யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், மாணவர்கள் பிரதிநிதிகள், துணைவேந்தர் ஆகியோர் இன்று கூட்டம் ஒன்றை நடாத்தினார்கள்.
இதன்போது பல்கலைக்கழகத்தை நாளை ஆரம்பிக்க வேண்டும. கல்விச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக அனைத்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் நாளைய தினமே பல்கலைக்கழத்திற்கு வருகை தரவேண்டும்.
இவ்வாறு செய்யாது போனால் உடனடியாக தனது துணைவேந்த பதவியை இராஜினாமா! செய்வதோடு பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக மூடுவதையும் தடுக்க முடியாது என்று மாணவர்களை அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அச்சமடைந்த மாணவர்கள் செய்வதறியாத நிலையில் துணைவேந்தரது கருத்திற்கு மௌனமாக இருந்துள்ளனர் என்றும் மாணவர் பிரதிநிதிகளை அச்சுறுத்தியே பல்ககைக்கழகத்தை மீண்டும் ஆரம்பிக்க துணைவேந்தர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
இதேவேளை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் உட்பட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, இவர்களின் விடுதலை தொடர்பில் எந்தவிதமான முடிவுகளையும் துணைவேந்தர் மாணவர் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கவில்லை.
மேலும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க யாழ். பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்காது போனால் மூடிவிடப் போவதாக எச்சரித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.