Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

படுகொலை கலாசாரத்துக்கு முடிவுகட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்:பாக்கியசோதி சரவணமுத்து.

11.01.2009.

அரச பயங்கரவாதம் நாட்டை இருண்டயுகத்துக்கு இட்டுச் செல்வதாக குற்றம் சாட்டிய மாற்றுக் கொள்கைகள் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, தேசத்தைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து செயற்படத் தவறினால் நாடு அழிந்து நாசமாகி விடுமென எச்சரித்திருக்கின்றார்.

நாட்டு மக்களை அணிதிரட்டி அரசுக்குக் கடும் தொனியிலான எச்சரிக்கையை விடுக்க அரசியல், ஜனநாயக சக்திகள் உடனடியாக களமிறங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஜனநாயக மற்றும் தொழில்சார் அமைப்புகளின் விஷேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கலாநிதி பாக்கியஜோதி சரவணமுத்து மேற்கண்ட அழைப்பை விடுத்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்த மூன்று வருடங்களில் அரசியல்வாதிகள், ஊடக வியலாளர்கள் பலர் திட்டமிட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் கடத்தித் தாக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டுமென கூக்குரலிடுபவர்களே மற்றொரு வகை பயங்கரவாதத்தைத் தமது கைகளில் எடுத்துள்ளனர். இந்த நாட்டில் அண்மைக்காலமாக ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாடு இருண்ட யுகத்துக்கு இட்டுச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்தப் பேரழிலிலருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு சகல முரண்பாடுகளையும் மறந்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும். திங்கட்கிழமை லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிச்சடங்குகள் நடைபெறுவதோடு அனைத்தும் முடிந்து விட முடியாது. நேற்று லசந்த நாளை நானாக இருக்கலாம், மறுநாள் உங்களில் ஒருவர் பாதிக்கப்படலாம். இந்தப் படுகொலைக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடாதா? இதனைத் தொடர் கதையாவதற்கு இடமளிக்கக் கூடாது.

அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று பட்டு இந்த அரச பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் அணிதிரட்ட வேண்டும். மக்கள் சக்தியூடாக அரசுக்குக் கடும் தொனியிலான எச்சரிக்கையை விடுக்கவேண்டும்.

இந்த அரச பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்தும் உறுதியான நிலைப்பாட்டை நாம் எடுத்திருக்கின்றோம். இதில் அரசியல், மத, மொழி, இன வேறுபாடின்றி அனைத்துச் சக்திகளையும் அணிதிரட்டி அரசுக்கு அழுத்தம் கொடுக்க உறுதிபூண்டுள்ளோம்.

எம்.ரி.வி.நிறுவன தீவைப்பு, லசந்த விக்கிரமதுங்க படுகொலை என்பன தொடர்பாக பல தகவல்கள் கிட்டியுள்ளன. அரசாங்கம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மீது பழியை போட்டுத் தப்புவதற்கு எத்தனிக்கின்றது. இதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். இந்தக் கொடும்பாதகச் செயலிலீடுபட்ட சக்திகள், அதன் பின்னணியிலிருந்து செயற்படுவோர் பற்றிய பல உண்மைகளை நாளை திங்கட்கிழமை பகிரங்கப்படுத்த விருக்கின்றோம் எனவும் கலாநிதி பாக்கியசோதி சரவணமுந்து தெரிவித்தார்.

 

Exit mobile version