வன்னிப் போர் வெற்றியின் பின்னர் பெளத்த சிங்கள மேலாதிக்கவாதம் மேலும் நிறுவன மயப்ப்பட்டுள்ளது. இலங்கையில் இரண்டு வியாபாரிகளுக்கு பெளத்ததை அவமதித்தாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சிலதினங்களுக்கு முன்பு ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் புத்தரின் உருவப்படம் பொறித்த திறப்புக் கோர்வையை விற்பனைசெய்தார்கள் என்ற குற்றத்திற்காக இருவருக்கு புத்த சமயத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கடூழியச்சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் கொழும்பு தலைமை நீதிபதி “றஷ்மிக்கா சிங்கப்புலி” ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடுழியச் சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.கொழும்பைச் சேர்ந்த, துவான் றஜாப்தீன், மற்றும் அபூபக்கர் கலீல், ஆகியோரே இவ்வாறு தண்டனைக்குள்ளானோர் ஆவார். கொழும்பு முதலாம் குறுக்குத் தெருவில் புத்தரின் உருவப்படம் பொறித்த திறப்புக் கோர்வையை விற்பனை செய்தனர் என புறக்கோட்டை காவற்துறையினரால் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
தண்டனைச்சட்டம் 290 வது பிரிவின் கீழ் புத்த சமயத்தையும் புத்த சமயத்தவர்களின் மன உணர்வையும் திட்டமிட்டுக் காயப்படுத்தும் வகையில் குற்றமிழைத்தனர் என காவற்துறையினரால் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிபதி முன்னிலையில் தமது குற்றத்தை ஓப்புக் கொண்டனர். இவர்கள் இருவருக்கும் நீதிபதி ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட கடுழியச் சிறைத்தண்டனை வழங்கினார்.