குழம்பிய சித்தத்தோடு யாருடனாவது உரையாட ப்ரியப்படும் போதை மனிதர்கள் சிலர் உஷாவிடம் தலையைச் சொறிந்தபடி தங்களின் சோகங்களைச் சொல்கிறார்கள்.சில நேரங்களில் தலைக் குழைத்தபடியும் நாக்கைத் துருத்தியும் கதைகளை கேட்கும் உஷாவுக்கு ரத்தமும் சதையும் சுண்டிப் போய் விட்டது. காலம் கிழித்தும் கழித்தும் போடும் கோடுகளில் உஷா இன்று கிழவி. பல ஆண்டுகளாய் போலிஸ் மோப்ப நாயாக அரசுப் பணியாற்றிய உஷா இன்று சாரயக்கடையை காவல்காக்கிறாள். இன்று எஞ்சியிருக்கிற நினைவுகளோடு தன் கடைசிக் காலத்தைக் கழிக்கிறாள்.எல்லா அநாதை நாய்களுக்கும் இறுதி முடிவு இதுவாகத்தான் இருக்கும். ஆனால் போலீஸ் நாய்களுக்குமா?
சென்னையில் அதிகாலையில் நடந்த கோரக் கொலைகளின் போது மௌனத்தைச் சுமந்த படி வந்து சென்ற உயரதிகாரிகளுக்குப் பிறகு,நீளச் சங்கிலியால் கோர்க்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய்கள் வந்தது.பரபரத்து ஓடி முடிவில் ஒரு முட்டுச் சந்துக்குள் போய் படுத்துக் கொண்டது. அல்லது சிறிது தூரம் ஓடிய பின் தன்னை வேடிக்கை பார்க்கும் மனிதர்களை வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டது போலீஸ் மோப்ப நாய்.திருட்டு,கொலை,கொள்ளை,போதை மருந்து கடத்தல், என குற்றவாளிகளைப் பிடிக்க பயன் படும் போலீஸ் மோப்ப நாய்கள் இது வரை எந்தக் குற்றவாளிகளையாவது பிடித்திருக்கிறதா? அல்லது சும்மா பந்தாவுக்காகத்தனா இந்த நாய்கள். என்று விசாரிக்கப் போனால்.பல விசித்திரங்களையும் வேதனைகளையும் சாகசங்களையும் சுமந்து திரிகிறது நாய்கள்.
குழைந்து வாலாட்டும் நாயின் குணத்தை மாற்றி வேட்டைநாய்கள்,காவல்நாய்கள்,செல்ல நாய்கள், மோப்ப நாய்கள் என தேவைகளுக்கேற்ப பயன் படுத்தும் மனிதர்களுக்கு மோப்ப நாய்களின் கதைகளின் தெரியுமோ தெரியாதோ?
1952- ல் இந்தியாவிலேயே முதன் முதலாக மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டது சென்னை போலீசில்தான். ஆனால் மோப்ப நாய்களுக்கெல்லாம் முன்னோடி ஜெர்மனியின் ஹிடலர். தனது நாஜிப்படையினர் போரில் காயமடையும் போது முதலுதவிக்காக நாயகளை பயன்படுத்திய ஹிட்லர், பின்னர் கண்ணிவெடிகளை கண்டு பிடித்து துப்புச் சொல்வதற்கும் நாய்களை பயன் படுத்தினாராம்.மனிதர்களிடம் இரக்கமற்று நடந்து கொண்ட அந்த ஆரிய சர்வாதிகாரி நாய்களிடம் காட்டிய அன்பு அலாதியானது.தமிழக போலீஸ் மோப்ப நாய்களை பொறுத்த வரையில் ஒவ்வொரு காவல் மாவட்டத்துக்கும் இரண்டிலிருந்து நான்கு நாய்கள் வரை பேணப்படுகின்றன. இரண்டு நாய்கள் கிரிமினல் குற்றங்களுக்கும் இரண்டு நாய்கள் குண்டுகளை கணடறியவும் பயன்படுகிறது. இன்றைய தேதியில் தமிழகத்தின் சிறந்த மோப்ப நாய்களின் பெயர்களைச் சொல்லுங்கள் என்று கேட்டால் யோசிக்கிறார்கள்.
“முன்னாடி பொன்னி, யுவராஜ், சீஃப் என்றெல்லாம் நாய்கள் இருந்தது. இப்பவும் இருக்கு…ஆனா…”என்று இழுக்கிறார்கள்.
பிரௌனி பிறந்த நான்காவது நாளில் அவளது வால் முளையிலேயே வெட்டப்பட்டது. மோப்ப நாய்களாக தெரிவு செய்யப்படும் டோபர்மேன் நாய்கள் பிறந்து கண் திறப்பதற்குள் வால்கள் வெட்டப்படும். நீளமாக வளரும் அதன் வால்கள் இடைஞ்சலாக மாரிவிடும் என்பதால் இந்த ஏற்பாடு.பின்னர் மூன்று மாதத்தில் ஏதோ ஒரு மாலைப்பொழுதிலோ அல்லது அதிகாலையிலோ தன் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு போலீஸ் மையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.கொலை,கொள்ளை,போதை மருந்து கண்டு பிடிப்பு என வகைப் பிரித்து ஒன்பது மாத பயிர்ச்சியை முடிக்கிறது போலீஸ் மோப்ப நாய். ஒரு வயதுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒன்பதாண்டுகாலம் அரசு ஊழியராக பணியாற்றும் இந்த நாய்களுக்கு பணிக்காலத்தில் ஊதியமென்று எதுவும் இல்லை.ஊதியம் வாங்கித்தான் அது என்ன செய்யும் குடும்பமா? குட்டியா?
நாய்களை மோப்ப நாய்களாக பழக்கப்படுத்துவது எப்படி? போதைப் பொருட்களை, வெடிகுண்டுகளை, கொள்ளையர்களை அது எப்படி கண்டு பிடிக்கிறது. என்றால் 220 மில்லியன் நுகர்ச்சி செல்களை தன் மூக்கில் கொண்டிருப்பதுதான் அதன் மோப்பத் திறனின் ரகசியம். மனிதனின் மோப்ப சக்தி இதை விட பல மடங்கு அதிகம். ஆனாலும் நமக்கு பிரவுன்சுகரின் சுவையோ கஞ்சாவின் வாசனையோ அந்தப் பழக்கம் இல்லாதவரை தெரியாது.
ஆனால் நாய்களுக்கு மட்டும் எப்படித் தெரிகிறது. ரத்தத்தின் வாசனை..பிரவுன்சுகர், கஞ்சாவின் வாசனை என்றால் எல்லா நாய்களுக்கும் அது தெரிவதில்லை சாதாரண நாய்கள் மல்லிகைப் பூவையும் கஞ்சாவையும் ஒன்றாகவே நுகரும். ஆனால் மோப்ப நாய்கள் கஞ்சாவை,அபினை,புரவுன்சுகரை தனித்தனியாக நுகரும் தன்மை கொண்டவை. ஆமாம் கஞ்சாவுக்கும் பிரவுன் சுகருக்கும் அபினுக்கும் இன்னும் உள்ள போதைப் பொருட்களுக்கும் பழக்கப்படுத்தப்படுகின்றன இந்த போலீஸ் மோப்ப நாய்கள். வெடிகுண்டை கண்டறிய நாய்களுக்கு ஜெலட்டின் குச்சிகளின் வாசனை பழக்கப்படுத்தப்படுகின்றன. மெல்ல கொல்லும் போதையை மனிதன் எப்படி பழகிய பிறகு தேடி வெறி கொண்டு ஓடுகிறானோ அதே வெறி மோப்ப நாய்களுக்கு ஊட்டப்படுகிறது.
தமிழக காவல்துறையில் ஜெர்மன்ஷெப்பர்ட்,லேப்ரடா ரெட் ரீவர்,டோபர்மேன் சிஞ்சர்,டூபர் சிஞ்சர்,கோல்டன் ரெட் ரீவர் என்ற அந்நிய நாய்கள் பயன் படுத்தப்படுகின்றன. நம்மூர் ராஜபாளையம் நாய் இப்போதெல்லாம் வட இந்தியா மார்வாடிகளின் வீடுகளில் காதுகளில் கம்மலோடும் மூக்கில் மூக்குத்தி போட்டும் காவல் காக்கிறதாம். போலீஸ் பயன்படுத்தும் நாய்களில் டோபர்மேன் சிஞ்சர், கொலை கொள்ளைகளில் துப்பறியவும், ஜெர்மன் ஷெப்பர்ட்,லேப்ரடா வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கவும்,கோல்டன் ரெட் ரீவர் போதை மருந்துகளை ஆயவும் பயன் படுத்தப்படுகிறது.ஆனால் எந்த போலீஸ் நாயும் கொலைகாரரையோ கொள்ளையரையோ துரத்திப் பிடித்து கவ்விக் கொண்டு வந்து கைகளில் கொடுப்பதில்லை. இரண்டரை அடி தூரத்தில் கொலை செய்தவர் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். மற்றபடி கொலை காரர் சென்ற திசை அவர் விட்டுச் சென்ற பொருட்கள் என கொலை நடந்த இடத்துக்குள் எது கிடந்தாலும் எடுத்துக் கொடுத்துவிடும்.
சில காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளிலும் இம்மாதிரி நாய்கள் வளர்க்கப்படுகிறதாம்.பழிவாங்கப்படும் சில கான்ஸ்டபிள்கள் உயரிதிகாரி வீட்டு நாயை கவனிப்பதற்கும் காய்கரி வாங்கி கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறார்கள்.அதிகாரி வீட்டு நாய்க்கு கிடைக்கும் மரியாதை இந்த காவலர்களுக்கு கிடைப்பதில்லை.
நாய்கள் நமது செல்லப் பிராணிகள் ஆனால் பன்றிகள்.அவைகள் சாக்கடைப் பிராணிகள். ஆனால் நாய்களை விட பல மடங்கு மோப்ப சக்தியுள்ளது பன்றி. ஜெர்மன் இத்தாலி போன்ற நாடுகளில் மோப்ப பணிக்கு பன்றிகளை பயன் படுத்த துவங்கிவிட்டார்கள். நாய்க்கு நன்றி உண்டு பன்றிக்கு உண்டா? என்றால் நாயை விட அதிகாமான நன்றியுணர்ச்சி பன்றிக்குத்தான் இருக்கும் ஏனென்றால் நுகர்ச்சியின் அளவைக் கொண்டே நன்றியை நாம் தீர்மானிக்கிறோம்.அப்படியானால் பன்றியையும் நாயையும் விட புலிக்கு அதிக நன்றி இருக்க வேண்டுமே என்று கேட்கிறார் ஒரு காவலதிகாரி காரணம் புலியின் நுகர்ச்சியளவு இந்த இரண்டையும் விட அதிகம். எப்படி இருந்தாலும் நுகர்ச்சியின் அளவைக் கொண்டு நன்றியை தீர்மானிக்க முடியாது என்றே தோன்றுகிறது. காரணம் மனிதனிடம் அது சுத்தமாக இல்லையே? நுகர்ச்சியளவுதான் நன்றியை தீர்மானிக்கும் என்றால் நன்றியுணர்வு மனிதனிடம் அல்லவா? அதிகம் இருக்க வேண்டும்.
தன் வாழ்வின் பெரும் பங்கு நாட்களை காக்கிச் சட்டைகளோடு கழித்து விட்டு தன் அந்திமக்காலத்தில் வீதிக்கு வரும் போது மோப்ப நாய்க்கு அது புது உலகம். தெருநாய்களை அது எதிர் கொள்ள முடியாமல் அஞ்சி நடுங்கி வெளியில் வாழ்க்கையை தீர்த்துக் கொள்கிறது. நாம் மேலே சாராயக்கடையில் சந்தித்த உஷாவின் கதையும் இப்படித்தான்.இவ்விதமாய் ஒரு போலீஸ் மோப்ப நாய் வாழ்ந்து மடிகிறது.தனது பணிக்காலத்திலிருந்து அது ஓய்வு பெறும் போது கவலர்கள் கண்னீர் சிந்துகிறார்கள்.இரக்க முள்ள ஒரு அதிகாரி அரசுக்கு பரிந்துறைத்ததன் பேரில் இப்போது தமிழக அரசு போலீஸ் மோப்ப நாய்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. கடைசி வரை அது அரசுப் பராமரிப்பிலேயே வாழ்கிறது. ஆமாம்! வாழக்கை முடிகிற நிம்மதியாக வாழட்டும் அந்த நாய்கள்.