Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பகிர்வு – கவிதைகளுடனும் கவிஞர்களுடனும் ஒர் தொடர் பயணம் : கவிதா நோர்வே

நான் எழுதுவதை விட எழுத நினைப்பது அதிகம். எத்தனை கவிதைகள் எழுதி முடித்தாலும் சில கவிதைகளைப் படிக்கும் போது இந்தக் கவிதைகளை நான் எழுதவில்லையே என்ற ஆதங்கம் ஆழ்மனதில் ஊர்ந்து போகும். மரபுக்கவிதைகளில் இருந்து புதுக்கவிதையில் வடிந்து ஹைக்கூக்கள் வரை கவிதைகளில் பல விதங்கள் இருந்தாலும் இந்த அவரசர வாழ்க்கையில் நான் விரும்பி ஒரு சில நொடியாவது நின்று வாசித்துப் போவது அதிகம் புதுக்கவிதைகள் தான். அப்படி நின்று படித்து சுவைத்த கவிதைகளை பகிர்ந்து கொள்ளவே இந்த தொடரை எழுதத் தொடங்குகின்றேன்.

ஈழத்துக் கவிதைகள், தமிழகக் கவிதைகள் மற்றும் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களின் கவிதைகள் என்று அனைத்து கவிதைகளிலும் பொறுக்கி எடுத்து நான் ரசித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல் கட்டுரையின் நோக்கு. ஆழமாக கவிஞர்களைப்பற்றி எழுதுவது அல்ல நோக்கம். கவிஞர்களையும் அவர்தம் சில கவிதைகளையும் அறிமுகப்படுத்துவதற்கே.

இலக்கியப் படைப்புலகிற்குள் செல்வோமானால்…

நாம் ஏன் எழுதுகிறோம்? நாம் ஏன் படைக்கின்றோம்? கலையும் இலக்கியங்களும் மனிதர்களுக்கு எவ்வகையில் தேவைப்படுகின்றது என்ற கேள்விகள் எனக்குள்ளே எழுந்திருக்கிறது. அதற்கு நானே கண்டு கொண்ட சில விடைகளைக் குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன்.
தரமான படைப்புகளுள் எப்பவும் ஒரு அதிசயமான ரகசிய உயிர் ஒழிந்திருக்கும். எம் வழமையான தினசரிகள் முடியும் பொழுது விடியப்போகும் அடுத்த நாளை நோக்கி ஒரு தொடர்வுடன் சரிகிறது. இலக்கியங்களில் முடிவு, சுகம், முகம் தெரியாத மனிதர்களுடனான நேசம், ஒழித்து வைக்கப்படும் விருப்பங்கள், மர்மங்கள், கோபங்கள், காதல் என்று பல உணர்வுகள் எம்மை அதிர்வடையச் செய்கின்றன.

வெறும் கறுப்பு நிற எழுத்துக்காலலேயே நாம் பல நிறங்கள் தெறிக்கும் புதிய உலகொன்றிற்குள் புகுந்து வாழ்ந்து வரும் அற்புதம் நிகழ்கின்றது. படைப்புலகம் பற்றியும் இலக்கியங்கள் பற்றியும் பேசி கொண்டே போகலாம்தான்.. ஆனால் நாம் பகிர்ந்து கொள்ள வந்த விடயம் பற்றி மறந்து விடக்கூடாது. நாம் கவிதைகளுடன் நீண்ட தூரம் போக இருப்பதால் இடைஇடையே படைப்புலகத்தையும் வழித்துணைக்கு அழைத்துக் கொள்வோம்.

எந்த கவிதையுடன் ஆரம்பிக்கலாம்? சில கவிதைகளைப் படிக்கும் போது முகம் தெரியாமலேயே அந்த கவிதையின் படைப்பாளி மீது காதல் பிறந்து விடுகிறது. அப்படி என்னை முதன் முதலில் காதலில் விழச்செய்த முண்டாசுக் கவிஞனுடன் இந்த பகிர்தலைத் தொடங்கலாம் என்று நினைக்கின்றேன்.

பாரதி

காலம் கடந்த கவிஞன் அவன். இலக்கணக் கட்டுக்களைத் தகர்தெறிந்தவன். புதுக்கவிதை என புகழப்படும் பாமரரும் கேட்டுணரும் வசனக் கவிதையை தமிழுக்குத் தந்தவன். அரண்மனை மாடங்களில் பொற்கிளிகளுக்காய் சிம்மாசனங்களின் பின் சாமரம் வீச விழுந்து கிடந்த கவிதையின் கைகளை கரம் பிடித்து முற்றத்திற்குக் கொண்டு வந்தான். உயரத்தில் இருந்தோர்க்கு முதுகு சொறிந்த கலங்கத்தைத் துடைத்து கவிதைகளுக்கும் கவிஞர்களுக்குமான நிமிர்வை முள்ளந்தண்டில் ஏற்றி போனவன் சொல்கிறான்….

”தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையென்ப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”

உணர்வுபூர்வமாய் இயங்கும் மீசைக் கவிஞனின் வரிவீச்சுக்கள் இவை. அவன் தீவிரமாய் உணர்ந்த சில கோபத் துளிகளின் வீழ்ச்சி இது. இல்லை இவை சொற்களின் எழுச்சி என்றுதான் சொல்லவேண்டும்.. கவிஞன் பாரதி எப்போதும் தன்னை உயரத்திலே வைத்து எம் சமூகத்தை குனிந்து பார்த்துக் கொண்டிருந்தவன். “ஏய் பராசக்தி உனது மகன் உயர்ந்த ஒரு பீடம் அமைத்து அந்த உயரத்தில் அமர்த்திருக்கிறேன். நான் அங்கே இருந்து கொண்டு எல்லாவற்றையும் அவதானிக்கின்றேன்”. என்று சக்தியிடம் இறுமாப்பாய்ச் சொன்னவன்.

சாதிகள் பற்றியும் சமூக அமைப்புகள் பற்றியும் அவன் விட்டுச் சென்ற கவிதைகள் ஏறாளம். ஒரு கவிதையில் சொல்கிறான்.

சாம்பல் நிறத்தொரு குட்டி
கரும் சாந்தின் நிறம் ஒரு குட்டி
பாம்பின் நிறம் ஒரு குட்டி
வெள்ளைப் பாலின் நிறம் ஒரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இக்து ஏற்றம் என்றும் சொல்லலாமோ

எமது சமூதாயத்தில் வேறூன்றி மண்டிக்கிடக்கும் சாதி பிரிவுகள் தொடர்பாக தனது கருத்தை நேரடியாக தாக்கமல் உவமானத்தால் அழகுறச் கவி செய்த வரிகள் இவை. அதே போல் தனது காதல் உணர்வுகளை பல கவிதைகளில் உணர்வு பொங்க பாடியிருப்பதை காணலாம். தீர்த்தக்கரையினிலே என்ற கவிதையில் தனது காதல் சோகத்தினை இப்படிப் பதிவு செய்கிறார்.

தீர்த்தக் கரையினிலே…
சென்பகத் தோட்டதிலே
பார்த்திருந்தால் வருவேன் – வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறி விட்டாய் – அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடீ!
பார்த்த இடத்திலெல்லாம் – உன்னைப் போலவே
பாவை தெரியுதடீ!

காதலை காவியமாக்கும் திறம் கொண்ட கவியின் சுட்டும் விழிச் சுடர்தான் என்ற இன்னொரு பாடல் வரிகளில். நான் காதல் கொண்டிருக்கிறேன். பயம் மேவி நீ சாத்திரம் பேசுகிறாய் என்பதை தான் காதல் கொண்ட வாலைக் குமரியிடம் சொல்கிறான்

சாத்திரம் பேசுகிறார் – கண்ணம்மா!
சாத்திரமேதுக்கடி!
ஆத்திரங் கொண்டவர்க்கே – கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ!
மூத்தவர் சந்திதியில் – வதுவை
முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப் பேனோடீ – இதுபார்
கன்னத்து முத்தம் ஒன்று!

சிறிய கருத்து என்றாலும் அது சரியான கருத்து என்றால் நிச்சயம் அது அதன் பயனாக எங்கு போய் சேரவேண்டுமோ அங்கே போய் சேரும் என்பதை வீச்சு மிஞ்ச ஒரு கவிதையில் இப்படிச் சொல்கிறார் பாரதி.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்

பாரதி புலப்படாத எவற்றையும் நம்பும் தன்மையில்லாதவன். அத்தகைய அறிவு நிலையினை அடைய தாகமெடுத்து அலைந்ததில் விளைந்த ஆயிரம் கவிதைகளால் ஏற்பட்டு கிடக்கும் கவிதைகள் அவன் காலம் மீறிய கவிஞன் என்பதை இன்றும் சொல்லிப்போகிறது.

எம் அகத்திற்கும் முரண்பட்ட புறச்சூழலுக்கும் இடையிலான போராட்டதின் போது வெடித்துப் பாயும் சொற் சிதறல்களுக்கு வலிமை அதிகம். இதனால் படைப்புலகில் மனித ஆளுமை எழுச்சி பெறுகிறது. ரசனையும் அனுபவங்களும், ஆளுமையுடன் மோதி கலை பிழம்பாய் சாத்தியமாகிறது. பாரதியில் இருந்து இனி நாம் சமகாலத்திற்கு இறங்கி வருவோம்.

தொடரும்…

Exit mobile version