Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நீதி நியாயம் தெரியாத ஒருவரிடம் இன்று நீதியமைச்சு : அசாத் சாலி

தி நியாயம் தெரியாத ஒருவரிடம் இன்று நீதியமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு நாட்டின் நிலைமை இன்று படுபாதாளத்துக்குச் சென்றுள்ளது என கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேஜர் அசாத் சாலி தெரிவித்தார்.
அசாத் சாலி பவுண்டேசன் நடத்திய அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தவும் என்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

மக்களுக்கு நிம்மதியாக வாழமுடியாத சூழல் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசு அராஜகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

இதர கட்சிக்காரர்களுக்கு பணத்தைக் கொடுத்து அவர்களை அரசின் பக்கம் உள்வாங்கிக்கொண்டு அவர்களை பெட்டிப்பாம்பாக வைத்துக்கொண்டு ஜனாதிபதியின் ஆட்சி தொடர்கிறது.

மக்கள் ஆணையைப் பெற்ற ஒருசிலர் மகிந்தவின் ஆட்சிக்கு சோரம் போயுள்ளனர். இத்தகையவர்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஷரிஆ சட்டத்தை சிலர் விமர்சிக்கிறார்கள். அதனை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது. இன்று இலங்கையில் அந்த சட்டம் அமுலில் இருந்திருந்தால் பலர் கையை இழந்திருப்பார்கள். ஏனெனில் அந்தளவுக்கு இலங்கையில் களவுகள் இடம்பெறுகின்றன.

இலங்கையில் பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம் மக்களுக்கெதிராக பல்வேறு ஈனச்செயல்களை முன்னெடுத்து வருகிறது.

சிங்கள – முஸ்லிம்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்குமாறு பௌத்தமத பெரியார்களிடம் கோரிக்கை விடுத்திருந்தும் அதுகுறித்து அவர்கள் எவரும் முன்வரவில்லை.

இது குறித்து அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்தபோது அவர் இதனைப் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவைவில்லை என்றார்.

நாடு இன்று படுபாதாளத்திற்குள் சென்றுகொண்டிருக்கிறது. சட்டத்தரணிகள் தமது வீடுகளில் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அநீதிகள் ஏற்படும்போது நீதி கோருவதற்காகவிருந்த நீதிமன்றத்தின் செயற்பாடுகளும் இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

ஆகவே இலங்கையில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமாக இருந்தால் ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

Exit mobile version