இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ராணுவ நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அநீதியானது என்றும், இந்த விஷயத்தில் மல்வத்தை பீடாதிபதியைத் தலையிட வேண்டும் என்றும், சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. அனோமா பொன்சேகா, பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ஜுன ரணதுங்க, டிரான் அலஸ், ஜே.வி.பி. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திமுது அபேகோன், கண்டி மாநகரசபை உறுப்பினர் அநுரகுமார கோனவில ஆகியோரும் அனோமா பொன்சேகாவின் சகோதரரும் மல்வத்தை பீடாதிபதி திப்பொட்டுவாவே சித்தார்த்த சுமங்கல தேரரைச் சந்தித்தனர்.30 வருட கால போரை முடிவுக்குக் கொண்டுவந்த ராணுவத் தளபதியான தனது கணவருக்கு இந்த அரசாங்கம் செலுத்தும் நன்றிக்கடன் பதவி, பட்டம் பறிப்பும் தேசத்துரோகி என நாமகரணம் சூட்டுவதும் சரிதானா?இராணுவ நீதிமன்றம் தனது கணவனுக்கெதிரான வழக்கை நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடப்பட்ட காலத்திலேயே விசாரணைக்கெடுத்தது. இதனால், ஒரு வழக்கறிஞரைக் கூட நியமித்துக்கொள்ளும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது.கணவருக்கும் எமது குடும்பத்துக்கும் பெரும் அநீதி இழைக்கப்பட்டிருப்பதால் இந்த விஷயத்தில் மல்வத்தை பீடாதிபதியான தாங்களும் ஏனைய மகாசங்கத்தினர்களும் நேரடியாக தலையிட்டு நீதி பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அனோமா பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.இக்கோரிக்கை தொடர்பாக தாம் அரசுடன் பேசுவதாக மல்வத்தை பீடாதிபதி தெரிவித்திருக்கின்றார்.