Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நோபல் பரிசைப் புறக்கணித்தார் மொர்டசாய் வானுனு!

 இஸ்ரேல் அணு ஆயுதம் தயாரிப்பதை அம்பலப்படுத்திய மொர்டசாய் வானுனு, நோபல் பரிசு பெறுபவர்கள் பட்டியலில் இருந்த தனது பெயரை நீக்கி விடும்படி கோரியுள்ளார்.

மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர் மொர்டசாய் வானுனு. இஸ்ரேல் நாட்டின் அணு சக்தி நிலையத்தில் வேலை செய்த வானுனு, இந்த நாடு பேரழிவு ஆயுதங்களை தயாரிப்பதாகப் பிரிட்டன் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்தார்.

நாட்டின் இரகசியத்தை அம்பலத்தியதற்காக இவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இஸ்ரேலை விட்டு வேறு நாடுகளுக்குச் செல்வதற்கும் இவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதம் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களுக்கு எதிராகப் போராடி வரும் வானுனுவைப் பாராட்டி நோபல் பரிசு கமிட்டி இவரது பெயரை நோபல் பரிசுக்காகப் பரிந்துரை செய்துள்ளது.

தனது பெயர் நோபல் பரிசுக்கான பட்டியலில் உள்ளதை அறிந்த வானுனு கடந்த 1994ஆம் ஆண்டு பாலஸ்தீன தலைவர் யசீர் அராபத்துக்கும் – இஸ்ரேலின் அணு குண்டு தந்தையான ஷிமோன் பெரசுக்கும் சேர்த்து அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதைச் சுடடிக்காட்டியுள்ளார்.

“ஷிமோன் பெரசுக்கு வழங்கப்பட்ட அந்தப் பரிசு எனக்கு தேவையில்லை. ஷிமோன் வாங்கிய பரிசு பட்டியலில் நானும் இடம்பெற விரும்பவில்லை. எனவே, நோபல் பரிசு பெற உள்ளவர்களுக்கான பெயர் பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கி விடுங்கள்” என நோபல் பரிசு கமிட்டிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்தத் தகவலை நோபல் பரிசு கமிட்டி செயலாளர் கீர்லண்டஸ்டட் தெரிவித்துள்ளார்.

Exit mobile version