Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிவாரண உதவிகளை வழற்குதற்கு போதிய நிதியில்லை – சர்வதேச அமைப்பு அறிவிப்பு

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரண உதவிகைள வழங்கி வருகின்ற உலக உணவுத் திட்ட நிறுவனம், நிதியுதவியில் ஏற்பட்டுள்ள பாதிப்பக்கள் காரணமாக தொடர்ந்தும் உணவு நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் இறுக்கமடைந்துள்ளன எனத் தெரிவித்திருக்கிறது. மனிதாபிமான விவகாரங்களிற்கான ஐ.நா.வின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக உணவுத் திட்ட நிறுவனம் இடம் பெயர்ந்து முகாம்களிலும் உறவினர் – நண்பர்களின் வீடுகளிலும் வசிப்பவர்களிற்கும், மீள்குடியேறியுள்ளவர்களுக்கும் நிவாரண உணவுப் பொருட்களை வழங்கிவருகிறது. ஆனால் இத் திட்டத்திற்கு கொடையாளர்களிடமிருந்து கிடைக்கின்ற நிதியுதவியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் தொடர்ந்தும் நிவாரண உதவிகளை வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு வழங்கப்படுகின்ற கோதுமை மா, சீனி ஆகிய உணவுப்பொருட்களில் 50 சதவீதத்தை குறைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் 2 இலட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் வழங்கப்படுகின்ற நிதியுதவியில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்ற போஷாக்கு உணவு விநியோகத்திலும் பாதிப்பு எற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உலக உணவுத் திட்டம் வடக்கு, கிழக்கிலுள்ள 3 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கும் 2 இலட்சம் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் போஷாக்கு உணவுப் பொருட்களையும் வழங்கி வருகிறது.
ஏற்கனவே விதவைகளுக்கான மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள போதிய நிதியில்லை என அமைச்சும் நிறுவனங்களும் தெரிவித்திருக்கின்றன. அதே வேளை மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் போதிய நிதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2011 ஆம் அண்டு வரவு செலவுத் திட்டத்திலும் இதற்காகப் பாரிய நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படாது என்றே தெரியவருகிறது.
ஆசியாவில் ஆச்சரியம் மிக்க நாடாக இலங்கையை மாற்றும் இலக்குடன் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்து வரும் நிலையில் வட,கிழக்கில் இத்தகைய அவல நிலைமைகள் பற்றித் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version