வேதாரண்யம் அருகே உள்ள காமாட்சியம்மன்- ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தலித் மக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர்களுக்கான உரிமையை உறுதி செய்யக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த மாதம் 30ம் தேதி மறியல் போராட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, நேற்று காலை தலித் மக்களுடன் கலெக்டர் முனியநாதன் கோயிலுக்குள் சென்றார்.
செட்டிப்புலம் கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்களில் 52 பெண்கள உள்பட 75 பேர் கோயிலுக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர்.
காலை 10.40 மணிக்கு கலெக்டர் முனியநாதன் தலைமையில் அந்த மக்கள் கோயிலுக்குள் சென்றனர்.
அவர்களை மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஆலய நிர்வாகி எம். ரத்தினசாமி, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் எஸ். சிவப்பிரகாசம், ஊராட்சித் தலைவர் மணிமாறன் கோயில் நாட்டாண்மைகள் நாகப்பன், ராஜேந்திரன், வேதரத்தினம், சுப்பிரமணியன், கலைமணி உள்பட 20 பேர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
100 ஆண்டுகளாக தடை போடப்பட்ட இந்த மக்கள் இப்போது தான் முதன்முதலாக இந்தக் கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு நடத்தியுள்ளனர்.