Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நெய்வேலி சுரங்கத் தொழிலாளர்கள் ஸ்டிரைக் மின் தட்டுப்பாடு வருமாம்- சொல்கிறார் கருணாநிதி.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்கு சலுகை விலையிலும் இலவசமாகவும் மினசாரத்தை வாரி வழங்கும் தமிழக அரசு. விவசாயிகள், கிராமப்புற மக்களை வாட்டி வதைத்து வருகிற நிலையில், நெய்வேலி நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக வேலை நிறுத்தத்தைத் தொடங்கி உள்ளனர். ஆனால் இந்த வேலை நிறுத்தத்தால்தான் மின்வெட்டு ஏற்படுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார் கருணாநிதி.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 14 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பாக நேற்று முன்தினம் இரவு முதல் அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களான தொ.மு.. மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்து வேலைக்குப் போகவில்லை. இதனால் மின் உற்பத்தி கடுமையாக பாதித்து, தென் மாநிலங்கள் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.நெய்வேலி முதல் அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரமும், அதன் விரிவாக்க மின் நிலையத்தில் 420 மெகாவாட்டும், 2-வது அனல் மின்நிலையத்தில் 1,470 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் முதல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் 600 மெகாவாட்டும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படுகிறது. மற்ற இரு மின் நிலையங்களிலும் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 42 சதவீதம் தமிழ்நாட்டுக்கும், 43 சதவீதம் இதர தென் மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது. மீதி 15 சதவீதம் மத்திய தொகுப்புக்குப் போகிறது.தற்போது 3 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதால், மின் உற்பத்தி இப்போதைக்கு நடக்கிறது. ஆனால் வேலைநிறுத்தம் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் சிக்கலாகி விடும்.இந்த நிலையில் பிரச்சினையை தீர்த்து ஸ்டிரைக்கை முடிவுக்குக்கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் ஜெய்ஸ்வாலுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை நேற்று ஜெய்ஸவாலை சந்தித்த மத்திய அமைச்சர் ராஜா ஒப்படைத்தார்.
கடிதத்தில், தொழிலாளர்களின் நலன் கருதி ஏற்கனவே நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட மாற்று ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு அரைகுறை இருளில் கிடக்கும் தமிழகம் முழுவதுமாக இருளில் மூழ்கினால் அதற்குப் பொறுப்பு தமிழக அரசுதானே தவிற உரிமைக்காக போராடும் தொழிலாளர்கள் அல்ல.

Exit mobile version