Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பங்களாவில் வசிக்காமல், சாதாரண தெருவில், பல வீடுகளுக்கு மத்தியில் வசிக்கும் ஒரே முதல்வர்!!!

இந்தியாவிலேயே பங்களாவில் வசிக்காமல், சாதாரண தெருவில், பல வீடுகளுக்கு மத்தியில் வசிக்கும் ஒரே முதல்வர் நானாகத்தான் இருக்க முடியும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

தமிழ அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள 1 கோடி பேருக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளிக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் நேற்று மாலை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு நினைவு மண்டபத்தில் நடந்தது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தொடங்கி வைத்தார். முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசும்போது தனது கோபாலபுரம் வீட்டை தனது மற்றும் தனது மனைவி காலத்திற்குப் பின்னர் இலவச மருத்துவமனையாக மாற்றப் போவதாக அறிவித்தார்.

கருணாநிதி தொடர்ந்து பேசுகையில்,

இந்த விழாவில் உங்களில் ஒருவன் என்ற முறையில் என் சார்பாக ஓர் அறிவிப்பினை செய்திட விரும்புகிறேன்.

பொது வாழ்க்கை என்பது புனிதமானது. அது என்றும் தூய்மையானதாக இருக்க வேண்டுமென்று நினைப்பவன் நான். நான் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பும்; பின்பும் என் பெயரில் வாங்கப்பட்ட சொத்து என்று பார்த்தால் –

கோபாலபுரத்தில் தற்போது நான் வசிக்கும் ஒரு வீடும் (தற்போதைய சந்தை மதிப்பு ரூ.8 கோடி) – திருவாரூருக்கு அருகில் காட்டூர் கிராமத்தில் பதினான்கு ஏக்கர் நிலமும் தான் உள்ளது.

இந்தியாவிலேயே தனி பங்களா என்று இல்லாமல், தெருவிலே உள்ள பல வீடுகளில் ஒன்றாக ஒரு முதல்-அமைச்சரின் வீடு இருப்பது என்று எடுத்துக் கொண்டால், அது என்னுடைய வீடாகத் தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்கும் நேரத்தில் எல்லாம், இப்போது கோபாலபுரத்தில் இந்த வீட்டிற்கு பதிலாக அரசு பங்களா ஒன்றில் நான் வசிக்க வீடு ஏற்பாடு செய்யப்பட்டபோது, அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

வருகின்ற பார்வையாளர்களையும், வெளிநாட்டுக்காரர்களையும் என் இல்லத்தில் வரவேற்றுப் பேசுவதற்குக் கூட போதுமான அளவிற்கு இடம் கிடையாது. புகைப்படக்காரர்கள் நின்று படம் எடுக்கக் கூட வசதி இல்லாத நிலை என்பதை தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் அறிவார்கள்.

கோபாலபுரத்தில் நான் வசிக்கும் இந்த இல்லத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு 1968-ல் என் பிள்ளைகளின் பெயரில் செட்டில்மென்ட் எழுதி பதிவு செய்துள்ளேன். தற்போது அந்த இல்லத்தினை என்னுடைய காலத்திற்கு பிறகும், என் மனைவி காலத்திற்குப் பிறகும், தமிழக அரசுக்கோ அல்லது கலைஞர் அறக்கட்டளைக்கோ உடமையாக்குவதென்றும், அந்த இல்லத்தில் ஒரு இலவச மருத்துவ மனையினை என் தாய் தந்தையர்களான அஞ்சுகம் முத்துவேலர் பெயரில் நடத்துவதென்றும் அதற்கு என் மனைவி, மற்றும் பிள்ளைகளின் ஒப்புதலையும் பெற்றுள்ளேன் என்பதையும் நான் அரசின் மருத்துவத் துறை சம்மந்தப்பட்ட இந்த விழாவில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது அண்ணா வழங்கிய நல்லுரை. அதை பின்பற்றி ஏழைகளுக்கு உதவிட, அவர்கள் முகத்தில் சிரிப்பைக் கண்டிட, உழைத்து வரும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

அதன் ஆட்சியில் கடந்த காலத்தில் நிறைவேற்றிய திட்டங்களோடு மேலும் ஒரு புதிய திட்டத்தை இணைக்கின்ற இந்த விழாவுக்கு வந்துள்ள மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடம் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன்.

இந்த திட்டத்தில் காப்பீட்டுத்தொகை முழுவதையும் அரசே கட்டுவதால் ஆண்டுக்கு 517 கோடி ரூபாய் செலவாகிறது. அதற்கு சேவை வரி 48 கோடி ரூபாய். சேவை வரி 48 கோடியை தள்ளுபடி செய்துவிடுங்கள் என்று அவரை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மேடையிலே கூடச் சொல்லத் தேவையில்லை. கடிதம் எழுதியிருக்கிறேன். அதற்குத் தருகிற பதிலில் உங்கள் கோரிக்கை ஏற்கப்படுகிறது என்று ஒரு வரி எழுதினால் போதும். மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

எனது பள்ளிப் பருவத்தின்போது, எங்கள் திருவாரூர் கோயில் சுவர்களில் நடமாடும் கோவில் திருப்பணி என்று எழுதப் பட்டிருக்கும். நடமாடும் கோவில் திருப்பணி என்றால், நடமாடுகின்ற கோயில் கட்டப் போகிறார்கள் என்று பொருள் அல்ல.

மனிதனின் உடலே நடமாடும் கோயில்தான். அதிலே ஏற்படுகின்ற பழுதுகளைப் பார்ப்பதற்கு திருப்பணி என்று சொல்கிறோம். நடமாடும் கோயில் திருப்பணி என்றால் மருத்துவம்தான் என்று எனது ஆசிரியர் சொன்னார்.

அந்த நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் திமுக அரசு ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது.

மு.க. ஸ்டாலின் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல ஏழை எளியோருக்கு, கை கொடுப்பது, அவர்களை வாழ
வைப்பது ஆகிய பணியை திமுக அரசு தொடர்ந்து ஆற்றி வருகின்றது. அதிலே ஒன்றாகத்தான் இன்று இந்தப் பெரும் பணியை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு கோடி மக்கள், உயிர் காக்கும் உயர் சிகிச்சை பெறுவதற்கு இந்தத் திட்டத்தை தொடங்கியிருக்கிறோம்.

உயிர் காக்கும் வரம் யார் தருவார்கள் என்று ஏங்கி இருப்போருக்கெல்லாம் இந்தத் திட்டம் நிச்சயமாக அபயக் கரம் நீட்டும் என்ற உறுதியை இந்த நேரத்திலே எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பள்ளிச் சிறார்களுக்கு இருதயப் பாதுகாப்புத் திட்டம் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 13 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் 653 இளம் சிறார்க்கும், 1663 பள்ளி மாணவர்களுக்கும் இருதய அறுவை சிகிச்சைகள் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளன.

இதன் அடுத்த பணியாகத்தான் காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். ஆண்டுக்கு 517 கோடி ரூபாய் செலவாகும் இந்த திட்டத்துக்கு, மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உதவிடுவார் என்ற நம்பிக்கையோடு, மத்திய நிதி அமைச்சருக்கு பரிந்துரை செய்வார் என்கின்ற உணர்வோடு இந்த விழாவிலே வேண்டுகோள் வைத்திருக்கிறோம்.

தமிழகத்திலே இன்றைக்கு வேர் விட்டிருக்கின்ற இந்தத் திட்டத்தை இந்தியா முழுமையும் ஏற்றுக் கொள்கிற நிலையை உருவாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஆசாத்தை கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

Exit mobile version