Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிபந்தனையற்ற ஆதரவு : பிள்ளையான் – மகிந்த பேரத்தின் பின்னர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவது என்ற முடிவை தற்போது மீண்டும் உறுதிபடுத்தியுள்ளனர்.

நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன், பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஷ்வரராஜா,மாகாண சபை உறுப்பினர்களான சோமசுந்தரம் புஷ்பராஜா மற்றும் நாகலிங்கம் திரவியம் உட்பட 7 பேர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்னதாக சில விடயங்கள் குறித்து பேச வேண்டும் என தமது கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் விளக்கிக் கூறியதாக தெரியவருகின்றது.

கிழக்கு மாகாண சபையில் இரத்தினம் மௌனகுருசாமி பதவி ஏற்காததன் காரணமாக கடந்த 18 மாத காலமாக இருக்கும் போனஸ் ஆசன வெற்றிடத்திற்கு பூபாலப்பிள்ளை பிரசாந்தனை நியமிக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை இச்சந்திப்பின் போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவ்வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

மேலும் கிழக்கு மாகாண சபை நிர்வாகம் ஆளுனரின் தலையீடு இன்றி சுயமாக இயங்குவது,அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்தி தொடர்பான செயல் திட்டங்களுக்கு இணைப்பாளர்களை நியமிப்பது போன்ற விடயங்கள் தொடர்பாகவும் சாதகமான பதில் எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்

Exit mobile version