் சித்தரிப்பதும், வாழ்வின் மீதான புரிதலை ஏற்படுத்துவதும் தான் என் எழுத்தின் நோக்கங்கள்’ என்று அவரது நேர்காணலில் தெரிவிப்பது நம் கவனிப்பிற்குரியது.

காலனித்துவ மனோபாவத்தில் இருந்து விடுதலை பெறுதல் பற்றி: அதன் அவசியம் பற்றி: நாவல் பேசாதது போலத் தெரியலாம். ஆனால் இந் நாவல் அதோடு சேர்த்து இன்னும் பல அம்சங்களைப் பேசுகிறது. காலனித்துவ நீக்கம் என்ற எண்ணக்கருவை உதாசீனப்படுத்தாது – அத்னுடன் இணைந்து காலனித்துவத்துக்கு எதிரான பலம் வாய்ந்த இருப்பொன்றின் தேவைப்பாடு பற்றிய பிரக்ஞையை வலியுறுத்துகிறது நாவல். ஸ்திரமான சமூகக் கட்டமைப்புகளையோ அல்லது பிணைப்புகளையோ கொண்டிராத எந்தவொரு சமூகமும் அழிவுக்கு உட்படுவது தவிர்க்கவியலாத ஒன்று என்பதை நாவல் கற்பிப்பதாக எனக்குத் தெரிகிறது. நாவலின் ஆரம்பத்தில் இருந்தே சுய அழிவை நோக்கிய பயணம் தொடங்குவதை மீள் வாசிப்பில் உணர முடிகிறது. முழு நாவலுமே இலகுவில் அழிப்பிற்குள்ளாகக் கூடிய கட்டுமானங்களாலமைந்த இருப்பொன்றின் மீதான விமர்சனமாகவே அமைகிறது.

இது ஒரு நவீனத்துவப் பிரதி. தமிழ் நவீனத்துவப் பிரதிகள் மரபுகள், தொன்மங்களில் இருந்து விடுபட்டு அவற்றிலிருந்து தம்மை அறித்துக் கொண்டு உலகளாவிய பொது ஒழுங்கை நோக்கிப் பயணித்ததைப் போன்ற விபத்துக்கள் ஆப்பிரிக்க இலக்கியத்தில் குறைவு. தியாங்கோ போன்றோர், வெளிப்படையாகவே மரபுகளைத் தூக்கிப் பிடிக்கும் நிலையில் அச்செபே தனது பிரதிகளில் இபோ இனக்குழுமத்தின் பழமொழிகளைச் செருகுவதன் மூலம் இனக்குழு மரபின் செழுமையைப் பேசுகிறார்.

தேர்ந்த கதைக்கட்டுமானத்தையும் கதைசொல்பாங்கையும் கொண்டிருக்கும் இந்த நாவல், சாதாரண சம்பவங்களினூடாக உணர்த்த விழையும் செய்தி ஆழ்ந்து கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. தனியே இபோக்களுக்கும் கறுப்பினர்களுக்கும் மட்டுமன்றி உலகளாவிய பின் காலனித்துவ இருப்புகளுக்கும், வலிந்தேற்றப்படும் கலாச்சார அடையாளங்களுக்குள் நசிபடுகிற சிறு பான்மையினருக்குமான பொருத்தப்பாட்டைக் கொண்டிருக்கிறது நாவல்.

இந் நாவலைப் படித்து முடித்தவுடன் நமது இலக்கியங்களுடன் ஒப்பீடு செய்து பார்த்தால், பெரும் விசனம் தான் எஞ்சுகிறது. நம் படைப்பாளிகள் மீதல்ல, நல்ல இலக்கியங்கள் எழுதப்பட முடியாமலிருக்கும் சூழல் மீது. தமிழகத்துச் சூழலில் தோன்றிய ஒருதொகைப் புனைபிரதிகளையே நாம் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. சிறுகதைகள் சிலவற்றில் நம்பிக்கையளித்த பல பிரதியாளர்கலிடமிருந்து எமது தற்கால, இறந்தகால , எதிர்கால இருப்பை புனைவுகளூடு தர்க்கித்து ஆராயும் பெரும் பிரதிகள் வரவேயில்லை. ்ஷோபா சக்தியின் வெற்றிய டைந்த மூன்று பிரத்கிகளையும் வைத்துக் கொண்டு நமக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது, என்ன நடந்தது என்பதனை நாம் பேச முடியாது. இங்கு இலக்கியங்கள் என்று கொண்டாடப்படும் உற்பத்திகளில் எத்தனைக்கு ்ஷோபா சக்தியுடைய பிரதிகளுடன் தர்க்கித்து நமது இருப்பின் மற்றைய பக்கங்களையும் வெளிக்கொணரும் வலு இருக்கிறது? இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது பொய், இலங்கையின் முதலாவது பெரும் பிரச்சனை தமிழ்த் தேசியம் தான் போன்ற குரல்கள் ஒலிக்கத் கொடங்கிவிட்ட நிலையில் நாம் இவற்றை எதிர்கொள்வதற்கான போதிய வலுவுடன் இருக்கிறோமா? எமக்கு சுட்டப்படும் இலக்கியங்களில் எத்தனை வீதமான இலக்கியங்கள் எமது இத்தனை நாள் பாடுகளைப் பிரதினிதித்துவம் செய்கிற தன்மையுடன் இருக்கிறது? ஒரு கேள்வியாக நான் இதை முன்வைக்கிறேன். இனப்பிரச்ச்னை தொடர்பாக வந்த படைப்புகளில் குறிப்பிடத்தக்கவையாக தளையசிங்கத்தின் ‘இனி ஒரு தனி வீடு’ கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ மு.பொவின் ‘நோயில் இருத்தல்’ அ.இரவியின் ‘காலம் ஆகி வந்த கதை’ மலரவனின் ‘போர் உலா’ ்ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ ‘தேசத்துரோகி’ ‘ம்’ சண்முகம் சிவலிங்கம், காருண்யன் கொன்பியுhசியஸ், சக்கரவர்த்தி, சேனன் இன்னும் பலரின் சிறுகதைகள் என்பவற்றைக் குறிப்பிட முடியும். ஒரு கதையாடலுக்கக இவற்றுள்ளிருந்து நாம் அநேகமாக அனைத்தையுமே எடுத்துக்கொள்ள முடியும் தானென்றாலும் இவற்றுள் எத்தனை பிரதிகள் நம் காலத்தின் குறுக்குவெட்டை உணரும் படி பண்ணக்கூடிய வை?

இவாறாக வலுவற்ற கலாச்சாரக் கட்டுமானத்துக்குள்ளேயே நம் இருப்புத் தொடர்கிறது. தேசியவாதம் என்ற பெயரில் வெளிவரும் குப்பைகளை வாசிப்புக்காக சிபாரிசு பண்ணுவதும், இயல்பான ஆசைகளையும் உந்துதல்களையும் அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்துவதும் நிலையான ஆரோக்கியமான கலாச்சாரக் கட்டுமானம் உருவாக வழிசமைக்கும் எனக் கருதுவது முட்டாள்த் தனமானது அல்லவா? எண்ணற்ற உளவியற் காரணிகள், சமூக ஊடுபாவுகளால் நிகழ்த்தப்படும் கலாச்சாரச் சிதைப்பை அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட ஒரு சில காரணிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமிழிவளவாக்கலாம் எனக் கனவு காண்பது அபத்தமானது.

கலை, இலக்கிய எத்தனங்களை சரியான முறையில் சமூகத்தினுள் நீட்சியடையச் செய்வதன் மூலம் ஆரோக்கியமான சுய பிரக்ஞையை ஏற்படுத்த முடியும். இந்த சுய பிரக்ஞை கலாசார அடிக்கட்டுமானத்தை வலுப்படுத்தும் செயற்பாட்டிற்கான தொடக்கப் புள்ளியாக அமையும். இதற்கு நீண்ட காலமும் கடின உழைப்பும் தேவைப் படலாம். ஆனால் சுயம் பற்றிய பிரக்ஞையைக் கட்டியெழுப்புவதற்கு இத் தடங்கல்கள் ஒன்றும் பெரிதில்லை. தெளிவின் மீது கட்டி எழுப்பப்படும் கலாச்சார இருப்பே வலுவானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்க முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தனித்துவமிக்க கலாச்சார இருப்பொன்றினை ஸ்தாபிக்க முயல்கிற இலக்கியங்கள் நம் மத்தியில் மிகவும் குறைவு. இதை ஒரு விவாதமாக முன்னெடுப்பதற்கு இங்கிருக்கும் புனைபிரதிகள் வல்லமை உள்ளவையாக இல்லை.

கலாச்சார அடையாளமுள்ள இருப்பை வலியுறுத்தும் இலக்கியம் ஒன்றிற்கு இருக்கக்கூடிய சமகாலத் தேவைப்பாடு பற்றிய பிரக்ஞையை முகத்திலறைந்து சொல்கிறது சினுவா அச்செபேயின் Things Fall Apart.

————————–

குறிப்புகள்

♦ சினுவா அச்செபேயின் Things Fall Apart ‘சிதைவுகள்’ என்ற பெயரில் என்.கே.மஹாலிங்கத்தால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
♦ எங்குகியின் Weep not Child ‘தேம்பி அழாதே பாப்பா’ எனும் பெயரில் எஸ்.பொவினால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
♦ எங்கூக்கின் ‘Decolonising the mind’ அடையாள மீட்பு என்ற பெயரில் அமரந்தாவால் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது.

முரண்வெளியிலிருந்து.

Exit mobile version