Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நீ நிறுத்தப்பட்டுவிட்டாய் ! : வன்னிப் போராளி விசாகன்

 

நுறு மனிதர்களோடு

அவர்கள் மறுபடி வந்தார்கள்.

அழுக்குப்படியாத சப்பாத்துகள்

பச்சை நிற உடை,

சூடாறிய நீண்ட சுடுகலன்கள்,

வரவுக்காய் நான் காத்திராவிட்டாலும்

அவர்கள் வரவு

உன் அசைவு நிறுத்தப்பட்டதாய்

உணர்த்தியது.

இது எங்கள் நிலமென்று

சூழுரைத்து அவர்கள் வந்தார்கள்.

கொல்லப்பட்டதால் குரைப்பதற்கு

தெரு நாய்கள் கூட இல்லை.

மௌனம் கிழித்து

புரியாத மொழி பேசி

ஆணவத்தோடு அவர்கள் வந்தபோது..

நான் புரிந்துகொண்டேன்

எம்மோடு நீ இல்லையென்று.

நானோ,

நீ கடந்து சென்ற ஆலமரத்தின்

அடிவாரத்தில்.

உனது வரவுக்காய் காத்திருக்கவில்லை.

விடுதலை, போர் என்று

உன்னால் கொன்று போடப்பட்ட

ஆயிரம் மனிதர்கள் போல,

நகங்கள் பிடுங்கப்பட்டு,

கண்கள் பறிக்கப்பட்டு,

அங்கம் இழந்து போன

இன்னொருவன் போல அல்ல!

அன்று உன்னை நேசித்தவன் – ஆயினும்

உனது வரவுக்காய்

காத்திருக்கப் போவதில்லை.

உனக்காகச் சாகடிக்கப்பட

எம்மில் யாரும் எஞ்சியிருக்கவில்லை.

நீ துரோகிகளாக்கி

தெருவோரத்தில் கொன்றொழித்த

மனிதர்களின் நிழல் கூட எம்மிடம் இல்லை.

நீ மீண்டும் வரவேண்டாம்

நாம் காத்திருக்கவில்லை.

ஆனால்,

அவர்களின் வருகை,

சூடாறிய சுடுகலன்களோடு

அவர்களின் பிரசன்னம்,

ஆதிக்கம், ஆணவம், அதிகாரம்

எல்லாமே சொல்கிறது..

நீ நிறுத்தப்படுவிட்டாய்.

Exit mobile version