Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிரந்தரக் குடியுரிமை அளிப்பதால் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு என்ன பயன்?- ஜெயலலிதா.

இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை அளிப்பதால் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

 

 

1984 முதல் தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நிரந்தரக் குடியுரிமை என்ற தகுதி காரணமாக அவர்களுடைய இப்போதைய நிலைமையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா? 115 அகதிகள் முகாம்களிலிருந்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களா? தமிழ்நாட்டில் புதிதாக அவர்கள் வாழ்க்கையைத் தொடங்க நிதி உதவியோ அல்லது வெகுமதியோ அளிக்கப்படுமா?

 

 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுமா? உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீட்டிற்கு வரம்பு விதித்துள்ள நிலையில், யாருடைய ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்படும்?மேலும், இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை என்ற முன்மாதிரி உருவாக்கப்பட்டால், வங்கதேசம், மியான்மர் மற்றும் திபெத் ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ள அகதிகளின் நிரந்தரக் குடியுரிமை கோரிக்கை குறித்து இந்திய அரசு என்ன செய்யும்?

 

 

இவை எல்லாம் முதல்வர் கருணாநிதிக்கு நன்கு தெரியும். தி.மு.க.வின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது என்பதும் அவருக்கு நன்கு தெரியும். இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்ததற்கு உதவியாகவும், உடந்தையாகவும் இருந்து வரும் மத்திய அரசில் ஒட்டிக் கொண்டிருப்பதால், கருணாநிதியின் பெயருக்கு இழுக்கு ஏற்பட்டு விட்டது. அந்த களங்கத்தை துடைக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட 2010 உலகத் தமிழ் மாநாடு முயற்சியும் உலகத் தமிழ் ஆதரவாளர்களால் அலட்சியம் செய்யப்பட்டு விட்டது. எனவே புதிதாக இன்னொரு கோரிக்கையை அவர் எழுப்பியுள்ளார். மற்ற நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் எந்தவொரு இடம்பெயர்ந்த சமுதாயமும், தங்கள் சொந்த மண்ணில், தங்கள் உறவினர்களுக்கு மத்தியில் மறுவாழ்வு அளிக்கப்படுவதையே விரும்பும். இலங்கையில் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்காக 30 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. இந்நிலையில் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, இலங்கைத் தமிழர்களின் நீண்ட காலப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது என ஜெயலலிதா கூறியுள்ளார்.

Exit mobile version