Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

படையினரைத் தப்பியோட வைக்கும் : புலிகளின் இரசாயன ஆயுதம் தொடர்பான வதந்தி

விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தலாமெனக் கூறப்படுவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.அத்துடன் இவ்வாறான தவறான தகவல்கள் யுத்தமுனையில் போராடும் இராணுவத்தினரைப் படைகளிலிருந்து தப்பியோடுவதற்கே வழிவகுக்குமெனவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் வன்னிப் போரில் தோல்வியைத் தழுவி வருவதால் அவர்கள் இறுதிக் கட்டத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த முயல்வார்களெனக் கடந்த வாரம் கருணா கூறியிருந்தார்.வெலிக்கந்தைப் பகுதியில் தனது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசுகையிலேயே கருணா இவ்வாறு தெரிவித்ததுடன், விடுதலைப் புலிகளிடம் இரசாயன ஆயுதங்களிருப்பது தனக்குத் தெரியுமெனவும் கூறியிருந்தார்.கருணா கூறிய இந்தச் செய்தியை சிங்களப் பத்திரிகைகளும் ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்காவும், புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்தத் தகவல்களை நிராகரித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள் இருக்குமானால் அவர்கள் இந்த நேரம் அதனைப் பயன்படுத்தியிருப்பார்களெனவும் கூறியுள்ளார்.

அத்துடன்,களமுனையில் போரிடும் படையினரின் காதுகளில் இவ்வாறான தகவல்கள் எட்டினால் அவர்கள் பெரிதும் குழப்பமடைவதுடன்,படைகளிலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிடுமெனவும் கூறி இந்தத் தகவல்களை நிராகரித்துள்ளார்.

Exit mobile version