ஈழத்தமிழர்களுக்கான ஒர் பலம்மிக்க திரைத்துறைக்கான தளதினை உருவாக்கும் நோக்கில், பிரான்சில் தோற்றம் பெற்றுள்ள ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் ( LIFT) பிரான்சில் கருத்தாய்வு அமர்வொன்றை நடாத்தியுள்ளது.
கடந்த சனி – ஞாயிறு (பெப்ரவரி 19-20) ஆகிய இருநாட்கள் இடம்பெற்ற இந்த அமர்வில், திரைத்துறை சார்ந்த கலைஞர்களுடன், கலை, இலக்கிய, சமூக பங்காளர்கள்,ஆர்வலர்கள் என பலரும் பங்கெடுத்திருந்தனர்.
யேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த திரு. வரதராசா அவர்கள் இந்த இருநாள் அமர்வுகளை நெறிப்படுத்தினார்.
ஈழத்தமிழ் திரைப்படச் சங்கம் சார்ந்து, எவ்வித கற்பனை பொதிந்த எதிர்பார்ப்புகளோ, கருதுகோள்களோ, கோட்பாடுகளோ அற்ற, அவ்வப்போது மாற்றம் அடைந்து கொண்டிருக்கும் அக, புற சூழல்களைப் புரிந்து கொள்ளும் வல்லமை உள்ள, புலம் பெயர் மண்ணின் சட்ட வரம்புகளுக்குட்பட்ட, சன நாயக ஒழுங்குகளைக் கடைப்பிடிக்கின்ற, செயற் திறனுடன் தனது இலக்குகளைத் தானே தீர்மானித்துச் செயற்படுகின்ற, படைப்பாளிகளின் படைப்புச் சுதந்திரத்தில் தலையிடாத, அதேவேளை தமிழர் நலன்களில் அக்கறை நிறைந்த ஒரு முகமும் – குணமும் கொண்டதான முன்மொழிவுகள் சபையோரால் முன் வைக்கப்பட்டன. இவ்வகையில், சங்கமானது ஒருமித்த நிலையிலும், தனிப்பட்ட படைப்பாளிகள் நிலையிலும், தன்னைத்தானே புரிந்து கொள்வதில் அக்கறையுடன் செயல்பட்டது. அடையாள, யதார்த்த சினிமா ஒன்றின் தேடலுக்கான தாகம் சபையை நிறைத்தது.
அமர்வுகளை வழிநடத்திக்கொண்டிருந்த நெறியாளர், ஈழத் தமிழர் திரைப்படச் சங்கமானது படங்களைத் தயாரிப்பதற்கு, பார்வையாளர்களைச் சென்றடைவதற்கு ஏதுவான வழிவகைகளைக் கண்டறிவதில் முக்கிய பங்காற்றி உதவும் அதேவேளை, படத்தை எடுக்க வேண்டிய பொறுப்பு அவரவர்க்கே உரியது என்கிற, சபையோரின் ஒருமித்த கருத்தின் சுருக்கத்தை எடுத்துரைக்க, ‘தூண்டில் பெற உதவுவோம். மீனை நீங்களேதான் பிடிக்கவேண்டும்” என்கிற யேர்மனியப் பழமொழியை அவ்வப்போது பயன்படுத்தியமை சுவையாக இருந்தது.
இவ்விரு நாட்களிலும் நடைபெற்ற உற்சாகம் நிறைந்த அமர்வுகளில், சங்கத்தின் நோக்க வரையறைகள், உப அமைப்புக்கள், விதிகள், உப விதிகள், ஒழுகுமுறைகள் என்பன சபையோரால், ஆலோசனை, விவாதங்களினூடாக இயன்றளவு யதார்த்த நிலையிற் கண்டறியப்பட்டுத் தீர்மானிக்கப்பட்டன.
மாதாந்தம் உலக சினிமா திரையிடலும், அது குறித்தான விவாதமும் – சினிமா பட்டறை – குறும்பட திரையிடல் ஆகியன இவ்வாண்டுக்கான (2011) வேலைத்திட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளதோடு ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்துக்கான ஒர் இணையத்தளம் மற்றும் சங்கத்துக்கான ஓர் இடம் ஆகியனவும் தீர்மானிக்கப்பட்டன.
குறிப்பிட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ,உபக்குழுக்கள் தெரிவு செய்யப்பட்டதோடு அதற்குரிய செயற்பாட்டாளர்களும் தெரிவு செய்யப்படனர்.