Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நெல்லியடியில் கொலை : புலிகளின் செயற்பாடுகள் வடக்கில் மீண்டும் ஆரம்பம்?

பருத்தித்துறை தும்பளை தம்புறுவளைப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த மகாலிங்கம் சதீஸன் (வயது 26) என்பவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (02) இரவு 7.05 மணியளவில் நெல்லியடி – பருத்தித்துறை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

நெல்லியடி சந்தியிலிருந்து மாலைசந்தி நோக்கிய வீதியில் 300 மீற்றர் தொலையில் புதிய புகைப்படக்கூடம் திறப்பதற்கான சமயக் கிரிகைகளில் இவர் ஈடுபட்டிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் பெயரைக் கூறி அழைத்துள்ளனர். அவர் தனது சகோதரியுடன் புதிய கட்டிடத்தின் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து அவர்களுடன் பேச முற்பட்ட போது இவர் மீது இனந்தெரியாத நபர்கள் மைக்ரோ ரக கைத்துப்பாக்கியினால் நான்கு தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். முகத்திலும் கன்னத்திலும் துப்பாக்கிச் சூட்டு அடையாளங்கள் காணப்பட்டது. வேட்டியும் அதற்கு மேலாக பச்சை நிற சால்வையும் கட்டியிருந்த நிலையில் வீதி ஓரத்தில் இரத்த வெள்ளத்தில் சடலம் காணப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நெல்லியடிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் வீதியில் சென்று வரும் சகல வாகனங்களின் இலக்கத்தகடுகள் பதிவு செய்யப்பட்டு சோதனைகளை இராணுவத்தினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

மகாலிங்கம் சதீசன் முன்னை நாள் புலிகளின் உறுப்பினரும் பின்னதாக இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டவரும் ஆவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து வேறுபட்ட அபிப்பிராயங்கள் வடக்கிலிருந்து தெரிவிக்கப்படுகின்றன. வடபகுதியில் பெருமளவிலான சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்குரிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கோடும் அதற்குரிய இராணுவ உதவிகளை அன்னிய நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கோடும் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்த வதந்தியை இராணுவம் திட்டமிட்டு ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று ஒரு பகுதியினர் கருதுகின்றனர். அதே வேளை ஈ.பி.டி.பி இயக்கத்தினுள் ஏற்பட்டுள்ள உள் முரண்பாடின் வெளிப்பாடாகவும் இச்செயற்பாடுகள் அமைந்திருக்கலாம என ஊடகவியலாளர் ஒருவர் கருத்து வெளியிட்டார். புலிகள் இயக்கத்தின் உதிரிக் கூறுகள் குறிப்பாக பிஸ்டல் குழுவினர் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர் என இன்னொரு பகுதியினர் கருத்து வெளியிட்டனர்.
எது எவ்வாறாயினும் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இனவழிப்பை எதிர்கொள்ள மக்களை அணிதிரட்டும் வேலைத்திட்டமொன்று அவசியமானதும் அவசரமானதும் என்றும் இது எல்லைகடந்த முற்போக்கு இயக்கங்களின் துணையொடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இலங்கை எங்கும் பரந்திருக்கும் முற்போக்கு சக்திகள் கருதுகின்றன.

Exit mobile version