பணத்திற்காக எதையும் செய்வோம் என்பதை எடுத்துக் காட்டுவதாக மட்டக்களப்பில் நேற்று மீட்கப்பட்ட சதீஸ்குமார் தினுஷிகாவின் சடலம் உள்ளது.
கிழக்குத் தலைநகர் திருகோணமலையில் செல்வி யூட்றெஜி வர்ஷா கடத்தப்பட்டு பணத்திற்காக கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு மாதத்திற்குள் மட்டக்களப்பில் மட்/கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிகாவின் கொலை நிகழ்ந்துள்ளது. இரண்டு மாணவிகளதும் கொலைகள் ஒத்ததாகவே உள்ளது.
திருகோணமலை புனித மரியாள் கல்லூரி தேசியப் பாடசாலை மாணவி வர்ஷா பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில் பேக்கில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. ஆனால் மட்/ கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி கடந்த செவ்வாக்கிழமை 28 ஆம் திகதி பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு நகருக்கு அண்மையில் பாரதி லேன் 3 ஆம் குறுக்கு வீதியில் உள்ள பாண் வளவில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றினுள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
செல்வி சதீஸ்குமார் தினுஷிகாவின் தந்தை சதீஸ்குமார் கடந்த இரண்டு வருடத்தின் முன்னர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு இதுவரை எந்தவித தகவலும் இல்லாத நிலையில் தனது தாய் சதீஸ்குமார் நித்திய ரஜனியின் அரவணைப்பிலேயே வளர்ந்த தினுஷிகா 3 ஆம் ஆண்டு கல்வி கற்கும் 8 ஆவது வயதிலேயே இந்தப் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் சதீஸ்குமார் நித்திய ரஜனிக்கு இரண்டு குழந்தைகளில் தினுஷிகா மூத்த குழந்தையாவார்.
மட்டக்களப்பு பூம்புகார் கண்ணகி அம்மான் ஆலய வீதியில் உள்ள 126 ஆம் இலக்க வீட்டில் வாழ்ந்துவரும் தினுஷிகா குடும்பம் தனது தாய் அலுவலக கடமைக்காக செல்வதால் தனது அம்மப்பாவுடன் பாடசாலைக்குச் செல்வது வழக்கம். செவ்வாக்கிழமை 7.20 மணிக்கு தனது அம்மப்பாவுடன் பாடசாலைக்குச் சென்ற தினுஷிகா பாடசாலைக்குள் செல்லும் வரை பார்த்து நின்று அம்மப்பா வீடு திரும்பியுள்ளார். அதன் பின் வகுப்பறையில் இருந்த தினுஷிகா வகுப்பாசிரியர் அன்றைய தினம் பாடசாலைக்கு சமுகமளிக்காத நிலையில் பாடம் எதுவும் நடைபெறாத நிலையில் தினுஷிகாவை காலன் வெளியே இழுத்துள்ளது.
சகமாணவிகளின் தகவலின் படி தினுஷிகா புத்தக பையை தூக்கிக் கொண்டு வெளியே சென்றுள்ளார். அதனை ஒரு ஆசிரியரும் தடுக்காமல் இருந்து இருக்கின்றார். பாடசாலை வகுப்பறையிலேயே காத்திருக்கும் தினுஷிகா அன்று மாத்திரம் ஒருத்தரும் இல்லாமல் எப்படி வெளியே சென்றார். எவ்வாறு அந்த மனநிலைக்கு மாணவி வந்தாள் எனும் கேள்வி அனைவருக்கும் ஏற்படுகின்றது.
பி.ப.12.50 மணிக்கு மாணவியை அழைத்து வரச் சென்ற அம்மப்பா மாணவி இல்லாததையிட்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் தேட ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்தே பொலிஸில் முறைப்பாடு செயப்பட்டது. பொலிஸாரும் நிதானமாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு கடத்தியவர்களைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே தினுஷிகாவின் பரிதாபக் கொலை நிகழ்ந்துள்ளது.
சில தினங்களுக்கு முன் மூன்று மாணவர்கள் கடத்தப்பட்ட நிலையிலேயே மட்டக்களப்பு மாவட்டம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் விடுதலை செய்ய வலியுறுத்தியும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். பாடசாலை மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பினை வலியுறுத்தினர்.
கடத்தல்காரர் எதனையும் பொருட்படுத்தாது, முப்பது இலட்சத்திற்கு தினுஷிகாவை விலை பேசியுள்ளனர். கடத்தப்பட்ட அன்று இரவே மாணவி கொலை செயப்பட்டு இருக்க வேண்டும் எனச் சநதேகிக்கப்படும் அளவு மாணவியின் உடல் அழுகிப் புழு வடிந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடத்தல்காரர் மாணவியை கொலை செய்துவிட்டு கொண்டு வரும் போதா அல்லது அந்த இடத்தில் வைத்தா கொலை செய்தார்கள் என்றும் கேள்வியினை மட்டக்களப்பு பாரதி லேன் முஸ்லிம் சவக்காலை வீதியில் கல்கும்பத்தடியில் மாணவியின் பாடசாலை சீருடை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
சீருடை கிடக்கும் இடத்திற்கு அப்பால் சுமார் 20 மீற்றர் தொலைவில் உள்ள ஒரு பாண் வளவில் பாழடைந்த உடைந்த பற்றை வளர்ந்த கிணற்றிற்குள் தினுஷிகாவின் உடல் உள் ஆடைகளுடன் ஊதிய அழுகிய நிலையில் பக்கத்து வீட்டுச் சிறுவனால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குப்பை எரிக்கச் சென்ற சிறுவன் துர்நாற்றம் வீசிய போது கிணற்றை எட்டிப் பார்த்துள்ள போதே சிறுமியின் சடலம் கிடப்பதை அவதானித்து அயலவர்களுக்கு தெரியப்படுத்திய போது பொலிஸாருக்கு தகவல் கிட்டியுள்ளது.
கடத்தல் காரர் 30 இலட்சம் ரூபாவை தொலைபேசியூடாக கோரியிருந்தனர். இத் தொலைபேசி மூலம் பணம் கோரும் விடயத்தை குடும்பத்தினர் பொலிஸாருக்கு இரகசியமாக வழங்கியுள்ளனர். பொலிஸாரும் இவ்விடயத்தை இரகசியமாக பாதுகாத்தவாறே திருகோணமலையில் வர்ஷாவிற்கு நிகழ்ந்த நிலை தினுஷிகாவிற்கும் ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளனர். ஆனால் கடத்தப்பட்ட மாணவி உடனடியாகவே கடத்தல்காரர்களின் கொலைக்கு ஆளாகியுள்ளார்.
கடத்திச் செல்லப்பட்ட மாணவி சடலமாக நேற்று காலை மீட்கப்பட்டார். நேற்று முன்தினம் வரை தொலைபேசியூடாக கடத்தல் காரர்கள் பணம் கோரியே உள்ளனர். சிறுமியை கொலை செததுடன் விட்டு விடாது பணத்தினையும் பெற்று விடவேண்டும் என்பதிலும், கடத்தல்காரர்கள் உறுதியா இருந்துள்ளனர்.
தாயும், மாமாமாரும் எப்படியாவது பணத்தினைக் கொடுத்து சிறுமியை மீட்க எத்தனித்துள்ளனர். பணத்தினை எந்த இடத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி தினுஷிகாவிற்கு எதனையும் செய்து விட வேண்டாம் என மன்றாடிக் கேட்டுள்ளனர். அதனையும் பொருட்படுத்தாது பணம் கொண்டு தரும் இடத்தைக் கூறுவதாகவும் அந்த இடத்தில் கொண்டு தரும்படியும் கூறியவர்கள் எந்த இடத்தில் பணம் கொண்டு தர வேண்டும் என்பதைக் குறிப்பிடவில்லை. பணத்திற்கு கடத்தியவர்கள் பணம் கொடுக்கத் தயாராக உள்ள நிலையிலும் ஏன் மாணவிக்கு இந்தப் பரிதாப நிலையை ஏற்படுத்தியுள்ளனர் என்பது இன்று அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணத்துக்காகக் கடத்தியிருந்தால் பணம் கிடைக்கும் வரை சிறுமியை வைத்திருந்து இருக்கலாம். ஆனால் கடத்திய அன்று அல்லது மறுநாள் கொலை செய்துவிட்டு மீட்கும் வரை பணமும் கோரியுள்ளனர்.
பொலிஸார் சோதனைகளை தீவிரப்படுத்தி, விசாரணை நடத்திய நிலையில் கடத்தப்பட்ட பாடசாலைக்கு சுமார் 500 மீற்றருக்குள்ளேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. அனைத்து சோதனை சாவடிகளிலும் மாவட்டத்தின் வெளியே செல்லும் வாகனங்கள் மீதான சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் நகருக்குள்ளேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் எட்வின் குணத்திலக சம்பவத்தைக் கண்டித்ததுடன் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பொதுமக்களை உதவுமாறு வலியுறுத்தினார்.
சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.இராமக்கமலன் விசாரணைகளை நடத்தியதுடன் பிரேதப் பரிசோதனை நடாத்தி உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். சடலத்தை தனது தா அடையாளம் காட்டினார். சட்டவைத்திய அதிகாரி எம்.எம்.ஏ. றகுமானும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் பிரதேசப் பரிசோதனையை மேற்கொண்டார்.
சம்பவ இடத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பொதுமக்களுக்கு ஒரு கூட்டத்தினை நடத்தியிருந்தார். இதில் நீதிபதியும் கலந்துகொண்டார். இதன்போது குற்றவாளியைக் கண்டுபிடிக்க இரகசியமாக தகவல் தரும்படியும் இராணுவம் பொலிஸார் தவிர்ந்த யார் ஆயுதம் வைத்திருந்தாலும் தகவல் தரும்படியும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மேலும் கடத்தப்பட்ட மாணவர்கள் இருவருடைய நிலை பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லாத நிலையில் பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதேவேளை, திங்கட்கிழமை இதனைக் கண்டுபிடித்து மட்டக்களப்பு மாவட்ட அனைத்துப் பாடசாலை மாணவர்களும் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
பெற்றோருடனோ யாருடனோ உள்ள கோபத்திற்காகவோ பணத்திற்காகவோ ஒன்றும் அறியா சிறுவர்களை பரிதாபமாக கொலை செய்வதை நிறுத்துமாறு கொலையாளிகளை, கடத்தல்காரரை பொதுமக்கள் விநயமாக வேண்டுகோள் விடுக்கின்றனர்.
THANKS:Thinakkural