எதிர்வரும் மே தினத்தை அறிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தும் தினமாக ஆளுங்கூட்டணி பொதுச்செயலாளர் அமைச்சர் சுசில் பிரமஜயந்த அறிவித்துள்ளார். அதேவேளையில் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதில்லையென வெளிநாட்டு தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் அதிகாரப்பரவலாக்களை முன்னெடுத்து மூன்று மாதங்களுக்குள் அரசியல் தீர்வு காணப்போவதாக இந்திய அரசாங்கத்திற்கு மீண்டும் ஒருமுறை வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் அரசாங்கத்தின் பிரபல அமைச்சரான கெஹெலிய ரம்புக்கவெல்ல அரசியல் தீர்வுக்கான தமிழர் தரப்பின் பிரதான கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அமைச்சர் விமல் வீரவன்சவினது கட்சியின் துணை அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடத்துவதாக கூறும் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தும்படி கூறுகின்றது. கடந்த காலங்களில் தமிழ் மக்களின் இரட்சகர்களாக தங்களை அடையாளங்காட்டிக்கொண்ட வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரன ஆகிய இடதுசாரி அமைச்சர்கள் இன்று கடுமையான போக்கை வெளிப்படுத்தி, இந்த அறிக்கை அமெரிக்க ஏகாத்திபத்தியத்தின் கட்டுக்கதை என்று தீர்ப்பு வழங்குகின்றர்கள்.
ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட எம்பி விஜயதாச ராஜபக்ஷ இந்த அறிக்கையை முற்றாக நிராகரித்து ஐநா செயலாளர் நாயகத்திற்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளார். அதேகட்சியின் இன்னொரு எம்பியான ஹரின் பெர்ணான்டோ, நிபுணர் அறிக்கையில் புலிகளுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மாத்திரம் தமது கட்சி ஏற்றுக்கொள்கின்றது என்று கூறி ஐநா அறிக்கைக்கு பாதி எதிர்ப்பையும், பாதி ஆதரவையும் தெரிவித்துள்ளார். இதே கட்சியின் இன்னொரு எம்பி கடந்த காலத்திலே சர்வதேச போர் குற்ற ஒப்பந்தத்திலே தமது கட்சி அரசாங்கம் கையெழுத்திடாத காரணத்தினால்தான் இன்றைய அரசாங்கம் தப்பி பிழைத்துள்ளது எனக்கூறி பெருமை தேடிக்கொள்கின்றார்.
சமீப காலமாக காணாமல்போன தமிழர்களுக்காக கண்ணீர் வடித்த ஜேவிபி, காணாமல்போனவர்களையும், கைது செய்யப்பட்டவர்களையும் பற்றியும் குறிப்பிடும இந்த அறிக்கையை முற்றுமுழுதாக நிராகரித்துவிட்டது.
இந்நிலையில் ஆளுங்கட்சியிலும், ஐக்கிய தேசியக் கட்சியிலும் இடம்பெற்றிருக்கும் தமிழ் எம்பிக்களும், பெரும்பான்மை கட்சிகளின் தமிழ் அரசியல்வாதிகளும் இன்று தலைமறைவாகிவிட்டார்கள். அதேபோல் அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்கும் தமிழ் கட்சிகளும் மௌனம் காக்கின்றன.
இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள நிபுணர் குழுவை நியமித்த ஐநா செயலாளர் நாயகத்தையும், ஐநா சபையையும், உலகநாட்டு அரசாங்கங்களையும் நம்பி ஏமாறுவதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை. ஆனால் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் எமது இதயங்களை சுக்குநூறாக வெடிக்கச் செய்துள்ளன என்பதை எந்தவொரு மனசாட்சி உள்ள தமிழனும் மறுக்க முடியாது. எங்களை போன்றவர்கள் அன்றும், இன்றும் அநீதிகளுக்கு எதிராக உரக்க குரல் கொடுக்கின்றோம். ஆனால் பகிரங்கமாக கருத்துக்கள் தெரிவிக்க முடியாத இலட்சக்கணக்கான தமிழர்கள் இன்று நாடு முழுக்க மௌனமாக இரத்த கண்ணீர் வடிக்கின்றார்கள்.
உலகநாட்டு அரசாங்கங்களை தாண்டி சாதாரண மக்களின் மனசாட்சிகளை இந்த அறிக்கை அதிரவைத்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்க ஏகாத்திபத்தியம், இந்திய ஏகாத்திபத்தியம் என்று சொல்பவர்கள் அமெரிக்க, இந்திய, ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்களை தாண்டி அவ்வந்த நாட்டின் சாதாரண மக்கள், இன்று எம்மை திரும்பிபார்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்த அறிக்கை காரணமாக அமைந்துள்ளது