Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நோபல் பரிசு குறித்து கனவு கண்டதைத் தவிர ஒபாமா அவ்விருதைப் பெற வேறு எதுவும் செய்யவில்லை!:சாவேஸ்

நோபல் அமைதிப் பரிசு குறித்து கனவு கண்டதைத் தவிர ஒபாமா அவ் விருதைப் பெற வேறு எதுவும் செய்யவில்லை என்று வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் அமைதி விருது என்றவுடன், தவறாகக் கூறிவிட்டார்களோ என்று எண்ணியதாக சாவேஸ் கூறினார். இந்த விருதைப் பெற அவர் என்ன செய்து விட்டார்? அணு ஆயுதமற்ற உலகம் என்ற அவருடைய நம்பிக்கையில் நீதிபதிகள் மிகவும் மயங்கி விட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்மைப் போர்க் களங்களில் ஒபாமாவின் பங்கு என்ன என்பதை நீதிபதிகள் மறந்துவிட்டார்கள் எனத் தெரிகிறது. கொலம்பியாவில் புதிய ராணுவ முகாம்களை அமைக்க அவர் முடிவு செய்தது பற்றியும் அவர்கள் மறந்து விட்டார்கள் போலும் என்றும் அவர் சொன்னார்.

ஒருவர் எதையும் செய்யாமல் விருது பெறும் அவலத்தை முதல்முறையாக நாம் காண்கிறோம். உண்மையில், யதார்த்தத்தில் நடைபெறவியலா ஒரு விஷயம் குறித்து கனவு கண்டதற்காக விருது வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

ஐம்பது ஆட்டங்களில் ஜெயிப்பேன் என்றும், 500 மட்டையாளர்களை வெளியேற்றுவேன் என்று கூறும் பேஸ் பால் பந்து வீச்சாளர்களுக்கு கோப்பையை அளித்தது போல் நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது என்று விவரித்தார்.

முந்தைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் பின்பற்றிய போர்க்கொள்கைகளையே ஒபாமாவும் பின்பற்றுகிறார் என்றும் சாவேஸ் குற்றம் சாட்டினார்.

ஏப்ரல் மாதம் நடந்த ஒரு உச்சிமாநாட்டில் இருவரும் சுமூகமாகப் பழகிய போதும், அதற்குப் பின் ஒபாமாவை சாவேஸ் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

Exit mobile version