இந்த கலந்துரையாடல் அல்லது பகுப்பாய்வு உரையாடல் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது. கருத்து நிலையில் பல முனைகளிலும் உள்ளோர் வந்து கலந்துகொண்டனர். தற்போது கனடாவில் தமிழர்களிடையே இருக்கும் அறிவார்ந்த தளங்களில் சிந்திப்போரிடையே நிலவும் ஓர் மிகவும் உற்சாகம் தரக்கூடிய சூழலாகவே இதைப் பார்க்கமுடியும்.
ஒரு சமூகம் தன்னை வழிநடத்திக் கொள்வதற்கு சரியான திசைவழிப்படுத்தல்கள் தேவை. அதற்கான கூறுகளை இந்த உரையாடல்களில் நாம் காணமுடியும். இப்படிப்பட்ட உரையாடல்கள் மிகச் சரியான கருத்துக்களுடன் இருக்கமுடியாது. ஆனால் சரியான உரையாடலாக இருக்கமுடியும். பலதரப்பட்ட கருத்துக்களும் கொடுக்கல் வாங்கல் நிலையில் உள்வாங்கப்படும். கருத்து நிலை உரையாடல் வெற்றிதோல்வியை நோக்கியதல்ல. அந்த மனப்பாங்கு இந்த உரையாடல்களில் தொனிப்பது மிகவும் மகிழ்ச்சிய தருவது.
இப்படிப்பட்ட உரையாடல்கள் நடக்கும் இடங்களில் பல நூற்களில் படித்துப்பெறும் தரவுகளையும் செய்திகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
இந்த கலந்துரையாடல் குறித்து ரமேஸ் எழுதிய முக நூல் குறிப்பின் ஒரு பகுதியையும் இங்கு தருகின்றோம். முக நூலில் காற்றில் கலந்த பேரோசையாக அனைத்தும் காணாமல் போய்விடும் பேராபத்து நிலையும் இருக்கிறது. எனவே அதைப் பதிவாக்க (வடிவம் திருத்தி) இங்கே பதிவாக்குகின்றோம். இது சுய விமர்சனமே தேவை என்ற தலைப்பில் வந்திருந்தது:
“இந்தக் கலந்துரையாடல் குறிப்பிட்ட தலைப்பின் ஊடாக உரையாடப்பட்டிருந்தாலும், அதனுடன்தொடர்புடையதும், தொடர்பற்றதுமான பல விடயங்களும் பேசப்பட்டன என்பது உண்மை. முடிந்தளவிற்கு குறுகீடுகள் குறைவாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் பேசியவர்களில் அனேகமானவர்கள், நோர்வே தொடக்கம், மேற்குலக நாடுகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் நேர்மையற்ற முறையிலேயே இலங்கை இனப்பிரச்சினையை கையாண்டார்கள் என்றும் அதிலும் நோர்வை கூட இந்த பிரச்சினையை மிகவும் உள்நோக்கத்துடன் நடந்துகொண்டது என்றும் பேசினார்கள்.
அத்தோடு தமிழர் பிரச்சினையில் புலிகளும் இதேபோன்ற அணுகுமுறையுடனேயே நடந்துகொண்டார்கள் என்பதையும் சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த உரையாடல்களை முழுவதுமாக பார்த்துக்கொண்டிருந்தபோது எனக்குப் பட்டது, இலங்கை இனப்பிரச்சினையில் நாம் எல்லோரும் தெளிவாகவும், சரியாகவும் இருப்பதாகவும், நேர்வே தொடக்கம், இந்தியா, ஏனைய ஐரோப்பிய நாடுகள் எல்லாம் எமது பிரச்சினையில் வஞ்சகத்தனமாகவும், அரசியல் உள்நோக்கத்துடனும் நடந்து கொண்டது, நடந்துகொள்கிறது. என்ற அபிப்பிராயத்திலேயே பலரின் பேச்சுக்கள் இருந்தன. அது உண்மையும் கூட.
ஆனால் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, சமாதானப் பேச்சுவார்தையாக இருந்தாலும் சரி இந்த விடத்தில் தமிழர் தரப்பு நடந்துகொண்ட முறையில் சாதக பாதக நிலமைகளை விரிவாக ஆரயப்படவில்லை. ஒருவேளை ‘நோர்வேயின் சமாதான முயற்சியும் நாமும்’ என்ற தலைப்பிடப்பட்டிருந்தால் அது சாத்தியமாக இருந்திருக்குமோ என்னவோ? இன்றைய சூழலில் நமது அரசியல், சமூக சிந்தனையில் சுயவிமர்சனம் செய்யப்படவேண்டும் என்று சொல்லுபவர்களின் கருத்துடனேயே நானும் ஒத்துப்போகிறேன். எமது இன்றைய பார்வையின் மீதே நாம் விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். காரணம் நாம் தொடர்ச்சியாக மற்றவர்கள் மீது குற்றம் சுமத்திப் பழக்கப்பட்டவர்களாக இருந்ததனாலும், எம்மீதான விமர்சனப்பார்வை எம்மிடம் இல்லாததினாலும் தான் நாமும், நமது சமூகமும் இன்றுள்ள நிலையில் இருக்கிறோம் என்பதும் எனது கருத்து. ‘தேடகம்’ இவ்வாறான கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக கனடாவில் செய்துவருவது அரோக்கியமான விடயமே!
பல்வேறு மாற்றுக் கருத்துக்கொண்டர்வர்களை ஒரே இடத்தில் உரையாடும் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் தேடகத்தின் தேவை, தேவையே. உதாரணமாக நாடு கடந்த அரசாங்கத்தின் சபாநாயகர் பொன் பால்ராஜ் போன்றவர்களோடு கருத்துக்கள் பரிமாறப்படும்போது குறிப்பிட்ட கருத்துக்கள் இன்னொரு சூழலுக்கு கடத்தப்படுகின்றதையும், அல்லது அவர் போன்றவர்கள் மாற்றுக்கருத்துக் கொண்டவர்களின் சூழலுக்குள் வந்து உரையாடல்கள் நிகழ்த்தப்படுவது நல்ல சமிஞ்ஞையாகவே எனக்குப் படுகிறது.”
http://ooooor.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/?fb_comment_id=fbc_10150566825237332_21098930_10150566829382332#f1eabeac9c