Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உண்ணாவிரத போராட்டம்

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகம் முன்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6 மாதங்களுக்கு முன்பு அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்ட எல்லையிலுள்ள காட்டில் விறகு வெட்டச் சென்றிருந்த சமயம் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளுமின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 30 முஸ்லிம்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி இன்று முதல் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கால வரையறையின்றி ஆரம்பித்துள்ளதாகவும் கூறபப்டுகின்றது.

போராட்டக் ரர்களினால் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் மகஜர்கள் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைத்தலைவர் ஆகியோரிடமும் கையளிக்கப்பட்டுள்ளன.

31 முஸ்லிம்கள் சம்பவத்தின் போது கைதான போதிலும் ஓரிரு வாரங்களின் பின்பு அவர்களிலொருவர் விளக்கமறியலிலிருந்த வேளை மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர்.இப் போராட்டம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்,

“விறகு வெட்டி பிழைத்து வந்த குறிப்பிட்ட 30 பேரும் மொனனராகலை நீதிமன்ற உத்தரவின் பேரில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரது கவனத்திற்கு கொண்டு வந்துள்ள போதிலும் எவ்வித சாதகமான முடிவுமில்லை.இதனால் இவர்களுடைய குடும்பங்கள் எவ்வித வருமானமும் இன்றி பொருளாதார ரீதியாகக் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது விடுதலை தொடர்பாக சாதகமான முடிவு கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும்” என அமைப்பின் தலைவியான எம்.பி.மல்லிகா உம்மா தெரிவித்துள்ளார்.

மொனராகலை நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்டப்டுள்ள 30 முஸ்லிம்களும் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது அவசர கால சட்ட விதிகளின் கீழ் எவ்வித வழக்கு விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

Exit mobile version