Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பகலவப்புத்தாண்டு : நோர்வே நக்கீரா

ஊரெல்லாம் உழுது
உலகெல்லாம் உருண்டு
பாரெங்கும் பவனிவரும்
பகலவனார் படுத்துறங்கி
மேடத்தில் மேயும் கால்
காலத்தில் சித்திரையாம்
ஞாலத்தில் தமிழுக்கு
ஞானத்துப் புதுவருடம்

மீனத்தில் மேவும் மச்சம்
சீலத்தில் சீர் பங்குனியாம்
மேடத்தில் மேவும் மேகன்
மேடையில் ஆடும் கடா

எத்தனையோ வருடங்கள் உருண்டோடிய பின்னும்
வக்கணையாய் ஒருவருடம் வரவில்லையே இன்னும்
வருடங்கள் வந்து வந்து போகின்ற போதும் – எம்
வருங்காலம் தெரியவில்லை வாரிசுக்கு இப்போதும்

வருடம் வருடமாய் வருடங்கள் விழுந்தன – ஒரு
வருடத்தில் தமிழனுக்கு எத்தனை புதுவருடம்
வெள்ளையன் கொள்ளையிட்டு விட்டுச்சென்ற ஒரு புதுவருடம்
வள்ளுவனார் பிறந்ததினால் பிறந்ததுவாம் மறு புதுவருடம்
பொங்கலோ பொங்கலென்று பொங்கி வைத்த புது தைவருடம்
பொங்காமல் மேடத்தில் பரிதி பொங்யெழும் சித்திரை புதுவருடம்.

சித்திரையில் புத்திரனால் அக்குடியே நாசம் என்றால்
சித்தமுடன் பகலவனால் சிறப்புடனே பிறப்பெதனால்
இக்குடியில் வாழ்வுயர இயல் உயர்வு தரவேண்டி
எக்குடியும் ஏற்றிடுமே ஏருயர்ந்து சீர்வளமாக

கரவருடம் தமிழக்குக் கரம் தருமமோ
கரகக்காவ ருடமாய் உலகுயர வரம்தருமோ
உலகுயிர்கள் உய்வுற்று உயர்வுறவே
உலவுதயம் தந்திடுவாய் உலகவனே.
17.04.2011

Exit mobile version