இவ்வாறான குழுவொன்றின் எவ்வகையான நியமனமும் இலங்கையை ‘அவசியமானதும் பொருத்தமானதுமான நடவடிக்கையை எடுப்பதற்கு’ தள்ளும் செயல் என்று ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச் செயல்களுக்கு எந்த வகையிலேனும் பொறுப்பேற்கப்படவேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தான் எந்தக் குற்றமும் புரியவில்லை என இலங்கை அரசாங்கம் கூறிவருகின்றது.
இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தாலும் அத்துடன் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளாலும் போர்க்கால குற்றங்கள் புரியப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களைப் பொறுத்தவரை, பான்கீ மூன் குறிப்பிடத்தக்களவு மென்மையான இராஜதந்திரப் போக்கையே கொண்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் நிராயுதபாணிகளாக உள்ளவர்களை சுட்டுக் கொல்வதைக் காட்டுவதாக வெளியான வீடியோ காட்சிகள் குறித்து பக்கச்சார்பற்ற சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென, சட்டத்துக்குப் புறம்பான கொலைச்சம்பவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயலரின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்ட்டன் கோரிக்கை விடுத்திருந்த போது, அல்ஸ்ட்டன் சுதந்திரமாக செயற்படுகின்றார் என பான்கீ மூன் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் நடைபெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்கச் செய்யும் விடயங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கவேண்டியுள்ளதாக ஐநாவின் தலைமைச் செயலர் இலங்கை அரசிடம் கூறியுள்ளதாக பான்கீமூனின் பேச்சாளர் தற்போது குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி அறிவிக்கப்பட்டவுடனயே தாமதமின்றி கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஸ, இந்த திட்டத்தை அடிப்படையற்றதுடன் நியாயமற்றது என விமர்சித்துள்ளார்.
இவ்வாற நடவடிக்கை எதுவும் போரினால் பாதிக்கப்பட்ட மற்றைய நாடுகள் தொடர்பில் எடுக்கப்படவில்லையெனவும் இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சில அரச சார்பற்ற நிறுவனங்களாலும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாலுமே சுமத்தப்பட்டுவருவதாகவும் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசுதுறைச் செயலகத்தினால் கடந்த அக்டோபரில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கையில் ஏற்கனவே குழுவொன்று ஆராய்ந்துக்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் மூன்று தசாப்தங்கள் வரை நீடித்த இனப்பிரச்சனைப் போர், அங்கு மனித உரிமைகளுக்கு பெரும் சாபக்கேடாகியுள்ள நிலையில், இந்தப் பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படும் போதெல்லாம் தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களைப் போலவே அதிகளவில் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றுகின்றது.
அங்கு இடம்பெற்றிருக்கக்கூடிய போர்க்கால குற்றங்கள் பற்றிய முறைப்பாடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்குமென ஐ.நாவும் இலங்கை அரசும் கடந்த மே மாதத்தில் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அரசாங்கம் அதன்படி செயற்படவில்லையென்பது இலங்கை அரசு மீதான விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
BBC.